கொரோனா வைரசால் 25ஆயிரம் பேர் பலி, 1.54லட்சம் பேருக்கு தொற்று: லீக் செய்த டென்சென்ட் அறிக்கை!
இந்த நோய்தொற்று பரவாமல் தடுக்கும் முயற்சியில் தனிநபர்களும் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்திருப்பதாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான எண்ணிக்கையைக் காட்டிலும் உண்மையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கலாம் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி வூஹான் நகரில் இந்த வைரஸ் தாக்கத்தால் 560 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மேலும் 28,000 பேருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வைரஸ் தாக்கம் மிகவும் மோசமானது என்று சமீபத்திய ’தாய்வான் நியூஸ்’ அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்கெனவே 24,589 பேர் உயிரிழந்திருப்பதாக ’டென்செண்ட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் 300 மடங்கு அதிகம். அத்துடன் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,54,023 எனவும் ’டென்செண்ட்’ வலைதளம் குறிப்பிட்டுள்ளது. இதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாகும்.
அதுமட்டுமின்றி 79,808 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் 269 பேர் குணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் 300 பேர் குணமாகியிருப்பதாகவே அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
டென்செண்ட் நிறுவனம் இந்தத் தரவுகளை ’எபிடெமிக் சிசுவேஷன் ட்ராக்கர்’ என்கிற தலைப்பில் அந்நிறுவனத்தின் வலைதளத்தில் பகிர்ந்துகொண்டிருப்பதாக ’தாய்வான் நியூஸ்’ தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை உண்மையான சீன நிலவரத்தை சுட்டிக்காட்டுவதாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
’டென்செண்ட்’ இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே அதன் வலைதளத்தில் சீன அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கைகளையும் அப்டேட் செய்துள்ளது.
இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது முதலில் 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி சீனாவின் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. அப்போதிருந்து இந்த வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகளவில் பயணம் மற்றும் வர்த்தக ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நோய்தொற்று பரவாமல் தடுக்கும் முயற்சியில் பலர் உதவி வருகின்றனர். நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளுக்காக உலகளவில் பல்வேறு நிறுவனங்களும் மிகப்பெரிய தொழில்முனைவோர்களும், தொழிலதிபர்களும் முன்வந்து நன்கொடை அளித்து வருகின்றனர்.
உதாரணத்திற்கு அலிபாபா நிறுவனர் ஜாக் மா போன்ற தனிநபர்கள் உதவியுள்ளனர். பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை, சீன தொழில்நுட்ப நிறுவனமான ByteDance, Tencent, Huawei போன்ற நிறுவனங்களும் இந்த நோய் தடுப்பு முயற்சியில் பங்களித்துள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: சுட்ரிஷ்னா கோஷ் | தமிழில்: ஸ்ரீவித்யா