இந்திய ஓடிடி ஸ்டிரீமிங் துறை 15 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக வளரும்!
அடுத்த பத்தாண்டுகளில் இந்திய ஸ்டிரீமிங் துறை 13 முதல் 15 பில்லியன் டாலர் மதிப்பும் கொண்டதாக வளரும் என தெரிய வந்துள்ளது.
இந்திய ஓடிடி ஸ்ட்ரீமிங் குறை அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டு அடிப்படையில் 22 முதல் 25 சதவீத வளர்ச்சி அடைந்து, 13 முதல் 15 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக உருவாகும் என ஊடகம், பொழுதுபோக்குத் துறை கூட்டறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
ஓவர் தி டாப் என குறிப்பிடப்படும் ஓடிடி துறை சீரான வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும், 40க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் மிகவும் போட்டி மிக்க பிரிவுகளிலும் ஒன்றாக இருப்பதாக, இந்திய தொழிலகக் கூட்டமைப்பு மற்றும் போஸ்டன் கன்சல்டிங் குருப் கூட்டறிக்கை தெரிவிக்கிறது.
குறைந்த செலவிலான அதிவேக மொபைல் இணைய வசதி, கடந்த ஆறு ஆண்டுகளில் இணைய பயனாளிகள் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்திருப்பது மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி ஆகிய வீடியோ ஸ்டிரீமிங் சேவை வளர்சிக்குத் தேவையான அடிப்படையான அம்சங்கள் பல பொருத்தமாக அமைந்துள்ளன.
மேலும், நெட்பிளிஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ போன்ற நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஏற்ற கட்டணத்தை அறிமுகம் செய்வதும் சாதகமாக அமைந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அமெரிக்காவை விட 70 முதல் 90 சதவீதம் மலிவான கட்டணத்தை அளித்து வருகின்றன.
இவைத்தவிர, இந்தப் பிரிவில் இந்திய மூல உள்ளடக்க உருவாக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் பயனாளிகள் பார்ப்பதற்கான உள்ளடக்கமும் அதிகரித்துள்ளது. இந்த காரணங்களினால் அடுத்த பத்தாண்டுகளில் இந்திய ஸ்டிரீமிங் துறையில் நல்ல வளர்ச்சி காணப்படும் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. பல திரைப்படங்கள் ஓடிடி மேடையில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.