'900 மில்லியன் பயனர்களை நோக்கி இந்திய இணையம்' - அறிக்கையில் தகவல்!
இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம், அண்மையில் வெளியிட்டுள்ள இந்தியாவில் இணையம் 2024 அறிக்கையின் படி, கிராமங்கள் உட்பட இந்தியாவில் தீவிர இணைய பயனாளிகள் எண்ணிக்கை 886 மில்லியனாக உள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி முன்னேறிச்செல்வதன் அடையாளமாக, வரும் ஆண்டில், நாட்டின் இணைய பயனாளிகள் எண்ணிக்கை 900 மில்லியனை எட்ட உள்ளது தெரிய வந்துள்ளது.
இணைய பயனாளிகள் வளர்ச்சிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாக, கிராமப்புற இந்தியா அமைகிறது. நகர்புறத்தை விட, இதன் வளர்ச்சி விகிதம் இரண்டு மடங்காக உள்ளது. நகரப்புற இணைய பயனாளிகளான 397 மில்லியனை விட, அதிக பயனாளிகளை கிராமப்புற பகுதிகள் (488 மில்லியன்), கொண்டுள்ள நிலையில், டிஜிட்டல் நுகர்வின் அடுத்த கட்டம் பெரு நகரங்களுக்கு வெளியே தீர்மானிக்கப்பட உள்ளது.
இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கம், மார்க்கெட்டிங் நிறுவனம் கான்டர் (Kantar) அண்மையில் வெளியிட்டுள்ள 'இந்தியாவில் இணையம் 2024' அறிக்கையின் படி, இந்தியாவில் தீவிர இணைய பயனாளிகள் எண்ணிக்கை 886 மில்லியனாக உள்ளது.
கிராமப்புற இணைய பயன்பாடு அதிகரித்து, நகரம்- கிராமம் இடையிலான நுகர்வு இடைவெளியை குறைத்துள்ளது. ஸ்மார்ட் போன், குறைந்த இணைய கட்டணம், அரசு டிஜிட்டல் திட்டங்கள் இதற்கு உதவியுள்ளன.
கேரளா, (72%), கோவா, (71%), மகாராஷ்ட்ரா (70%), ஆகிய மாநிலங்கள் இணைய பயன்பாடு அட்டவனையில் முன்னிலை வைக்கும் நிலையில், பீகார் (43%), உத்தரபிரதேசம் (46%), ஜார்கண்ட் (50%) பின் தங்கியுள்ளன.
- சராசரியாக இந்திய பயனாளிகள் இணையத்தில் நாள் ஒன்றுக்கு 90 நிமிடங்கள் செலவிடுகின்றனர்.
- சமூக ஊடகம், ஓடிடி, இசை மற்றும் வீடியோ சேவைகள், டிஜிட்டல் பரிவர்த்தனை, இ-காமர்ஸ் ஆகியவை பயன்பாட்டில் முன்னிலை வகிக்கின்றன.
- நகர்புற பயனாளிகள் நிதி செயல்பாடுகளில் அதிகம் ஈடுபடும் நிலையில், கிராமப்புற பயனாளிகள் பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
- இணைய பயனாளிகளில் 57 சதவீதம் பேர், உள்ளூர் மொழிகளில் உள்ளடக்கத்தை விரும்புகின்றனர். குரல் வழி சார்ந்த தகவல் தொடர்பும் அதிகரிக்கிறது. 140 மில்லியன் பயனாளிகள் அலெக்சா, கூகுள் அசிஸ்டெண்ட் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்துகின்றனர்.
- பாரம்பரிய தொலைக்காட்சி பாதிப்பை சந்தித்து வருகிறது. 286 மில்லியன் பயனாளிகள், டிஜிட்டல் மேடைகளில் உள்ளடக்கத்தை பெறுகின்றனர். இணைய வசதி கொண்ட டிவிகள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் இதற்கு வலு சேர்க்கின்றன.
இதனிடையே, டிஜிட்டல் காமர்ஸ் மாற்றம் கண்டு வருகிறது. ஆன்லைன் ஷாப்பிங் வலுவாக உள்ள நிலையில், சமூக ஊடகம் சார்ந்த வர்த்தகம் தேக்கம் அடைந்துள்ளது. டெலிவரியின் போது பணம் கொடுக்கும் வசதி மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கிராமப்புறம் மற்றும் பெண்கள் மத்தியில் இது அதிகம் உள்ளது.
இந்தியாவின் இணைய வளர்ச்சியை மீறி, இன்னும் 41 சதவீத மக்கள் (630 மில்லியன்) இணைய வசதிக்கு வெளியே உள்ளனர். விழிப்புணர்வு இல்லாதது, உள்ளூர் மொழிகளில் போதிய உள்ளடக்கம் இல்லாதது போன்றவை காரணங்கள். மொபைல் பயன்பாடு அதிகரித்தாலும், கிராமப்புறங்களில் பலரும் ஒரே போனை பகிர்ந்து கொள்ளும் நிலை உள்ளது.
ஆங்கிலத்தில்: சயான் சென், தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan