இந்திய சினிமாவின் முதல் அந்தரகக் காட்சி படமாக்க உதவும் ஒருங்கிணைப்பாளர் ஆஸ்தா கன்னா!
திரைப்படங்களில் அந்தரங்க காட்சிகளில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அசௌகரியமான உணர்வு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காக Intimacy Coordinator பிரத்யேகமாக நியமிக்கப்படுகின்றனர்.
திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் அந்தரங்கமான காட்சிகள் அதிகம் இடம்பெறுவது இப்போது சகஜமாகிவிட்டது. இதுபோன்ற நெருக்கமான காட்சிகளைப் பார்க்கும்போது நமக்கு தர்மசங்கடமான உணர்வு ஏற்படுவதுண்டு. திரைப்படங்களைப் பார்ப்பவர்களுக்கே இப்படி அசௌகரியமான உணர்வு ஏற்படும் நிலையில் அந்தக் காட்சிகளில் நடிக்கும் நடிகர்/நடிகைகளின் நிலை என்னவாக இருக்கும்?
திரைப்படங்களில் அந்தரங்கக் காட்சிகளில் நடிக்கும் நடிகர்/நடிகைகளுக்கு அசௌகரியமான உணர்வு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காகவே திரைத்துறையில் ஒரு நபர் பிரத்யேகமாக நியமிக்கப்படுகிறார் என்று சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்தானே?
ஆம், உண்மைதான்! அந்த நபர் Intimacy Coordinator என்று அழைக்கப்படுகிறார் தெரியுமா?
நெருக்கமான காட்சிகள் படமாக்கப்படும்போது படப்பிடிப்பில் இருக்கும் நடிகருக்கும் நடிகைக்கும் அசௌகரியமான உணர்வு ஏற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதே இந்த ஒருங்கிணைப்பாளரின் முக்கியப் பணி. ஆஸ்தா கன்னா பாலிவுட் வட்டாரத்தில் இந்த வேலைக்குப் பிரபலமானவர்.
திரைப்படத் தயாரிப்பாளர் தன்னை பணியமர்த்தியதாக நேர்காணல் ஒன்றில் ஆஸ்தா கண்ணா குறிப்பிட்டுள்ளார். அந்தரங்கமான காட்சிகள் படமாக்கப்படும் படப்படிப்பின்போது ஏற்படும் பிரச்சனைகளுக்கு இவர் தீர்வளிக்கிறார்.
திரைப்பட இயக்குநரின் முக்கிய நோக்கம் திரையில் காட்சிப்படுத்த வேண்டும். இதில் எந்தவித தடங்கலும் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்வதுதான் Intimacy Cooridinator பணியில் நியமிக்கப்பட்டவரின் முக்கிய வேலை.
திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் நடிப்பவர்கள் நிர்வாணமாக இருப்பது போல் படமாக்கப்படும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் நிர்வாணமாக நடிப்பவர்களின் அந்தரங்கப் பகுதி மறைக்கப்படுவதற்காகவே பிரத்யேகமாக சில பொருட்களை Intimacy Coordinator பயன்படுத்துவார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Intimacy Professionals Association அமைப்பிடமிருந்து ஆஸ்தா கண்ணா சான்றிதழ் பெற்றுள்ளார். பாலிவுட்டில் தொடர்ந்து பணியாற்றி வரும் இவர், திரைத்துறையில் நல்ல அங்கீகாரம் பெற்றுள்ளார்.
பொதுவாக மேற்கத்திய நாடுகளில் இதுபோன்ற நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு நடிகர்கள் சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது வழக்கம். இந்தியத் திரைப்படங்களில், குறிப்பாக பாலிவுட்டில் இதுபோல் ஒப்பந்தங்களில் கையொப்பமிட்ட பிறகு, ஆஸ்தா போன்ற ஒருங்கிணைப்பாளரின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பாலிவுட் வட்டாரத்தில் பெரும்பாலான நடிகர்கள் ஒருவரோடு ஒருவர் நட்புடன் தொடர்பில் இருப்பது வழக்கம். எனவே இவர்கள் நெருக்கமாக நடிக்கும் காட்சிகளில் அசௌகரியமான உணர்வைத் தவிர்க்கிறார் Intimacy Coordinator.
இந்தியாவில் Intimacy Coordinator பணிக்கானத் தேவை இருப்பதை ஆஸ்தா கண்ணா சுட்டிக்காட்டினார். குறிப்பாக ’Me Too’ பிரச்சாரத்திற்குப் பிறகு இந்தத் தேவை அதிகரித்திருப்பதாகவே தெரிவிக்கிறார்.
”ஒரு குறிப்பிட்ட காட்சி அல்லது நிகழ்ச்சிக்குத் தேவையான விதத்தில் செயல்முறை மாறுபடும் என்கிறார் ஆஸ்தா. நடன இயக்குநரையும் செயலையும் முறையாக ஒன்றிணைப்பது தன்னுடைய பொறுப்பு,” என்கிறார்.
நெருக்கமான காட்சிகள் என்பது முத்தம் கொடுப்பது, பாலியல் உணர்வைத் தூண்டுவது, நிர்வாணமாக தோற்றமளிப்பது போன்றவை மட்டுமல்ல. சிறார்கள், வெவ்வேறு பாலினங்கள் மற்றும் பின்னணிகளைக் கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றுவதும் இதில் அடங்கும் என்று அவர் தெளிவுப்படுத்துகிறார்.
”சுய இன்பம், உடல் ரீதியான கிளர்ச்சி, திரையில் சிறார்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையில் நடைபெறும் உரையாடல்கள் போன்றவை இதில் அடங்கும்,” என்கிறார்.
சம்மதத்தை உறுதிசெய்தல்
இயக்குநரின் நோக்கம் முறையாக நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் அதே நேரம் திரையில் நடிப்பதற்கு நடிகர்கள் சம்மத்திப்பதை உறுதி செய்வதும் Intimacy Coordinator என்கிற பொறுப்பின் வரையறையில் அடங்கும் என்கிறார் ஆஸ்தா.
நடிகர்கள் சௌகரியமாக உணர்வதையும் காட்சிகள் முறையாக ஒத்திகை பார்க்கப்பட்டதையும் அவர்கள் அசௌகரிய உணர்வின்றி நடிப்பதற்குத் தேவையான அனைத்துத் தகவல்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதையும் உறுதிசெய்வதற்காகவே படப்பிடிப்பு நடக்குமிடத்தில் இருக்கிறார் ஆஸ்தா.
நெருக்கமாக நடிப்பது தொடர்பாக இயக்குநர் மற்றும் நடிகர்களுக்கு மாறுபட்ட சிந்தனைகள் இருந்தால் என்னவாகும்? இதுபோன்ற சூழல்களில் கலந்து பேசுவது முக்கியம் என்பது ஆஸ்தாவின் கருத்து.
”நாங்கள் கலந்து பேசுவோம், எப்போதும் தெளிவான புரிதல் இருப்பதை உறுதிசெய்வோம். நெருக்கமாக இருப்பது தொடர்பான வெளிப்படையான, சுருக்கமான உரையாடல்களை நான் எப்போதும் ஊக்குவிக்கத் தவறுவதில்லை.”
அவர்கள் என்ன செய்கிறார்கள்? கை, கால்கள் என்ன செய்கின்றன? உடலின் எந்தப் பகுதி கண்களுக்குத் தெரியும்? ஷூட்டிங் எப்படி நடக்க திட்டமிடப்பட்டுள்ளது? எத்தனை பேர் அங்கு இருப்பார்கள்? யார் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்? இதுபோன்ற கேள்விகள் பட்டியலிடப்பட்டு இயக்குநரிடம் பதில் பெறப்படும். அதேசமயம் நடிகர்களுக்கும் அனைத்துத் தகவல்களும் பகிர்ந்துகொள்ளப்படும், என்கிறார் ஆஸ்தா.
நடிகர்கள் சில இடங்களில் தொடுவதை விரும்பமாட்டார்கள். அதேபோல் ஒரு குறிப்பிட்டவிதத்தில் காட்சிப்படுத்துவது அவர்களுக்குப் பிடிக்காது. இப்படிப்பட்ட சூழலில் அவர்கள் அதுபோல் செய்யவேண்டிய கட்டாயமில்லை. இது வெளிப்படையாக பேசி முடிவெடுக்கப்படும்.
வெவ்வேறு விதத்தில் உடலை இறுக்கிப் பிடிக்கும்போது அவர்கள் சௌகரியமாக உணர ‘பாடி மேப்பிங்’ (Body mapping) உதவுகிறது. கோவிட்-19 சூழலில் சில நடிகர்கள் முத்தக்காட்சிகளை விரும்பவில்லை. எனவே அதேபோன்ற உணர்வைக் கொண்டுவர நடனத்தில் வெவ்வேறு மாற்று வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தெளிவான தகவல் தொடர்பு முக்கியம்
நடிகர்கள் ஏற்கெனவே சம்மதம் தெரிவித்திருந்தபோதும், படப்பிடிப்பின்போது மனம் மாறவும் வாய்ப்புண்டு. அப்போது அவர்களது உரிமை பாதுகாக்கப்பட்டு அவர்களது முடிவு ஏற்றுக்கொள்ளப்படும்.
”நடிகர்கள் நடிப்பதற்கு சம்மதம் தெரிவிப்பதை நான் எப்போதும் உறுதி செய்வேன். குறிப்பிட்ட விதத்தில் நடிப்பதை யாராவது விரும்பவில்லை என்றால் அவர்களுடன் கலந்து பேசி அதற்கு மாற்று வழியில் தீர்வு காண முயற்சி செய்வோம்,” என்கிறார்.
நடிப்பவர்களும் இயக்குநரும் ஏற்கெனவே பேசி முடிவு செய்ததன் அடிப்படையில் நடிகர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பது ஒப்பந்தத்துடன் இணைக்கப்பட்டுள்ள ’அந்தரங்கமான டயலாக்’ தெளிவுபடுத்திவிடும். நடிப்பவர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதேநேரம் திரைப்படத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருப்பதை இது உறுதிசெய்யும். இண்டிமசி டூல்கிட் ஒன்றை ஆஸ்தா எப்போதும் தன்னுடன் வைத்திருப்பது வழக்கம்.
திரையில் நடிப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கவும் நமது கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு நெருக்கமான காட்சிகளைக் கொண்டு செல்லவும் ஆஸ்தா The Intimacy Collective தொடங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் பின்பற்றப்படும் மிகச்சிறந்த நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இவை உருவாக்கப்படுகின்றன.
”தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இதில் ஆர்வம் காட்டி ஆதரவளித்து வருகின்றனர். இந்தியாவில் இது கட்டாயமாக்கப்படவில்லை என்றாலும்கூட பின்பற்றத்தக்க வழிமுறைகளாக இருக்கும்,” என்று ஆஸ்தா குறிப்பிடுகிறார்.
தமிழில்: ஸ்ரீவித்யா