இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் பைலட்!
வசிப்பதற்கு நல்ல வீடு கூட இல்லாத பாழைடைந்த வீட்டில் வசிக்கும் 27 வயது அனுப்ரியா மதுமிதா லக்ரா தனது பைலட் கனவை பாடுபட்டு நிறைவேற்றியுள்ளார்.
எங்கு திரும்பினாலும் தொழில்நுட்ப வளர்ச்சி கிளை பரப்பி இருக்கும் இதே இந்தியாவில் தான் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் பலர் வாழ்ந்து வருகின்றனர். பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த பெண்களுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வாழ்வாதாரம் கூட கிடைக்காமல் அல்லல்படுபவர்கள் ஏராளம். அதிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின பெண்களின் நிலை பரிதாபத்திற்குரியது.
வாழ்வில் எத்தகைய சூழலிலும் விடாமுயற்சி செய்தால் பிறருக்கு நாம் முன்மாதிரியாக இருக்கலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் 27 வயது அனுப்ரியா மதுமிதா லக்ரா. மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகம் இருக்கம் ஒடிசாவின் மலங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் பைலட் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.
பைலட் ஆக வேண்டும் என்ற தனது வாழ்க்கைக் கனவை நிறைவேற்றி இந்த மாதம் இண்டிகோ ஏர்லைன்ஸ்-ல் இணை பைலட்டாக பணியில் சேர்ந்திருக்கிறார் அனுப்பிரியா. இவரின் தன்தை மரினியாஸ் லக்ரா மலங்கிரி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றுகிறார். லக்ராவின் தாயார் ஜிமஜ் யாஸ்மின் லக்ரா தனது மகள் அடைந்திருக்கும் உச்சத்தால் ஒட்டு மொத்த மாநிலமுமே பெருமைப்படுவதாகவும், இது தங்கள் குடும்பத்திற்கு மகள் தேடித் தந்திருக்கும் மதிப்பு, மரியாதை என்று பெருமையோடு சொல்கிறார்.
எங்களுக்கு போதுமான பொருளாதார உதவிகள் இல்லாவிட்டாலும் மகள் லக்ராவின் கனவுகளுக்கு ஒரு போதும் தடை போட்டதில்லை என்கிறார் ஜிமாஜ்.
பைலட் பயிற்சிக்காக அனுவிற்கு கட்டணம் கட்டுவதற்குக் கூட என்னிடம் பணம் இல்லை. கடன் வாங்கியும், உறவினர்களிடம் உதவி கேட்டும் நிதியுதவி பெற்றேன் என்கிறார் மரினியாஸ் லக்ரா.
எவ்வளவோ கஷ்டங்களை வாழ்வில் சந்தித்த போதும் என்னுடைய மகளின் கல்வி பற்றிய கனவில் அவை பிரதிபலிக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அனுப்ரியா விரும்பும் துறையில் அவள் சிகரம் தொட உறுதுணையாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அது இன்று நிறைவேறி இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு சொல்கிறார்.
என் மகள் அவளது கனவை அடைந்துள்ளார். அனுப்ரியா மற்ற பெண்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தது நிரூபனம் ஆகியுள்ளது. எல்லா பெற்றோரும் தங்கள் மகளின் முடிவுகளுக்கு துணை நிற்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார் ஜிமாஜ்.
அனுப்ரியா லக்ரா பைலட் ஆகி இருப்பதற்கு முதலமைச்சர் நவீன் பட்நாயக் சமூக வலைதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். “அனுப்ரியாவின் சாதனை மகிழ்ச்சியளிக்கிறது. இவர் மற்ற பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாகியுள்ளார் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
ஒடிசாவில் ரயில்வே போக்குவரத்து கூட இல்லாத மலங்கிரி மாவட்டத்தைல் சேர்ந்த பழங்குடியினப் பெண் பைலட் ஆகி இருக்கிறார். இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் பைலட் இவர்.
ரயில் தண்டவாளம் கூட இல்லாத எங்கள் கிராமத்தைச் சேர்ந்த பெண் விண்ணில் தன்னுடைய சிறகை விரித்து பறக்கப் போகிறார் என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்று பழங்குடியினத் தலைவரும், ஒடிசா ஆதிவாசி கல்யாண் மஹாசங்ஹாவின் தலைவருமான நிரஞ்சன் பிஸி கூறியுள்ளார்.
வசிப்பதற்கு நல்ல வீடு கூட இல்லாத பாழைடைந்த வீட்டில் அனுப்ரியா அவரின் தாய், தந்தை மற்றும் சகோதரர் வசித்து வருகின்றனர். மலங்கிரியில் பிறந்து வளர்ந்த அனுப்ரியா, மிஷினரி பள்ளியில் படிப்பை முடித்தார். அருகில் இருந்த கோரபுட் மாவட்டத்தில் உயர்நிலை கல்வியை படித்தவர் 2012ம் ஆண்டு புவனேஸ்வரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சேர்ந்தார். பொறியியல் படிப்பில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவருக்கு பைலட் பணியில் தான் விருப்பம் இருக்கிறது என்பது புரிய பொறியியல் கல்லூரியில் இருந்து வெளியேறியவர் அரசு விமானப் பயிற்சி மையத்தில் சேர்ந்து விமானிக்கான பயிற்சி பெற்றார்.
கடந்த 7 ஆண்டுகளாக விமானி பயிற்சி பள்ளி கட்டணத்திற்காக பல்வேறு கடனை வாங்கியுள்ளோம். கமர்ஷியல் பைலட் உரிமம் பெறுவதற்காக அனு பல தேர்வு எழுத வேண்டி இருந்தது. எனினும் இலக்கை அடைய பணம் தடையாக இருக்காத வகையில் அனுப்ரியாவை மனம் தளராமல் பார்த்துக் கொண்டதாகக் கூறுகிறார் ஜிமாஜ்.
4.2 கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஒடிசாவில் 22.95 சதவிகிதம் பழங்குடியின மக்கள் இருக்கின்றனர். 57.4 சதவிகித மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் வசிக்கும் நிலையில் மலங்கிரியில் அதிக சதவிகித பழங்குடியினர் வசிக்கின்றனர். ஒடிசா 73 சதவிகிதம் படிப்பறிவு பெற்ற மாநிலமாக இருந்தாலும் 41.20% பழங்குடியின பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெற்றுள்ளனர். இத்தகைய வாழ்க்கைச் சூழலில் தான் தன்னுடைய கனவை அடைந்திருக்கும் அனுப்ரியா லக்ராவை நினைத்து நாடே பெருமை கொள்கிறது.