'இந்தியாவின் இரத்த மனிதர்' - 58 வயதில் 174 முறை ரத்தம் கொடுத்த ஷபீரின் சாதனையும் வேதனையும்!
58 வயதில் 174 முறை ரத்த தானம்!
மத்திய காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரத்தைச் சேர்ந்த 58 வயதான பேப்பியர்-மச்சே எனப்படும் ஓவிய கலைஞர் ஷபீர் கான். இவர் தான் தற்போதைய இந்தியாவில், அதிகமுறை இரத்தத் தானம் செய்தவர்.
ஸ்ரீநகரின் காமங்கர்போரா கடி பகுதியில் வசிக்கும் ஷபீர் உசேன் கான் இதுவரை, அதாவது 41 ஆண்டுகளாக 174 பைண்ட் ரத்தத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். இன்றும், எப்போது கேட்டாலும் தேவைப்படுபவர்களுக்கு இரத்த தானம் செய்யத் தயாராக இருக்கிறார். அவர் தனது இரத்தத்தை தானம் செய்த முதல் தருணம் குறித்து யுவர்ஸ்டோரி இடம் பகிர்ந்து கொண்டதில்,
“எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. 1980 ஜூலை 4 ஆம் தேதி என் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, வெளியே ஒரு சலசலப்பைக் கேட்டேன். கால்பந்து விளையாடும் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயம் அடைந்து நிறைய இரத்தத்தை இழந்தார். அப்போது தான் முதன்முதலில் ரத்த தானம் செய்தேன். எந்தவொரு போக்குவரத்து வசதியும் இல்லாமல், ரத்த தானம் செய்ய கால்நடையாக மருத்துவமனைக்கு விரைந்தேன்," என்றுள்ளார்.
முதல்முறையாக அன்றைய தினம் ரத்த தானம் செய்யும் போது மிகவும் பதட்டத்தில் இருந்துள்ளார். அதன்பிறகு ஒருபோதும் அதுபோன்ற எந்த பதற்றத்தையும் ஷபீர் எதிர்கொள்ளவில்லை, இப்போது அது அவருக்கு மிகவும் சாதாரணமாகிவிட்டது.
"காஷ்மீரின் இரத்த மனிதர்" என்று அழைக்கப்படும் ஷபீர் உசேன், தனது 174 வது பைண்ட் ரத்தத்தை 20 ஜூன் 2021 அன்று ஸ்ரீநகரில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் வழங்கினார். அவர் வருடத்திற்கு நான்கைந்து முறை இரத்த தானம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
காஷ்மீரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும், குறிப்பாக ஒடிசா, புது தில்லி, தமிழ்நாடு, ஆந்திரா, ஜம்மு மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஷபீர் கான் இரத்த தானம் செய்துள்ளார். 2004 ஆம் ஆண்டில், சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தங்கி சேவைகளையும் செய்துள்ளார். யார் வேண்டுமானாலும் கொடுக்கக்கூடிய மிக அருமையான பரிசு ரத்தம் என்பது ஷபிரின் நம்பிக்கை.
ரத்தத் தானம் செய்வதோடு நிற்காமல், இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினராக இருக்கும், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் 2,300 உறுப்பினர்களைக் கொண்ட தன்னார்வ இரத்த தானம் செய்பவர்களின் குழுவுக்கு தலைமை தாங்கி வருகிறார்.
மக்களை ஊக்குவிப்பதற்கும், நன்கொடை முகாம்களை நடத்துவதற்கும், போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரங்களை நடத்துவதற்கும் இந்த குழு இரத்த தானம் ஊக்குவிக்கும் திட்டங்களை ஏற்பாடு செய்துவருகிறது.
“இரத்த தானம் செய்தால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இரத்தம் என்பது நீங்கள் சந்தையில் வாங்கக்கூடிய ஒன்றல்ல. காஷ்மீர் போன்ற மோதல்களால் பாதிக்கப்பட்ட இடத்தில் அதன் முக்கியத்துவம் உணரப்படுகிறது, அங்கு பலத்த சேதங்கள் காரணமாக இரத்த வங்கிகள் கூட சில நேரங்களில் பாதிக்கப்படுகின்றன.
விபத்துக்குள்ளானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் இரத்தம் தேவைப்படும் மற்றவர்களுக்கு மருத்துவமனைகளில் இரத்தத்தின் தேவை மிக அதிகமாக உள்ளது. எனவே மதம், பகுதி, சாதி எதுவாக இருந்தாலும் மக்கள் உயிரைக் காப்பாற்ற மக்கள் முன்வந்து இரத்த தானம் செய்ய வேண்டும். நான் அதை அல்லாஹ்வுக்காகவும் மனிதகுலத்துக்காகவும் நன்கொடை செய்கிறேன். அதை நான் தொடர்ந்து செய்வேன்.
65 வயதைத் தாண்டும் வரை எனது இரத்த தானம் தொடரும். எல்லோரும் முன் வந்து இரத்த தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று மக்களுக்கு கோரிக்கை விடுக்கிறார் ஷபீர். தொடர்ந்து பேசியவர்,
“சமீபகாலமாக உலகை வதைக்கும் கொரோனா இரத்த பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. தொற்றுநோய்க்கு முன்பு, பத்து பேர் இரத்த தான முகாமுக்கு வருவார்கள். இப்போது மூன்று பேர் மட்டுமே வருகிறார்கள். வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்ற பயத்தினால் மற்றவர்கள் முன்வருவதில்லை," என்று வேதனை தெரிவிக்கும் ஷபீர் ரத்த தானத்திற்காக பல பாராட்டுகளை பெற்றுள்ளார்.
டஜன் கணக்கான பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றிருப்பதோடு, 1988 ஆம் ஆண்டில் நோபல் அமைதி பரிசு பெற்ற அன்னை தெரசாவால் கொல்கத்தாவுக்கு அழைக்கப்பட்டு அவரிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றிருக்கிறார்.
இப்படி பல பாராட்டுகளை பெற்றாலும், ஷபீரின் சொந்த வாழ்க்கை சோகங்கள் நிறைந்தது. ”நான் ஒரு பேப்பியர்-மச்சே கலைஞன், ஆனால் யாரும் இனி பேப்பியர்-மச்சே தயாரிப்புகளை வாங்குவதில்லை. நான் முழுமையான வறுமையில் வாழ்கிறேன், உயிர்வாழ வேறு ஏதாவது தேடுகிறேன். தாயின் மருத்துவச் செலவினங்களுடன், நான் வாங்கும் அற்ப தொகையில் உயிர்வாழ்வது கடினம். நீங்கள் சமுதாயத்திற்கு இவ்வளவு கொடுத்திருக்கும்போது, அதற்கு பதிலாக உங்களுக்கு ஏதாவது தேவைப்படும்போது, யாரும் உதவி செய்வதில்லை," என்று சோகங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழும் ஷபீர் ரத்த தானம் செய்வதற்காகவே திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். இப்போது நோய்வாய்ப்பட்ட அவரின் தாய், சகோதரர் மற்றும் வளர்ப்பு மகளுடன் வசித்து வருகிறார்.
கட்டுரை: இர்பான் அமின் மலிக் | தமிழில்: மலையரசு