‘ஆன்லைனில் காதல் வர அதிக வாய்ப்பு’; 72% இந்திய சிங்கிள்கள் கருத்து- டேட்டிங் பற்றிய ஆய்வில் தகவல்!
சிங்கிளாக இருக்கும் இந்தியர்களில் 72% பேர் ஆன்லைனில் சந்திக்கும் ஒருவருடன் காதல் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளனர் என டேட்டிங் செயலியான பம்பிள் தெரிவித்துள்ளது.
பெண்கள் முதல் நகர்வை மேற்கொள்ள வழி செய்யும் டேட்டிங் செயலியான பம்பிள் (Bumble), கொரோனா சூழல், குறிப்பாக இரண்டாம் அலையில், தனியாக இருக்கும் இந்தியர்கள் டேட்டிங் செய்யும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
டேட்டிங்கில் எதிர்மறை அனுபவம் குறைந்திருப்பதாக 74 சதவீதம் பேர் தெரிவித்திருப்பதாகவும், டேட்டிங் தொடர்பான நோக்கம் மற்றும் எதிர்பார்ப்பில் தெளிவான தகவல் தொடர்பு அதிகரித்திருப்பதாக 54 சதவீதம் கூறியுள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்தி, பொருளாதார நோக்கிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு துறைகள் கொரோனா சூழலை எதிர்கொள்ளும் வகையில் மாற்றத்திற்கும் உள்ளாகி வருகின்றன.
இந்நிலையில், பெண்கள் முதல் நகர்வை மேற்கொள்ள வழி செய்யும் டேட்டிங் செயலியான ’பம்பிள்’ நடத்திய ஆய்வில் கொரோனா சூழலில் இந்தியர்கள் டேட்டிங் செய்யும் விதத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்திருப்பதாகத் தெரிவிக்கிறது.
இந்தியாவில் இளம் வயதினர் மத்தியில் தடுப்பூசி திட்டம் அமல் செய்யப்படும் நிலையில், ஆய்வில் பங்கேற்ற டேட்டிங் ஆர்வலர்களில், 33 சதவீதம் பேர், 2021ல் டேட்டிங்கில் அதிக நம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
லாக்டவுன் தாக்கம்
பொதுமுடக்கக் காலம், தாங்கள் டேட்டிங்கில் எதிர்பார்ப்பது என்ன என்பதில் கவனம் செலுத்தி, புதியவர்களை சந்திக்கும் போது, தங்கள் டேட்டிங் வாழ்க்கையை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதற்கான தெளிவைக் கொடுத்திருப்பதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மேலும், முன்பை விட பலரும் விரும்பி டேட்டிங் செய்வதாகவும், உறவில் தாங்கள் எதிர்பார்ப்பது குறித்து மேலும் நேர்மையாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் டேட்டிங்கில் எதிர்மறையான அனுபவங்கள் குறைந்திருப்பதாகவும் 74 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் தெரிய வந்துள்ள, இந்திய டேட்டிங் சூழல் தொடர்பான மேலும் சுவாரஸ்யமான விஷயங்கள் வருமாறு:
● எதிர்கால உறவில் தங்களுக்கு என்ன தேவை என்பதில் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை என நான்கில் ஒருவர் கூறியுள்ளனர்.
● டேட்டிங் நோக்கம், எதிர்பார்ப்பு தொடர்பான தகவல் தொடர்பு தெளிவு அதிகரித்துள்ளதாக 54 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
● தனியாக இருக்கும் இந்தியர்களில் 48% பேர், ஒருவரின் தோற்றத்தைவிட ஆளுமைக்கான முக்கியத்துவம் டேட்டிங்கில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
● பெருந்தொற்று காலத்தில் டேட்டிங் செய்வதில் அழுத்தம் குறைந்துள்ளதாக மூன்றில் ஒருவர் கூறியுள்ளனர்.
● தனியாக இருக்கும் இந்தியர்களில் 37% பேர் டேட்டிங்கில் கேட்பிஷிங் போலி ஆன்லைன் அடையாளத்தால் ஈர்ப்பது) செயல்பாடு குறைந்துள்ளதாக கூறியுள்ளனர்.
● சிங்கிளாக இருக்கும் இந்தியர்களில் 72% பேர், நேரில் சந்தித்திராமல், ஆன்லைனில் சந்திக்கும் ஒருவருடன் காதல் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பிக்கை கொண்டுள்ளனர்.
● இந்தியாவில் மெய்நிகர் டேட்டிங் இயல்பானது என 45% சிங்கிள்கள் தெரிவித்துள்ளனர். இது பணத்தையும், நேரத்தையும் மிச்சமாக்குகிறது.
●31 சதவீதம் பேர், கொஞ்சம் மேக்கப் செய்த நிலையிலேயே வீடியோ டேட்டிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆன்லைனில் சந்தித்த ஒருவரை நேரில் சந்திக்கத் தீர்மானிக்கும் முன் மெய்நிகர் டேட்டிங்கில் ஈடுபடுவது பாதுகாப்பனது என பலரும் கருதுவதுடன், 2021ல் 31 சதவீதம் பேர் முதல் டேட்டிங் முயற்சியாக வீடியோ டேட்டிங்கை மேற்கொண்டுள்ளனர். பலரும், முதல் முறை ஒருவரை சந்திக்கும் போது, நேரில் சந்திப்பதை விட மெய்நிகர் டேட்டிங் பாதுகாப்பானது என உணர்வதாகக் கூறியுள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை பாதிப்புக்கு பின், பெரும்பாலான இந்தியர்கள் மத்தியில் பாதுகாப்பு முன்னுரிமை பெற்றுள்ளது மற்றும் ஒருவரை முதலில் சந்திக்கும் முன் தடுப்பூசி நிலை குறித்து கேட்டறியும் போக்கும் அதிகரித்துள்ளது. 38 சதவீதம் பேர், டேட்டிங் செய்ய தடுப்பூசி முக்கியம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கேற்ப பம்பிள் தனது செயலியில், கோவிட் முன்னுரிமை எனும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. டேட்டிங் செயலியில் பொருத்தம் ஏற்பட்ட பிறகு, இந்த வசதி மூலம், மற்றவர்களின் டேட்டிங் முன்னுரிமை தொடர்பான அம்சங்களை தெரிந்து கொள்ளலாம்.
“சிங்கிளாக இருக்கும் இந்தியர்கள் புதிய டேட்டிங் உலகை எதிர்கொள்ளும் நிலையில், கொரோனா சூழல் டேட்டிங் தேர்வுகளில் அர்த்தம் உள்ள மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. பொதுமுடக்கத்தில் மக்கள் செலவிட்ட காலம், டேட்டிங்கில் தாங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதில் கவனம் செலுத்த வாய்ப்பாக அமைந்துள்ளது,” என பம்பிள் இந்தியா தகவல் தொடர்பு இயக்குனர் சமர்பிதா சமத்தார் கூறியுள்ளார்.
“மெய்நிகர் தன்மை மற்றும் நேரில் புதிய டேட்டிங் விதிகளை எதிர்கொள்ளும் நிலையில்,தங்கள் டேட்டிங் வாழ்க்கையை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதில் புதிய தெளிவு மற்றும் நம்பிக்கை உண்டாகி இருக்கிறது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டேட்டிங் அறிமுக பகுதியில் 150 புதிய ஆர்வ பேட்ஜ்கள் அறிமுகம், வீடியோ சேட்டில் கேமில் ஈடுபடும் நைட் இன் உள்ளிட்ட அம்சங்களை பம்பிள் அண்மை காலத்தில் அறிமுகம் செய்துள்ளது.