பஞ்சர் கடை நடத்தியவர் இன்று ஐஏஎஸ்: விடாமுயற்சிக்கு முன்னுதாரணமான வருண் பரண்வால்!
வறுமையால் வேலை பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டாலும், சைக்கிள்களுக்கு பஞ்சர் ஓட்டியபடியே பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து, ஐஏஎஸ் ஆக உயர்ந்திருக்கிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வருண் பரண்வால். தனது கடின உழைப்பு மூலம் இளைஞர்களுக்கு வாழும் ரோல்மாடலாக விளங்கி வருகிறார் இவர்.
கஷ்டங்கள் சூழ்ந்து, வாழ்க்கையில் வறுமை அடுத்த அடி எடுத்து வைக்க தடையாகும் போதெல்லாம், நமக்கு உத்வேகம் அளிப்பது வெற்றியாளர்களின் வாழ்க்கைக் கதைதான். விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் அவர்கள் அடைந்திருக்கும் உயரம், நம்மை அடுத்த அடி எடுத்து வைக்க உத்வேகம் அளிப்பதாக இருக்கும்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த வருண் பரண்வால் ஐஏஎஸ்-ன் கதையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். பத்தாம் வகுப்பு படிக்கும்போதே குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய பொறுப்புக்கு ஆளானபோதும், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு, தனது படிப்பையும் மேற்கொண்டு சிறந்த மாணவனாக விளங்கியவர் வருண்.
உழைப்பிற்கு இடையில் தன் கவனத்தைச் சிதற விடாமல், குறிக்கோளில் உறுதியாக நின்று ஐஏஎஸ் ஆக உயர்ந்தவர். இவரது கதை நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற நினைப்பவர்களுக்கு, குறிப்பாக ஐஏஎஸ் படிக்க நினைப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
பஞ்சர் போடும் வேலை
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்திலுள்ள சிறிய நகரமான போய்சரில் பிறந்தவர் வருண் பரன்வால். இவரது தந்தை சிறிய சைக்கிள் பஞ்சர் பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார். சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு படித்துள்ளார் வருண்.
ஆனால், 2006ம் ஆண்டு அவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது தந்தை உயிரிழந்தார். இதனால் குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு வருணுக்கு வந்தது.
வருணின் தந்தை நடத்தி வந்த சிறிய பஞ்சர் பார்க்கும் கடை மட்டுமே அவர்களது குடும்பத்திற்கான ஒரே ஒரு வருமானம் தரும் இடமாக இருந்தது. இதனால் தனது மருத்துவர் கனவை மூட்டை கட்டி வைத்து விட்டு, குடும்பத்திற்காக தன் தந்தையின் சைக்கிள் கடையில் வேலை பார்க்கத் தொடங்கினார் வருண்.
சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டிக் கொண்டிருந்த வருணை, ஒருநாள் அவரது தந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கம்ப்ளி சந்திருக்கிறார். நன்றாக படிக்கக்கூடிய மாணவனான வருண், குடும்பக் கஷ்டம் காரணமாக படிப்பைப் பாதியில் கைவிட்டு, சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்து வேதனை அடைந்தார் அவர். எனவே, தன்னால் ஆன உதவியை வருணுக்கு செய்வது என முடிவெடுத்தார்.
அந்த மருத்துவரின் முயற்சியால் மீண்டும் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார் வருண். பள்ளிக்குச் சென்றாலும் குடும்பத்திற்கு சாப்பாடு போடும் பஞ்சர் கடையை அவர் அப்படியே விட்டுவிடவில்லை. பகல் நேரத்தில் அக்கடையை அவரது அம்மா பார்த்துக் கொள்ள, இரவில் வீட்டுப்பாடங்களை முடித்து விட்டு, வருணும் சைக்கிள்களுக்கு பஞ்சர் ஒட்டினார்.
பகலில் படிப்பு, இரவில் வேலை என ஓய்வின்றி உழைத்தபோதும், இரண்டிலும் கைதேர்ந்தவராகவே விளங்கினார். இடையில் சில காலம் படிப்பை கைவிட்டிருந்தபோதும், தனது நன்றாகப் படிக்கும் திறமையை அப்படியே வைத்திருந்தார். இதனால், வகுப்பிலேயே முதல் மாணவராக பத்தாம் வகுப்பில் வருண் தேர்ச்சி பெற்றார்.
தங்கப்பதக்கம்
கல்வி மீதான வருணின் ஆர்வத்தைப் பார்த்த அவரது தாயார், தொடர்ந்து அவரை மேற்படிப்பு படிக்க வலியுறுத்தினார். தன் மகனுக்குத் துணையாக அவர் சைக்கிள் கடையை அவர் பார்த்துக் கொண்டார். டாக்டர் கம்ப்ளியின் உதவியால் கல்விக் கட்டணம் செலுத்தி வந்த வருண், மருத்துவப் படிப்பிற்கு அதிகச் செலவு ஆகும் என்பதால் பொறியியல் படிப்பில் சேர்ந்தார்.
நன்றாகப் படித்த வருணுக்கு அவரது நண்பர்கள் புத்தகம் வாங்கித் தருவது உள்ளிட்ட உதவிகளைச் செய்தனர். கூடவே, தனது சைக்கிள் கடையில் வேலை பார்த்துக்கொண்டே படித்த வருண், கோல்ட் மெடலுடன் பொறியியல் படிப்பையும் நல்லபடியாக முடித்தார்.
கல்வியில் சிறந்த மாணவராக விளங்கிய தருணுக்கு, கடைசி ஆண்டு கல்லூரி படிக்கும்போதே பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. ஆனால், தன்னைப் போல் கஷ்டப்படும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டிருந்த வருண், அந்த வேலையில் சேராமல் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு பயிற்சி பெறத் தொடங்கினார்.
அதோடு, அன்னா ஹசாரேயின் போராட்டங்களினால் உத்வேகம் பெற்ற வருண், தனது வாழ்க்கை முழுவதும் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட முடிவு செய்தார்.
வழக்கம் போலவே, சைக்கிளுக்கு பஞ்சர் போடும் வேலையையும் பார்த்துக் கொண்டே யுபிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாரானார். அவரது கடின உழைப்பிற்குப் பலனாக 2016ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 32வது இடத்தைப் பிடித்து, ஐஏஎஸ் ஆனார் வருண்.
ரோல் மாடல்
தற்போது ராஜ்கோட் மாநகராட்சி மண்டல ஆணையராக பணிபுரிந்து வருகிறார் வருண். தனது கனவுகளுக்கு வறுமையை எப்போதுமே தடையாக இருக்கவிடாமல், கடின உழைப்பின் மூலம் இந்த இடத்திற்கு உயர்ந்துள்ளார் அவர். தன்னுடைய இந்த வெற்றிக்கு முதல் காரணம் தனது தாய் தான் என ஒவ்வொரு பேட்டியிலும் மறக்காமல் குறிப்பிடுகிறார் வருண்.
வறுமையினால் பஞ்சர் கடையில் வேலைபார்த்த போதும், தனது கனவை வறுமை சாப்பிட்டு விடாதபடி, விடாமுயற்சியினை மேற்கொண்டு இன்று நாடறிந்த ஐஏஎஸ் அதிகாரியாகி இருக்கிறார் வருண். அந்தப் பகுதி இளைஞர்கள் பலர் வருணை தங்களது மாடலாக கொண்டு படித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் மட்டுமல்ல. ஐஏஎஸ் ஆக வேண்டும் கனவோடு உழைத்துக் கொண்டிருக்கும் பலருக்கும் வருணின் இந்த கதை நிச்சயம் உத்வேகம் அளிக்கக்கூடிய டானிக் தான்.