டெஸ்லா ஆட்டோபைலட் குழுவின் முதல் ஊழியர் அசோக் எள்ளுசாமி: பெருமிதம் கொண்ட எலன் மஸ்க்!
டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோபைலட் குழுவிற்கு முதல் ஊழியராக நியமிக்கப்பட்டவர் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அசோக் எள்ளுசாமி என்று டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களைத் தேர்வு செய்ய சமூக ஊடகத்தை பயன்படுத்தி வரும் டெஸ்லா நிறுவனர் மற்றும் சி.இ.ஓ எலன் மஸ்க், தங்கள் நிறுவன மின்வாகனத்தின் ஆட்டோபைலெட் குழுவில் முதல் ஊழியராக நியமனம் செய்யப்பட்டது இந்திய வம்சாவளியைச்சேர்ந்த அசோக் எள்ளுசாமி (Ashok Elluswamy) என்று தெரிவித்துள்ளார்.
"டெஸ்லா ஆட்டோ பைலெட் குழுவை உருவாக்குகிறது என வெளியிடப்பட்ட டிவீட்டை அடுத்து முதல் ஊழியராக நியமிக்கப்பட்டவர் அசோக்,” என எலன் மஸ்க் தனது வீடியோ நேர்காணலுக்கான் பதில் குறும்பதிவில் தெரிவித்துள்ளார்.
அசோக், ஆட்டோபைலட் பொறியியலின் தலைமை பதவியில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
"Andrej ஏ.ஐ இயக்குனராக இருக்கிறார். மக்கள் பொதுவாக எனக்கு அதிகம் பெருமையை அளிக்கின்றனர். ஆண்ட்ரெஜ்ஜிக்கும் அதிக பாராட்டை வழங்குகின்றனர். டெஸ்லா ஆட்டோபைலட் ஏஐ குழு உலகின் திறமைவாய்ந்த குழு. உலகின் சிறந்த அறிவாளிகள் பலர் அதில் உள்ளனர்,” என்று எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அசோக் எள்ளுசாமி யார்?
டெஸ்லாவில் இணைவதற்கு முன், அசோக் எள்ளுசாமி, வோக்ஸ்வேகன் மின்னணு ஆய்வகத்திலும், WABCO வாகனக் கட்டுப்பாடு அமைப்பிலும் பணியாற்றியுள்ளார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு பொறியியலில் பட்டம் பெற்றவர் பின்னர் கார்னகி மெலன் பல்கலையில் ரோபோடிக்ஸ் அமைப்பில் முதுகலை பட்டம் பெற்றார்.
மக்களின் வாழ்க்கை மீது நேரடி தாக்கம் செலுத்தக்கூடிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆர்வம் உள்ள ஏ.ஐ பொறியாளர்களை நியமிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளதாக எலன் மஸ்க் தனது அண்மை குறும்பதிவில் தெரிவித்திருந்தார்.
இதற்கான வேலைவாய்ப்புக்கான விண்ணப்பமும் எளிமையாக இருந்தது. ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் விவரங்களை தெரிவித்து, மென்பொருள் பணிகள், ஏ.ஐ திறன் தொடர்பான தகவல்களை சமர்பிக்க வேண்டும். பிடிஎப் கோப்பாக விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.
செய்தி- பிடிஐ