யூடியூப்பின் புதிய சிஇஓ-வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமனம்; யார் இந்த நீல்மோகன்?
சமூக வலைதளமான யூடியூப்பின் புதிய சிஇஓவாக இந்திய அமெரிக்கரான நீல்மோகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமூக வலைதளமான யூடியூப்பின் புதிய சிஇஓவாக இந்திய அமெரிக்கரான நீல்மோகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பலவற்றிலும் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண், ஆல்பாபெட் மற்றும் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகியோரது வரிசையில், தற்போது முன்னணி சோசியல் மீடியா தளமான யூடியூப்பில் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான நீல்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
யூடியூப் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த சூசன் பதவி விலகியதை அடுத்து யூடியூப்பின் தலைமை தயாரிப்பு அதிகாரியாக இருந்து வந்த நீல்மோகனுக்கு சிஇஓவாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சூசன் வோஜ்சிக்கி ராஜினாமா:
கூகுள் நிறுவனத்தின் ஆரம்பக் கட்டம் முதல் செர்கி பிரின், லேரி பேஜ் உடன் இணைந்து பணியாற்றி வரும் சூசன் வோக்சிக்கி, 2014ம் ஆண்டு முதல் யூடியூப் நிறுவனத்தின் சிஇஓவாக பணியாற்றி வந்தார். 25 ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்துடன் பயணித்து வரும் சூசன் வோஜ்சிக்கி, சொந்த புரோஜக்டில் கவனம் செலுத்துவதற்காகவும், குடும்பம் மற்றும் ஆரோக்கியம் மீது கவனம் எடுத்துக்கொள்ளவும் பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
யார் இந்த நீல்மோகன்?
1996ம் ஆண்டு நீல் மோகன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றுள்ளார். ஸ்டான்போர்ட் கிராஜுவேட் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் 2005ம் ஆண்டு எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். 2007ல் DoubleClick ஐ கையகப்படுத்தியதன் மூலம் கூகுளில் இணைந்த சூசன் வோஜ்சிக்கியின் உதவியாளராக இருந்தார்.
மோகன் 2015ல் யூடியூப்பில் தலைமை தயாரிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். யூடியூப் ஆரம்ப கட்டத்தில் கோலோச்சினாலும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், டிக்-டாக் போன்றவற்றின் வருகையால் வருவாயை இழக்கத் தொடங்கியது. அப்போது தலைமை தயாரிப்பு அதிகாரியாக பதவியேற்ற நீல்மோகன் ஷார்ட் வீடியோ, சப்ஸ்கிரிப்ஷன், மியூசிங் போன்ற அம்சங்களை அறிமுகப்படுத்தி யூடியூப்பின் மறுமலர்ச்சிக்கு துணைபுரிந்துள்ளார்.
யூடியூப் CFO பதவிக்கு முன்பு மார்ச் 2008 முதல் நவம்பர் 2015 வரை கூகுளின் டிஸ்ப்ளே மற்றும் வீடியோ விளம்பரப் பிரிவின் உயர் துணைத் தலைவராக இருந்துள்ளார். அதற்கு முன்னதாக இணைய விளம்பரச் சேவை நிறுவனமான டபுள் கிளிக்-யில் (DoubleClick) தயாரிப்பு மேம்பாட்டு பிரிவின் மூத்த துணைத்தலைவராக இருந்துள்ளார். இதற்கு முன்பாக இவர் ஆக்சென்சர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
ஸ்டிட்ச் ஃபிக்ஸ் மற்றும் ஜெனோமிக்ஸ் மற்றும் பயோடெக்னாலஜி நிறுவனமான 23அண்ட்மீ (23andMe) நிறுவனங்களின் தலைமை நிர்வாக குழுவிலும் இருந்துள்ளார். இந்த முக்கியமான பணியைத் தொடர உற்சாகமாக இருப்பதாகவும், புதிய எதிர்காலத்தை எதிர்நோக்குவதாகவும் நீல் மோகன் ட்வீட் செய்துள்ளார்.
“நன்றி சூசன் வோஜ்சிக், பல ஆண்டுகளாக உங்களுடன் பணியாற்றுவது மிகவும் அருமையாக இருந்தது. யூடியூப்பை படைப்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு அசாதாரண இல்லமாக மாற்றியுள்ளீர்கள். இந்த முக்கியமான பணியைத் தொடர நான் உற்சாகமாக இருக்கிறேன்,” எனப் பதிவிட்டுள்ளார்.
சம்பளம் எவ்வளவு?
கூகுள் யூடியூப் சிஇஓவாக பதவியேற்க உள்ள நீல்மோகனுக்கு ஆண்டுக்கு 7 பில்லியன் டாலர்கள் வரை சம்பளம் வழங்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக ட்விட்டர் நிறுவனம் இவரை பணியில் அமர்த்த முற்பட்டபோது, அதனை தடுக்க கூகுள் நிறுவனம் அவருக்கு 100 மில்லியன் டாலர்களை போனஸாக வழங்கியதாகக் கூறப்படுகிறது.
எனவே, யூடியூப்பின் சிஇஓவாக பதவி உயர்வு பெற்றுள்ள நீல்மோகனுக்கு மிகப்பெரிய தொகை சம்பளமாக வழங்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.