உலகின் முன்னணி சி.இ.ஓ. பட்டியலில் மூன்று இந்தியர்கள்...
உலகின் முன்னணி சி.இ.ஒ- கள் பட்டியலில் முதல் பத்து இடத்தில், மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி சத்யா நாதெள்ளா உள்ளிட்ட மூன்று இந்திய வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளனர்.
நிர்வாகவியல் துறையில் மதிப்பு மிக்க இதழாக கருதப்படும் ஹார்வர்டு பிஸ்னஸ் ரிவ்யூ, ஆண்டுதோறும் வர்த்தக உலகின் சிறந்த சி.இ.ஒ-கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, 2019ம் ஆண்டில் சிறந்த செயல்பாட்டை பெற்றுள்ள சி.இ.ஒ-கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகளின் செயல்பாடு அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் 100 சி.இ.ஒ.க்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் முதல் பத்து இடத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று சி.இ.ஒ.க்கள் இடம்பெற்றுள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான சத்யா நாதெள்ளா, அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஷாந்தனு நாராயண் மற்றும் மாஸ்டர்கார்டு தலைமை செயல் அதிகாரி அஜய் பங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஷாந்தனு நாரயண் 6வது இடத்திலும், பங்கா 7வது இடத்திலும், சத்யா நாதெள்ளா 9வது இடத்திலும் உள்ளனர். செயற்கை நுண்ணறிவு துறையில் பெரிதும் பயன்படுத்தப்படும் நவீன சிப்களை தயாரிக்கும் நிவிடா (NVIDIA) தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹாங் இந்த பட்டியலில் முதல் இடம் வகிக்கிறார்.
இந்தியாவைச் சேர்ந்த பியூஷ் குப்தா 89வது இடத்தில் உள்ளார். இவர், டிபிஸ் வங்கியின் தலைமை செயலதிகாரியாக இருக்கிறார். புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக், இந்த பட்டியலில் 62வது இடத்தில் உள்ளார்.
2015ம் ஆண்டு முதல் இந்த பட்டியலுக்கான பரிசீலனையில் நிதி அம்சங்கள் மட்டும் அல்லாது, சுற்றுச்சூழல் தாக்கம் உள்ளிட்ட அம்சங்களும் கணக்கில் கொள்ளப்படுவதாக ஹார்வர்டு பிஸ்னஸ் ரிவ்யூ இதழ் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்த பட்டியலில் முன்னணியில் இடம் பெற்றிருந்த, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் இந்த ஆண்டு பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் முதல் பத்து இடத்தில் உள்ள இந்திய வம்சாவளி சி.இ.ஒ-கள் பற்றிய அறிமுகம்:
ஷாந்தனு நாராயண்
முன்னணி மென்பொருள் நிறுவனங்களின் ஒன்றான அடோப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக விளங்கும், ஷாந்தனு நாராயன், ஆந்திர மாநிலத்தைச்சேர்ந்தவர். ஐதாரபாத்தில் பிறந்து வளர்ந்தவர், பொறியியல் பட்டம் பெற்ற பிறகு அமெரிக்காவில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
பின்னர் கம்ப்யூட்டர் துறையிலும் முதுகலை பட்டம் பெற்ற ஷாந்தனு, ஆப்பிள் நிறுவனத்தின் தன் தொழில் வாழ்க்கையைத் துவக்கினார். பிக்டரா எனும் நிறுவனத்தையும் துவக்கியவர், 1998ல் துணைத்தலைவராக அடோப் நிறுவனத்தில் இணைந்தார். அதன் பிறகு 2007ல் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தவர் தொடர்ந்து நிறுவனத்தை சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் நிர்வாக ஆலோசனை குழுவிலும் இவர் அங்கம் வகித்திருக்கிறார். பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.
அஜய் பங்கா
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவரான அஜய் பங்கா, பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர். 1981ல் நெஸ்லே நிறுவனத்தின் தொழில் வாழ்க்கையைத் துவங்கியவர், பெப்சிகோ, சிட்டி உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றிய பின் மாஸ்டர்கார்டு நிறுவனத்தில் சேர்ந்தார்.
2010ம் ஆண்டு மாஸ்டர்கார்டு நிறுவன தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு ஏற்றார். பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
சத்யா நாதெள்ளா
உலகின் நன்கறியப்பட்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக இருப்பவர் சத்யா நாதெள்ளா. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா, பொறியல் பட்டம் பெற்ற பின் அமெரிக்காவில் மேல் படிப்பை முடித்தார். கம்ப்யூட்டர் துறையில் முதுகலை பட்டம் மற்றும் எம்பிஏ பட்டம் பெற்றவர், சன் மைக்ரோசிஸ்டம் நிறுவனத்தின் பணியாற்றிய பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் கிளவுட் சேவை உள்ளிட்ட பிரிவுகளில் முக்கியப் பங்காற்றியவர், 2014ம் ஆண்டு நிறுவன சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு திறம்பட செயல்பட்டு வரும் சத்யா நாதெள்ளா அண்மைக் காலங்களில் மைக்ரோசாப்ட் நிறுவன வளர்ச்சிக்கு முக்கிய வழிகாட்டியாக கருதப்படுகிறார்.
தொகுப்பு: சைபர்சிம்மன்