பாம்பன் பாலத்திற்கு மாற்றாக நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலம்: இந்திய ரயில்வே திட்டம்!
தற்போதுள்ள 104 ஆண்டு பழமை வாய்ந்த பாம்பன் பாலத்திற்கு பதிலாக 250 கோடி ரூபாயில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய பாலம் கட்டப்பட உள்ளது.
தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் பகுதியை இந்தியாவின் பிரதான நிலப்பரப்புகளுடன் இணைக்கும் பாம்பன் பாலம் பிரிட்டிஷ் காலகட்டத்தில் கட்டப்பட்ட 104 வருட பழமையான பாலமாகும். இதற்கான மாற்று பாலத்தை உருவாக்குவதற்கான திட்டத்தை இந்திய ரயில்வே முன்வைத்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக திட்டமிடப்பட்டிருக்கும் செங்குத்தாக உயரக்கூடிய இந்தப் பாலமானது இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். 250 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த பாலத்தின் பணிகளை சுமார் நான்காண்டுகளில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள பாலத்திற்கு அருகில் இந்த புதிய பாலம் அமைக்கப்படும்.
இந்தப் பாலத்தில் கப்பல்கள் கடந்து செல்வதற்காக 63 மீட்டர் நீளத்துக்கு தூக்கு பாலம் அமைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய பாலம் 18.3 மீட்டர் நீளம் கொண்ட 100 ஸ்பான்களையும் 63 மீட்டர் நீளம் கொண்ட நேவிகேஷனல் ஸ்பானையும் கொண்டிருக்கும். இது தற்போதைய பாலத்தை விட மூன்று மீட்டர் அதிக உயரம் கொண்டதாக இருக்கும்.
இண்டியா டுடே அறிக்கையின்படி ஒரு ரயில்வே அதிகாரி குறிப்பிடுகையில்,
”2,058 மீட்டர் நீளம் கொண்ட தற்போதுள்ள பாலம் கட்டப்பட்டு ஏற்கெனவே 104 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்தப் பாலம் கிட்டத்தட்ட பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதால் இதற்கான மாற்று அவசியமாகிறது,” என்றார்.
மற்றொரு அதிகாரி குறிப்பிடுகையில்,
ஸ்கெர்சர் ரோலிங் லிஃப்ட் தொழில்நுட்பம் கொண்ட தற்போதைய பாலம் கப்பல்கள் கடந்து செல்வதற்காக கிடைமட்டமாக திறக்கும். ஆனால் புதிதாக திட்டமிடப்பட்டுள்ள பாலத்தின் அமைப்பில் 63 மீட்டர் நீளம் கொண்ட பகுதியானது செங்குத்தாக மேலே தூக்கப்பட்டும். மற்ற பகுதி தளத்திலேயே அமைந்திருக்கும். ஒவ்வொரு முனையிலும் உள்ள உணர்கருவிகளைக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கப்பல்கள் எளிதாக செல்வதற்காக கடல் மட்டத்தில் இருந்து 22 மீட்டர் உயரத்தில் இந்தப் பாலம் அமைக்கப்படும். மனித கட்டுப்பாடுடன் செயல்படும் தற்போதைய விதத்துடன் ஒப்பிடுகையில் புதிய பாலம் மின் இயந்திர கட்டுப்பாட்டு அமைப்புடன் செயல்படக்கூடியதாக இருக்கும்.
ஊடுருவுவதற்கான இடைவெளி உள்ளிட்ட இந்த பாலத்தின் ஒட்டுமொத்த அமைப்பும் அரசாங்கத்தின் நூறு சதவீத மின்மயமாக்கும் திட்டத்துடன் தொடர்புடையது என ’ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்’ தெரிவிக்கிறது.
1964-ம் ஆண்டு ஏற்பட்ட புயலுக்குப் பிறகு இந்தப் பகுதிகளை இணைப்பதற்கான சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு இந்தப் பகுதிகளை இணைப்பதற்காக மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி இதுவே ஆகும்.
இது மட்டுமின்றி ராமேஸ்வரத்தையும் தனுஷ்கோடியையும் இணைக்கும் வகையில் 208 கோடி ரூபாய் செலவில் 17 கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் இணைப்பை மீண்டும் நிறுவுவதே இதன் நோக்கமாகும். யாத்திரிகள் எளிதாக பயணிக்கவும் இந்த முயற்சி உதவும்.
முன்மொழியப்பட்டுள்ள இந்த பாலத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கட்டுரை : THINK CHANGE INDIA