கடந்த 40 ஆண்டுகளில் 151 முறை ரத்த தானம் செய்துள்ள மிதானி!
“ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதைவிட சிறந்த பணி எதுவும் இல்லை.”
"ரத்த தானம் செய்ய மருத்துவமனை செல்கையில் என்னுடைய நரம்பில் ஊசியை செலுத்தும்போதும் ஹோல்டரில் கிளாஸ் ட்யூப் வைக்கும்போதும் நான் கவலைப்படுவதில்லை. கடந்த ஆண்டு நான் 151-வது முறையாக ரத்த தானம் செய்தேன். கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு மூணு மாதத்திற்கும் ஒரு முறை ரத்த தானம் செய்து வருகிறேன்,” என்று யுவர்ஸ்டோரி உடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் ஜோதிந்திர மிதானி.
ரத்த தானத்திற்கான தேவை அதிகம் இருக்கும் இந்தியா போன்ற நாட்டில் மிதானி மில்லியன் கணக்கானோருக்கு வழிகாட்டுகிறார்.
2016-17 ஆண்டுகளில் இந்தியாவில் 1.9 மில்லியன் யூனிட் அளவு (60 டேங்கர்களுக்கு சமமானது) ரத்தத்திற்கான பற்றாக்குறை இருப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த ரத்த அளவானது 3,20,000-க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சைகளுக்கோ அல்லது 49,000 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கோ பயன்படக்கூடியது என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவிக்கிறது.
2015-16 ஆண்டுகளில் 35 டேங்கர்களாக (1.1 மில்லியன் யூனிட்கள்) இருந்த பற்றாக்குறை அளவானது அதிகரித்துள்ளது.
ரத்த தானம் செய்வதில் ஆர்வம்
1977-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடந்த பின்னர் இந்திய ராணுவத்திற்காக ரத்த தானம் செய்யவேண்டும் என்கிற அறிவிப்பை வானொலியில் கேட்டபோதுதான் மிதானிக்கு ரத்த தானம் செய்யவேண்டும் என்கிற ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
"ரத்தம் தேவை என்று கேள்விப்பட்ட உடனே ரத்த தானம் செய்ய அந்த இடத்திற்கு விரைந்தேன். அப்போதிருந்து ரத்த தானம் செய்வதை வாழ்க்கையின் முக்கிய நோக்கமாகக் கொண்டு தொடர்ந்து ரத்தம் கொடுத்து வருகிறேன்,” என்றார் ஜோதிந்திர மிதானி. இவரது ரத்த வகை A+.
மும்பையின் மிரா ரோடு பகுதியைச் சேர்ந்த மிதானி அப்போதிருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்து வருகிறார். அடிக்கடி ரத்த தானம் செய்தால் ரத்த சோகை ஏற்படும் என்று கூறி ஆரம்பத்தில் அவரது பெற்றோர்களும் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் மிதானி அவர்களை சம்மதிக்க வைத்தார்.
“ரத்த தானம் செய்தால் ரத்த சோகை ஏற்படும் என்பது தவறான நம்பிக்கை என்றும் ரத்த தானம் செய்வதால் ரத்தத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படும் என்றும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் இதன் நன்மைகளை எடுத்துரைத்தேன்,” என்றார்.
எண்ணற்ற உயிர்களை காப்பாற்றினார்
பங்கு தரகு நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் மிதானி மும்பை முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் ரத்த தானம் செய்துள்ளார். விலே பார்லேவில் உள்ள நானாவதி மருத்துவமனையில் 54 முறையும் கிர்கான் பகுதியில் உள்ள சர் ஹெச் என் ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் 45 முறையும் ரத்த தானம் செய்துள்ளார்.
மிதானி தொடர்நது ரத்த தானம் செய்து வருவதால் அவரது பகுதியில் அவர் மிகவும் பிரபலம். இதனால் ரத்தம் தேவைப்படும்போது அறிமுகமில்லாத பலரும் இவரைத் தொடர்பு கொள்வதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
“ஒரு முறை அறிமுகமில்லாத நபர் ஒருவர் என்னுடைய வீட்டு வாசலில் நின்றிருந்தார். அவரது அம்மாவின் உடல்நிலை மோசமாக இருப்பதால் ரத்த தானம் செய்யுமாறு கேட்டார். A+ ரத்த வகையை பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே நான் சஞ்சீவனி மருத்துவமனைக்கு விரைந்தேன். இரண்டு மணி நேரம் கால தாமதமாகியிருந்தலும் அவரது அம்மாவை உயிருடன் மீட்டிருக்கமுடியாது என மருத்துவர் தெரிவித்தார்,” என்று மிதானி நினைவுகூர்ந்தார்.
2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதல் சம்பவத்தின்போது சுமார் 700 பேர் காயமடைந்தனர். மிதானி உடனடியாக செயலில் இறங்கினார்.
“ஒருவரின் உயிரைக் காப்பாற்றுவதைவிட சிறந்த பணி எதுவும் இல்லை. சரியான நேரத்தில் ரத்த தானம் செய்வது உயிர்காக்க உதவும். 26/11 மும்பை தாக்குதல் சமயத்தில் ரத்தத்திற்கான தேவை இருப்பதை அறிந்ததும் நான் பரேல் பகுதியில் உள்ள கேஈஎம் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களுக்கு ரத்த தானம் செய்தேன்,” என்றார் மிதானி.
இந்தியாவில் ரத்தத்திற்கான தேவை அதிகம் உள்ளது. இங்கு 1.9 மில்லியன் யூனிட்கள் அளவில் ரத்த பற்றாக்குறை நிலவுகிறது. இந்த அளவானது 3,27,187 இதய அறுவைசிகிச்சைகள், 49,078 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், விபத்தால் பாதிக்கப்பட்ட 39,262 பேருக்கான சிகிச்சை, 98,156 எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றிகு பயன்படக்கூடியது என்று 2018-ம் ஆண்டில் புனே பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள சஞ்சய்நகர் லயன்ஸ் கிளப் தலைவர் அல்ஃபோன்ஸ் குரியன் சமூக வலைதளங்களில் ரத்த தானத்தை ஊக்குவித்து வருகிறார். பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொண்டுள்ளார். இன்றைய காலகட்டத்தில் ரத்த தானம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்.
“ரத்த தானம் செய்வதைப் பொறுத்தவரை பல்வேறு தடங்கல்கள் உள்ளன. ரத்தத்திற்கான தேவை இருப்பதை அறிந்தும் சிலர் ரத்த தானம் செய்ய முன்வருவதில்லை. தொடர்ந்து ரத்த தானம் செய்து வருபவர்களை நான் பாராட்டுகிறேன்,” என்றார் அல்ஃபோன்ஸ்.
ரத்தத்திற்கான தேவை அதிகம் இருப்பினும் மிதானி போன்ற சிலரே தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகின்றனர்.
“என்னுடைய முயற்சியின் மூலம் ரத்தம் தேவைப்படும் நபர் மட்டுமல்லாது அவரைச் சார்ந்துள்ள பலரின் வாழ்க்கையும் பாதுகாக்கிறேன்,” என்றார்.
ஆங்கில கட்டுரையாளர்: ரோஷ்னி பாலாஜி | தமிழில்: ஸ்ரீவித்யா