கூகுளில் ஆண்டிற்கு ரூ.1.1 கோடி சம்பளத்தில் வேலை - சம்ப்ரீத்திக்கு கிடைத்த வாய்ப்பு!
தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பாட்னாவைச் சேர்ந்த சம்ப்ரீத்தி யாதவிற்கு கூகுள் நிறுவனத்தில் ஆண்டிற்கு 1.1 கோடி ரூபாய் சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சம்ப்ரீத்தி யாதவிற்கு ஆண்டிற்கு 1.1 கோடி ரூபாய் சம்பளத்துடன் கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.
சம்ப்ரீத்தி யாதவ் பீஹார் மாவட்டத்தின் பாட்னா பகுதியைச் சேர்ந்தவர். இவரது அப்பா ராமசங்கர் யாதவ் வங்கி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். சம்ப்ரீத்தியின் அம்மா சாஷி பிரபா திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறையில் உதவி இயக்குநராக உள்ளார்.
2014ம் ஆண்டு புகழ்பெற்ற நோட்டர் டேம் அகாடமியில் 10 CGPA பெற்று பத்தாம் வகுப்பை முடித்துள்ளார். டெல்லி இண்டர்நேஷனல் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்த பிறகு 2016-ம் ஆண்டு JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். சம்ப்ரீத்தி 2021-ம் ஆண்டு மே மாதம் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பிடெக் முடித்தார்.
Adobe, Flipkart உள்ளிட்ட நிறுவனங்களில் சம்ப்ரீத்திக்கு வேலை கிடைத்துள்ளது. தற்சமயம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இங்கு அவருக்கு தற்போது ஆண்டிற்கு 44 லட்ச ரூபாய் சம்பளம் கிடைக்கிறது.
இந்தச் சூழலில் கூகுள் நிறுவனத்தில் வேலைக்காக விண்ணப்பித்திருந்த சம்ப்ரீத்திக்கு வேலை கிடைத்துள்ளது. இங்கு மொத்தம் ஒன்பது சுற்றுகளாக நேர்காணல் நடைபெற்றுள்ளது. இந்த சுற்றுகள் அனைத்திலும் சம்ப்ரீத்தி தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு ஆண்டிற்கு 1.1 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சம்ப்ரீத்தி கூகுள் நிறுவனத்தில் சேர இருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐஐடி பாட்னாவில் இறுதியாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த தீக்ஷா பன்சாலுக்கு கூகுள் நிறுவனத்தில் ஆண்டிற்கு 54.57 லட்ச ரூபாயில் வேலை கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: DNAIndia | தமிழில்: ஸ்ரீவித்யா