வீடு, வீடாக நியூஸ் பேப்பர் போட்டவர் இன்று ஐஏஎஸ் அதிகாரி; நிரிஷ் ராஜ்புத் சாதித்தது எப்படி?
தற்போது வீடு வீடாக பேப்பர் போட்டுக்கொண்டிருந்தவர் ஐஏஎஸ் அதிகாரியாக மாறிய உத்வேகமூட்டும் கதையைப் பற்றி பார்க்கலாம்...
UPSC முதல்நிலைத் தேர்வு 2023 மே மாதம் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர். முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, தனிப்பட்ட நேர்காணலில் தேர்வர்கள் அவர்களது செயல்திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை கடினமான மற்றும் மிகவும் சவாலான தேர்வுகளில் ஒன்றாக UPSC கருதப்படுகிறது. வர உள்ள தேர்வை போட்டியாளர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வெற்றியாளர்களின் கதைகள் உத்வேகம் அளிப்பதாக அமைகிறது. தற்போது வீடு வீடாக பேப்பர் போட்டுக்கொண்டிருந்தவர் ஐஏஎஸ் அதிகாரியாக மாறிய உத்வேகமூட்டும் கதையைப் பற்றி பார்க்கலாம்...
யார் இந்த ஐஏஎஸ் நிரிஷ் ராஜ்புத்?
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த நிரிஷ், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தையல்காரரான நிரிஷ் ராஜ்புத்தின் தந்தை, குடும்பம் செலவுகளை சமாளிப்பதற்காகவே தினமும் கடன் வாங்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் தனியார் பள்ளிக்கு பீஸ் கட்ட முடியாமல் நிரிஷ் அரசு பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
பிஎஸ்சி மற்றும் எம்எஸ்சி பட்டம் பெற்ற நிரிஷ், குடும்பத்தின் வறுமை காரணமாக வேலை செய்து கொண்டே யுபிஎஸ்சி தேர்விற்கு தயாராவது என்ற முடிவெடுத்தார். குக்கிராமத்தில் இருந்து குவாலியாருக்கு இடம் பெயர்ந்த அவர், தனது படிப்பு செலவிற்காக வீடு, வீடாக பேப்பர் போடும் வேலை பார்த்துள்ளார். இருப்பினும், அந்த வேலை மூலமாக கிடைத்த பணம், அவரது படிப்பு செலவுக்கு போதுமானதாக இல்லை.
நண்பனின் துரோகம்:
குவாலியரில் UPSC படித்துக்கொண்டிருந்த நிரிஷ் ராஜ்புத், தனது நண்பர் ஒருவர் மூலமாக கோச் சென்டர் ஒன்றில் பயிற்சியாளராக பணிக்குச் சேர்ந்தார். பாடம் எடுத்தது போக மீதமிருந்த நேரத்தில் தேர்வுக்குத் தயாராகி வந்த நிரிஷ் அவரது நண்பர் திடீரென வேலையை விட்டு நீக்கியுள்ளார். பணிக்குச் சேர்ந்த 2 ஆண்டுகளிலேயே நிரிஷ் வேலையை விட்டு நீக்கப்பட்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தனது ஐஏஎஸ் கனவை அடைந்தே தீருவேன் என முடிவெடுத்திருந்த நிரிஷ் மன உறுதியோடு டெல்லிக்கு குடிபெயர்ந்தார்.
நோட்டு புத்தகங்கள் வாங்க பணமில்லை:
தலைநகருக்கு குடிபெயர்ந்த நிரிஷ், அங்கிருந்த தனது நண்பர் ஒருவரிடம் கடனாக பெற்ற பணம் மூலமாக படிப்பை தொடர முடிவெடுத்தார். யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் பிற மாணவர்களிடம் நோட்ஸ்களை கடனாக வாங்கி படித்து வந்த நிரஜ், மூன்று முறை தேர்வில் தோல்வியுற்றதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தளாராத மன உறுதி, விடாமுயற்சியுடன் படித்து வந்த நிரிஷ், யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 370 வது ரேங்குடன் ஐஏஎஸ் அதிகாரியானார்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதற்கு நிரிஷ் ராஜ்புத்தின் வாழ்க்கை ஒரு சிறந்த உதாரணமாகும்.
தகவல் உதவி - டிஎன்ஏ இந்தியா
பஞ்சர் கடை நடத்தியவர் இன்று ஐஏஎஸ்: விடாமுயற்சிக்கு முன்னுதாரணமான வருண் பரண்வால்!