'இந்தியாவின் இளம் பணக்கார தொழிலதிபர்’ - கனிகா டேக்ரிவால்!
இளம் வயதிலேயே சுயமாக சாதித்து காட்டிய பெண் தொழிலதிபராக கனிகா டேக்ரிவால் இடம் பிடித்துள்ளார்.
இளம் வயதிலேயே சுயமாக சாதித்து காட்டிய பெண் பணக்கார தொழிலதிபராக கனிகா டேக்ரிவால் இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் கார்ப்பரேட் உலகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பெண்களை மையமாகக் கொண்ட, ‘கோட்டக் பிரைவேட் பேங்க்கிங் ஹுருன் (Kotak Private Banking Hurun)' பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவின் பணக்கார பெண்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தனர்.
இந்த பட்டியலில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ரோஷினி நாடார் முதலிடம் பிடித்தார். தொடர்ந்து நைகா நிறுவனர் ஃபல்குனி நாயர், பயோகானின் கிரண் மஜும்தார்-ஷா, இந்திரா நூயி உள்ளிட்ட பலரும் இடம் பெற்றிருந்தனர்.
இந்தப் பட்டியலில் இளம் வயதிலேயே இடம் பிடித்த கனிகா டேக்ரிவால், இளம் வயதிலேயே சுயமாக தொழில் தொடங்கி வெற்றி கண்டவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
யார் இந்த கனிகா டேக்ரிவால்?
போபாலைச் சேர்ந்த அனில் டேக்ரிவால், சுனிதா தம்பதியின் மூத்த மகள் கனிகா டேக்ரிவால், இவரது தந்தை பல்வேறு நகரங்களிலும் மாருதி ஷோரூம்களை வைத்துள்ளார். மத்திய பிரதேசத்தின் தலைநகரான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) வளாகத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு பள்ளியில் தொடக்க கல்வியை முடித்த கனிகா, லண்டனில் எம்பிஏ படித்துள்ளார்.
கனிகா பரம்பரியமான மார்வாடி குடும்பத்தைச் சேர்ந்தவர், எனவே படிப்பை முடித்ததும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோர் நினைத்துள்ளனர். ஆனால், தனது சொந்த பிசினஸ் குறித்த யோசனையை குடும்பத்தினரிடம் மறுத்தனர்.
இருப்பினும் தளராத மனத்துடன் போராடிய கனிகா 2013ம் ஆண்டு ‘ஜெட்செட்கோ’ ‘JetsetGo' என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். இது தனியார் ஜெட் மற்றும் ஹெலிகாப்டர் போன்ற சேவைகளை மலிவு வகையில் வழங்கக் கூடிய நிறுவனமாகும்.
நிறுவனத்தினை தொடங்க செயல்பாடுகளைத் தொடங்கிய சிறிது காலத்திலேயே கேன்சரால் பாதிக்கப்படுகிறார் கனிகா. 1 வருடம் பல கடினமான பிரச்சனைகளை எதிர்கொண்டு அதிலும் மீண்டு வந்துள்ளார். இன்று,
JetSetGo தனியார் ஜெட் மற்றும் ஹெலிகாப்டர் சேவைக்கான இந்தியாவின் முதல் ஆன்லைன் நிறுவனமாக இருந்து வருகிறது. மேலும் இந்நிறுவனம் வருடத்திற்கு 150 கோடி ரூபாய் சம்பாதிக்கும் தொழிலதிபராகவும் கனிகாவை மாற்றியுள்ளது.
சுயமாக சாதித்த இளம் தொழிலதிபர்:
கோடக் பிரைவேட் பேங்கிங் - கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட் மற்றும் ஹுருன் இந்தியா ஆகியவற்றின் ஒரு பிரிவான கோடக் பிரைவேட் பேங்கிங் ஹுருன் - இந்தியாவின் பணக்கார பெண்களின் தொகுப்பான 'கோடக் பிரைவேட் பேங்கிங் ஹுரூன்’ பட்டியலுக்கான 3வது பதிப்பை புதன்கிழமை வெளியிட்டது.
இந்த பட்டியலில் மிகவும் இளம் வயதிலேயே சுயமாக சாதித்து காட்டிய பெண் தொழிலதிபராக கனிகா டேக்ரிவால் இடம் பிடித்துள்ளார். 33 வயதான கனிகா டெக்ரிவால் ரூ.420 கோடியுடன் இந்தியாவின் பணக்கார பெண்கள் பட்டியலில் மிகவும் இளையவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
22 வயதில் தனக்கென சொந்தமாக ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை உருவாக்கி 33 வயதில் தற்போது அதனை தனக்கான அடையாளமாக மாற்றியுள்ள கனிகா டேக்ரிவால் புதிதாக தொழில் தொடங்க விரும்பும் இளம் தலைமுறையினருக்கு சிறந்த முன்னூதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
தொகுப்பு: கனிமொழி