சிறு நிறுவனங்கள், வீடுகளுக்கு குறைந்த விலையில் சிங்கிள் போர்டு கம்ப்யூட்டர் தயாரிக்கும் ‘Innomonk'
சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பெரிய நிறுவனங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சமூக தொழில்முனைவு (social entrepreneurship) முயற்சிகளும். அப்படிப்பட்ட ஒரு நிறுவனம்தான் ‘Innomonk' 'இன்னோமாங்க்'.
30 ஆண்டுகளுக்கு முன்பு போன் என்பது அனாவசியமான ஒன்றாக இருந்தது. தற்போது அத்தியாவசியத் தேவையாக மாறிவிட்டது. அதுபோல கம்யூட்டர் என்பது சில ஆண்டுகளுக்கு அலுவலகங்களில் மட்டுமே இருந்தது. ஆனால் வீடுகளுக்கு வந்துவிட்டது. கம்யூட்டர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
கோவிட்டுக்கு பிறகு கம்யூட்டர் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால் எளிய மக்களுக்கு தேவை இருந்தாலும், கம்யூட்டர்களின் விலை இன்னும் எளிய மக்களுக்கானதாக மாறவில்லை. இந்த பணியை செய்கிறது ‘Innomonk' எனும் பெங்களூரு நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மகேந்திரன் கதிரேசன் யுவர்ஸ்டோரி உடன் பகிர்ந்தவை இதோ.
ஆரம்ப காலம்
மதுரையைச் சேர்ந்தவர் மகேந்திரன். அங்கு உள்ள டிவிஎஸ் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனைத் தொடர்ந்து திருநெல்வேலி பொறியியல் கல்லூரியில் இசிஇ. முடித்த பிறகு டெல்லியில் உள்ள உறவினர் மூலமாக அங்கு உள்ள நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
அதன் பிறகு ஹைதராபாதில் சில ஆண்டுகள் பணியாற்றினார். அங்கிருந்து பெங்களூரு வந்தவர் பிலிப்ஸ், சீமென்ஸ் உள்ளிட்ட முக்கியமான நிறுவனங்களில் பணியாற்றியவர். மனைவியும் ஐபிஎம் நிறுவனத்தில் வேலை செய்தவர்.
தொழில் தொடங்குவது குறித்து திட்டம் இருந்ததால் ஆண்டுக்கு பல லட்ச ரூபாய் சம்பளம் இருக்கும் பெரிய வேலையை விட்டுவிட்டு 2016-ம் ஆண்டு தொழில் தொடங்கினார். Dad and dude என்னும் நிறுவனத்தை முதலில் தொடங்குகிறார்.
பெங்களூருவில் பல மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு நிறுவனத்துக்கு கம்யூட்டர் என்பதுதான் பிரதானம். ஒரு கம்யூட்டரை அதிக ஆண்டுகளுக்கு பயன்படுத்த முடியும் என்றாலும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அந்த கம்யூட்டரை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இதற்கென பெரு நிறுவனங்களுக்கு விதிமுறைகள் உள்ளன.
“அவர்கள் பயன்படுத்த வேண்டாம் என முடிவெடுத்த பிறகு, அது குறித்து பெரிதும் கவலைப்பட மாட்டார்கள். இதனால் இ-வேஸ்ட் சிக்கல் உள்ளிட்டவை இருப்பதால், இது போன்ற நிறுவனங்களில் வேண்டாம் என முடிவெடுக்கப்படும் லேப்டாப் மற்றும் கம்யூட்டர்களை சீரமைப்பு செய்து (refurbishment) வாரண்டி கொடுத்து விற்கும் ஐடியாவுடன் நிறுவனம் தொடங்கும் முயற்சியைத் தொடங்கினேன்,” என்றார் மகேந்திரன்.
பல சிறு நிறுவனங்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இந்த சீரமத்தை கம்யூட்டரை விற்கிறோம். பயன்படுத்தப்பட்ட கம்யூட்டர்களை வேறு தளங்களில் வாங்க முடியும் என்றாலும் அங்கு வாரண்டி கிடைக்காது. நாங்கள் வாரண்டியோடு கொடுக்கிறோம்.
இப்போது எங்களுக்கு வாடிக்கையாளர்களுடன் நல்ல உறவு ஏற்படுகிறது. அலுவலகங்களில் கம்யூட்டர்களுக்கு பெரிய பயன்பாடு இருக்கலாம். ஆனால் வீடுகளில் உள்ள கம்யூட்டர்களுக்கு குறைவான பயன்பாடுதான். வோர்டு, பிரவுசிங், மெயில் அனுப்புதல், யூடியூப், ஜூம், கூகுள் மீட் உள்ளிட்டவை பயன்பாடு மிகவும் குறைவுதான்.
50 ஆயிரம் ரூபாய்க்கு கம்யூட்டர் வாங்கி, அதில் டிரைவர்கள், ஆண்டி வைரஸ் என அப்டேட் செய்ய வேண்டி இருக்கிறது. இதற்டையில் கம்யூட்டர் கிராஷ் ஆவது, மெதுவான வேலை செய்வது என பல பிரச்சினைகள் வந்துகொண்டே இருக்கிறது. சாதாரண மக்களுக்கு எளிமையாக பயன்படுத்தும் வகையில் கம்யூட்டர் இருக்காதா எனத் தேடினோம். அப்போதுதான் எங்களுக்கு சிங்கிள் போர்டு கம்யூட்டர் குறித்து தெரியவந்தது. இதனை உற்பத்தித் துறையில் சிஎன்சி மெஷின்களில் இந்த கம்யூட்டர் குறிப்பிட்ட பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
Innomonk
சிஎன்சி கம்யூட்டர்களை அனைவரும் பயன்படுத்தும் வகையில் மாற்ற முடியுமா என்பது குறித்து நானும் என்னுடைய இணை நிறுவனரும் சிந்தித்தோம். இதில் லின்ங்ஸ் ஓஎஸ் இருக்கும். ஆன்டி வைரஸ் தேவையில்லை, பைரேடட் சாப்ட்வேர் எதுவும் இல்லை. கிராஷ் பிரச்சினை இல்லை, மின்சாரம் குறைவாக போதும் என்பது போல மாற்றி அமைத்தோம்.
தவிர வைபை, ஹாட் ஸ்பாட், பூளு டூத் உள்ளிட்டவை செயல்படுமா என்றும் சோதித்தோம். 2019-ம் ஆண்டு அனைத்து விதமான சோதனையும் முடிந்தது 2020 ’இன்னோமாங்க்’ என்னும் புதிய நிறுவனத்தைத் தொடங்கினோம்.
விற்பனை தொடங்கிக் கொண்டிருந்த சமயத்தில்தான் கோவிட் 19 தாக்கம் தொடங்கியது. அப்போது கம்யூட்டர்களுக்கான தேவை இருந்தாலும், நாங்கள் 20,000 ரூபாய்க்கு அதனை விற்பனை செய்துவந்தோம். 20000 ரூபாய்க்கு சிங்கிள் போர்டு கம்யூட்டர் என்பது பெரிய தொகை. அதனால் எப்படி விலையை குறைக்கலாம் என யோசித்தோம். அப்போது ஒரு கம்யூட்டரில் மானிட்டர் ஸ்கிரீன் விலைதான் அதிகம். அதனால் மானிட்டருக்கு பதிலாக தொலைக்காட்சியை இணைக்க முடியுமா என யோசித்தோம்.
”தொலைகாட்சி என்றால் ஸ்லிம் தொலைகாட்சிகள் அல்ல. கேதோடு தொலைகாட்சிகளையும் இணைக்க வேண்டும். அதனால் அனைத்து விதமான தொலைகாட்சிகளையும் நாங்கள் இணைத்து விலையை ரூ.7500 ஆக குறைத்தோம். பல மாநிலங்களிலும் விற்பனையை தொடங்கி இருக்கிறோம்,” என்றார்.
இந்த புராஜக்டை ஐஐஎம் பெங்களூருவில் சமர்பித்தோம். 500க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. இதில் ’சோசியல் ஸ்டார்ட் அப்’ என எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அவர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இதனை அடுத்து இன்டெல் நிறுவனத்துடன் இணைத்தோம். இதுவரை லினெக்ஸில் மட்டுமே பணியாற்றுகிறீர்கள். இதே திட்டத்தை ஏன் விண்டோஸில் செய்யக் கூடாது எனக் கேட்டார்கள். அதனால் அவர்களுடனுன் இணைந்து பணியாற்றுகிறோம்.
நிதி மற்றும் எதிர்காலம்?
எங்களுடைய வாடிக்கையாளர்கள் என்பது இதுவரை கம்யூட்டரை பார்த்திடாத அல்லது அதிகம் பயன்படுத்தாதவர்கள்தான். அதனால் விலையை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைப்பதற்கான முயற்சியை எடுத்துவருகிறோம்.
இதனை விரிவுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறோம். நிறுவனத்தை அடுத்துகட்டத்துக்கு கொண்டு செல்ல என்.ஜி.ஓ.கள். மாநில அரசுகள், பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி, சிறிய தனியார் பள்ளிகள் என பல வகைகளிலும் முயற்சிகை எடுத்து வருகிறோம். நகரங்களை விட சிறு ஊர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.
இப்போதைக்கு சிறிய சந்தை போல தெரிந்தாலும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் கம்யூட்டர் தேவைப்படும் என்னும் சூழ்நிலை உருவாகி வருவதால் சிங்கிள்போர்டு கம்யூட்டர்களுகான தேவை உயரும்,” என்கிறார் மகேந்திரன்.
இதுவரை சொந்த நிதியை மட்டுமே பயன்படுத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறோம். பெரிய சந்தைக்கான வாய்ப்பு இருந்தாலும் குறிப்பிட்ட விற்பனையை அடைந்த பிறகு வென்ச்சர் கேபிடல் நிதியை பெறுவது பரிசீலனை செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என மகேந்திரன் தெரிவித்தார்.
அறிவை ஜனநாயகப்படுத்திய கம்யூட்டரும் இணையமும் அனைவரின் இல்லத்திலும் இருக்கட்டும்.