‘பஸ் வசதியே இல்லாத குக்கிராமத்தின் முதல் ஐஏஎஸ்’ - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற விவசாயி மகள்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த விவசாயி மகளான ஹரிணி யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் 10வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை அடுத்த கருங்காலிப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ரவியின் மகள் ஹரிணி. யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 289வது இடத்தையும் தமிழக அளவில் 10வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சிறு வயது முதலே ஐஏஎஸ் ஆவதை தனது கனவாக வைத்து வளர்ந்திருக்கிறார் இவர்.
“எங்கள் ஊர் பின்தங்கிய மாவட்டமான கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு குக்கிராமம். ஒரு சமயத்தில் எங்கள் ஊருக்கு பேருந்து வந்து கொண்டிருந்தது, ஆனால் அந்த வசதி கூட இப்போது இல்லை. எனவே, பள்ளிக்குச் செல்வது கஷ்டமாக இருந்ததால் அருகில் இருந்த மத்தூருக்கு இடம் பெயர்ந்தோம்,” என்று படிப்பில் தனக்கு இருந்த ஆர்வத்தை கூறுகிறார் ஹரிணி.
என்னுடைய மகள் எப்போதுமே படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றார். கையில் எப்போதுமே பேனாவும் பேப்பரும் வைத்திருப்பாள், அவளுடைய கனவு ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பதில் சிறு வயது முதலே உறுதியாக இருந்தார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த பிறகும் கூட நேரத்தை வீணாக்காமல் படித்துக் கொண்டே இருப்பார்.
இளநிலை விவசாயம் படித்தவர் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் விவசாயத்துறை அதிகாரியாக பணியில் சேர்ந்தார். எனினும் ஐஏஎஸ் கனவை கைவிட்டுவிடாமல் தொடர்ந்து படித்து தேர்வெழுதி முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற பின்னர், விடுப்பு எடுத்துக் கொண்டு அடுத்தத் தேர்வுக்குத் தயாரானார் என்று தன்னுடைய மகள் அவருடைய கனவை சாத்தியப்படுத்தியதைக் கூறி மகிழ்கிறார்கள் ஹரிணியின் பெற்றோர்.
யுபிஎஸ்சி-க்கு தொடர் முயற்சி
2018ம் ஆண்டு முதலே யுபிஎஸ்சி தேர்வெழுதி வருகிறேன், 2022ம் ஆண்டு நான் 4வது முறையாக தேர்வெழதினேன். மூன்று முறை என்னால் தேர்வாக முடியவில்லை, எனினும், 4வது முயற்சியில் குடிமைப்பணி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறேன்.
“விடாமுயற்சியோடு படித்தால் நிச்சயம் வெற்றியை அடைய முடியும் என்பதை நான் இதில் இருந்து கற்றுக் கொண்டேன். நான் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன், எனினும் அது கட்டாயமல்ல. பயிற்சி மையத்தில் சேராமலேயே ஏராளமானவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வென்றிருக்கிறார்கள்.”
பயிற்சி மையத்தில் ஏன் சேர வேண்டும் என்றால் தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு புரியாத பாடங்களில் தெளிவு பெறலாம், தேர்வுக்குத் தயாராகும் நேரத்தை குறைக்க முடியும். யுபிஎஸ்சி தேர்வைப் பொறுத்த வரையில் பயிற்சி மையங்கள் 20 சதவிகிதம் மட்டுமே பங்காற்றுகின்றன, எஞ்சிய 80 சதவிகிதம் மாணவர்களின் திறன், முயற்சி மற்றும் கடினஉழைப்பு அடிப்படையிலானது.
தரமான புத்தகங்கள், என்சிஇஆர்டி புத்தகங்கள் என்று சரியான புத்தகங்களை முதன்மைத் தேர்வுக்காக நான் படித்தேன். இடைப்பட்ட காலத்தில் டிஎன்பிஎஸ்கி தேர்வெழுதி விவசாய அதிகாரியாக பாளையங்கோட்டையில் பணியில் சேர்ந்தேன். முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் அடுத்த தேர்வுக்குத் தயாராவதற்காக சென்னை மற்றும் டெல்லியில் இருந்த பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டேன்.
குறிப்பாக நேர்முகத்தேர்வுக்காக நான் டெல்லி, சென்னையில் பயிற்சி எடுத்தேன். நேர்முகத் தேர்வுக் குழுவில் இருப்பவர்கள் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்தை கொண்டவர்கள் தேர்வர்களாக இருப்பார்கள், அவர்களிடம் பேசுவதற்கு நம்மிடம் ஒரு தைரியமும் தன்நம்பிக்கையும் தேவை. அந்த இடத்தில் பேசுவதற்கு பயிற்சி எடுப்பதற்காகவே மாதிரி நேர்முகத்தேர்வுகளில் பங்கேற்றேன். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இது தவிர மெயின் தேர்வு எழுதுவதற்கு எழுத்துத்தேர்வு பயிற்சி மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன். ஏனெனில், நம்முடைய பதில் எழுதும் திறன் மேம்படும்.
நான் மெயின் தேர்வில் 817 மதிப்பெண்ணும், நேர்முகத்தேர்வில் 154 மதிப்பெண்ணும் எடுத்திருந்தேன்.
“நேர்முகத்தேர்வில் எனக்கு மதிப்பெண் குறைந்ததில் ஒரு வருத்தம் இருந்தது. யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகுபவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறமுடியவில்லை, தொடர்ந்து பின்னடைவை சந்திக்கிறோம் என்று மனம் தளராமல், தேர்வுக்குத் தயாராவதை முனைப்பாக வைத்திருந்தால் நிச்சயமாக வெற்றி பெற முடியும்.
எப்படி படிக்கவேண்டும்?
என்ன படிக்கிறோம் என்பதை தெரிந்து புரிந்து படிக்கிறோம், என்ன படிக்கிறோம் என்பதே புரியாமல் படித்து பலர் வருடக்கணக்கில் தேர்வெழுதுவார்கள், அப்படியும் செய்யக்கூடாது. Syllabus, அடிப்படை NCERT புத்தகங்களைப் படித்துவிட்டு standard புத்தகங்களை வாங்கி படிக்க வேண்டும். தேர்வுக்குத் தயாராகும் போது படிப்படியாகச் சென்றால் தான் அதில் வளர்ச்சி இருக்கும், அந்த வளர்ச்சியை நாமும் கூட உணர முடியும். கடந்த மார்ச் மாதத்தில் விவசாயப் பணியை நான் ராஜினாமா செய்துவிட்டேன், கடந்த ஒன்றரை மாதங்களாக உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன், என்கிறார்.
தோல்வி பெற்றவர்கள் மனம் சோர்ந்துவிடக்கூடாது பொதுப்பிரிவில் 6 வாய்ப்புகள் இருக்கிறது. வேலை பார்த்துக் கொண்டே கூட நீங்கள் தேர்வுக்குத் தயாராகலாம், முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற பின்னர், அடுத்தடுத்த தேர்வுகளின் போது விடுப்பு எடுத்துக் கொண்டு தீவிரமாகத் தயாராக முடியும். இது ஒரு மதிப்புமிக்க தேர்வு என்பதால் நீங்கள் பணிபுரியும் இடத்தில் இருக்கும் மேல் அதிகாரிகள் இதைப் புரிந்து கொள்வார்கள். கல்வி எல்லோருக்கும் சென்றடைய வேண்டும்.
பின்தங்கிய மாவட்டத்தில் அதிலும் குழந்தைத் திருமணம், பெண்கல்வி இடைநிற்றல் போன்ற பிரச்னைகள் இருக்கும் எங்கள் ஊரில் இருந்து நான் யுபிஎஸ்சி தேர்வில் வென்றிருப்பது நிச்சயமாக மற்ற பெண் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்கும்.
“அனைவருக்கும் கல்வி, குழந்தைத் திருமணம் ஒழிப்பு, பெண்கல்வி ஆகிய மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் என்னுடைய பணியை செய்ய இருக்கிறேன். நான் படிப்பதற்கு முழு சுதந்திரம் தந்து எனக்கு உறுதுணையாக என்னுடைய பெற்றோர் இருந்தனர், அவர்களைப் போலவே எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த மற்ற பெண்பிள்ளைகளின் பெற்றோரும் அவர்களின் கனவுக்கு துணை நிற்க வேண்டும்.”
எதிர்காலத்தில் குடிமைப்பணிகள் தேர்வு எழுதுபவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ஹரிணி.
ஹரிணி குடிமைப்பணிக்கு தேர்ச்சி பெற்றதற்கு அவருடைய பெற்றோர் மற்றும் குடும்பத்தார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரும் ஹரிணியை நேரில் சந்தித்து வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
ஒரே வீட்டில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்; யுபிஎஸ்சி-யில் சாதனை படைத்த முந்திரி விவசாயி மகள்கள்!