5 நாட்களில் வீடு கட்டலாம்: நாட்டின் முதல் '3டி வீடு' உருவாக்கிய ஐ.ஐ.டி மெட்ராஸ்!
ஐந்து நாட்களில் ஒரு புதிய வீட்டைக் கட்டலாம்!
நாட்டின் முதல் 3டி வீடான ‘டுவாஸ்டா’ ஐ.ஐ.டி மெட்ராஸ் ஸ்டார்ட் அப்-ஆல் அதே வளாகத்தில் கட்டப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
600 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீட்டில் ஒரு படுக்கையறை, ஒரு ஹால், மற்றும் ஒரு சமையலறை உள்ளது. இந்த வீடு முழுவதும் மென்பொருளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் கான்கிரீட் 3டி பிரின்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்டுள்ளது.
வழக்கமான முறையில் நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு வீடு கட்டுவதை விட, இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஐந்து நாட்களில் ஒரு புதிய வீட்டைக் கட்டலாம். இந்த முறையில், கான்கிரீட்டின் பச்சை தன்மை, வழக்கமான முறையில் 21 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் காய்வதை விட, சீக்கிரமே ஒருசில நிமிடங்களில் காய்ந்து விடும்.
இந்த தொழில்நுட்பம் நிஜ வாழ்க்கை கட்டமைப்புகளை உருவாக்க தானியங்கி உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தி கட்டுமானத்தை டிஜிட்டல் மயமாக்குகிறது. ஒரு கான்கிரீட் 3D அச்சுப்பொறியைப் பயன்படுத்துகிறது. இந்த 3D அச்சுப்பொறி கணினிமயமாக்கப்பட்ட முப்பரிமாண வடிவமைப்பு கோப்பை பயனரிடமிருந்து ஏற்றுக்கொள்கிறது. இதன்காரணமாக, வீட்டின் விலை சுமார் 30% இதன்மூலம் குறையும். மேலும், கட்டிடத்தின் ஆயுள் 50 ஆண்டுகளை தாண்டக்கூடும்.
இது தொடர்பாக ஐ.ஐ.டி-மெட்ராஸ் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில்,
“இந்த வீட்டைக் கட்டும் இயந்திரத்தை விவசாயிகள் வாடகைக்கு எடுத்து போர்வெல் இயந்திரங்களைப் போல வாடகைக்கு விடலாம். இது பெரிய அளவிலான, உயர்தர மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விலை உத்தரவாதத்தை வழங்குகிறது,” என்றார்.
முன்னதாக, விழாவில் கலந்துகொண்டு வீட்டை திறந்து வைத்து பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ’இந்தியாவுக்கு நிச்சயமாக இதுபோன்ற தீர்வுகள் தேவை’ என்று கூறியிருந்தார்.