இந்தியாவில் ஹைப்பர்லூப் திட்டத்துக்கு ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்த இந்தியன் ரயில்வே!
இந்தியாவில் ஹைப்பர்லூப் திட்டத்துக்கு ஐஐடி மெட்ராஸ் உடன் இந்தியன் ரயில்வே கூட்டு சேர்ந்திருக்கிறது.
2017 ஆம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப அறிமுகம் குறித்த பேச்சுவார்த்தை இருந்து வருகிறது. காரணம் 2017 ஆம் ஆண்டில் ஹைப்பர் தொழில்நுட்பம் மீதான ஆர்வத்தை அப்போதைய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
அந்த சூழ்நிலையில் இருந்தே இந்தியாவில் ஹைப்பர்லூப் திட்டம் அறிமுகத்துக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியாவில் ஹைப்பர்லூப் திட்டம் தொடங்குவதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஹைப்பர்லூப் ஒன் நிறுவனத்துக்கும் இந்திய ரயில்வே அமைச்சகத்துக்குமான பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதில் ஒரு சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.
இருப்பினும் விமானத்துக்கு இணையான வேகத்தில் மக்கள் பயணிக்கவும் பொருட்களை கொண்டு செல்லவதற்குமான ஹைப்பர்லூப் திட்டத்தில் இந்தியா உறுதியாக இருக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக ஐஐடி மெட்ராஸ் உடன் இந்தியன் ரயில்வே இணைந்திருக்கிறது.
ஐஐடி மெட்ராஸை சேர்ந்த 70 மாணவர்கள் மூலம் 2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட குழு "அவிஷ்கர் ஹைப்பர்லூப்". இந்த குழுவானது SpaceX Hyperloop Pod Competition 2019-ல் நடைபெற்ற சர்வதேச ஹைப்பர்லூப் போட்டியில் டாப் 10 இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஐஐடி மெட்ராஸ் உடன் ரயில்வே அமைச்சகம் கூட்டு சேர்ந்திருக்கிறது. உள்நாட்டு ஹைப்பர்லூப் அமைப்பின் மேம்பாட்டுக்காக சென்னை ரயில்வே தற்போது ஐஐடி மெட்ராஸ் உடன் கூட்டு சேர்ந்திருக்கிறது.
ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் முன்மாதிரி ஹைப்பர்லூப் சோதனையை நடத்த இந்த குழு ரயில்வே அமைச்சகத்தை அணுகியது. மேலும், இந்த திட்டத்துக்கான செலவு ரூ.8.34 கோடி வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கான செலவு கணிக்கப்பட்டதை விட அதிகமாகும் என ரயில்வே அறிக்கை தெரிவித்திருக்கிறது.
ஹைப்பர்லூப்; தரைக்கு அடியிலோ அல்லது மேம்பாலம் அமைத்தோ காற்றில்லா பெரிய குழாய் உருவாக்கி அதன் மூலம் மேற்கொள்ளப்படும் பயணமாகும். காந்த விசையால் இதில் வாகனம் பயணிக்கும்.
தற்போது சோதனை திட்டத்தில் 500 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் விட்டமும் கொண்ட ஹைப்பர்லூப் குழாய் உருவாக்கப்பட இருக்கிறது. இது அமெரிக்காவின் விர்ஜின் ஹைப்பர்லூப் வசதிக்கு இணையாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
குறைந்த அழுத்தம் கொண்ட குழாய் அமைத்து காந்த எலிவிட்டேஷன் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹைப்பர்லூப் செயல்படுகிறது. காந்த எலிவிட்டேஷன் எனப்படுவது காந்தத்தின் மூலம் இழுக்கும் சக்தி ஆகும்.
அதேபோல் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் இந்தியாவை கார்பன் நடுநிலையாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஹைப்பர்லூப் திட்டத்துக்கு என ரயில்வே அமைச்சகம் உள்நாட்டு ஐஐடி மெட்ராஸ் உடன் கூட்டு சேர்ந்துள்ளது பலரின் வரவேற்பை பெற்றிருக்கிறது.