பெண்கள் முன்னேற்றத்துக்கு வாழ்க்கையை அற்பணித்த சிங்கிள் மதர் கிருஷ்ணகுமாரி!
கொடுமைக்கார கணவனை விட்டு பிரிந்து வந்து 2 குழந்தைகளை வளர்த்து படிக்க வைத்து உயர் பொறுப்புகளில் அவர்களை அமர வைத்ததோடு, பல்வேறு பெண்களுக்கு தைரியமூட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறார் கிருஷ்ணகுமாரி.
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பல்வேறு மாற்றங்களை சந்திக்கிறது. இணைபிரியா கணவன் மனைவி, அழகான வீடு, பெயர் சொல்ல குழந்தைகள் இவை தான் அன்பான குடும்பம் என்று நம் சமூகம் சொல்கிறது. எல்லோருக்கும் இப்படியான வாழ்க்கை அமைவதில்லை, என்றாலும் நமக்கு அமையும் வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதற்கு பலர் வாழும் உதாரணங்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒரு சாதனை நாயகி தான் கிருஷ்ணகுமாரி.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்தவர் கிருஷ்ணகுமாரி. ஒரே பெண் என்பதால் செல்லமாக வளர்ந்தவர், பெற்றோரின் ஆசைப்படியே 17 வயதில் திருமண பந்தத்திலும் இணைந்தார். திருமணம் ஆகி 2 ஆண் பிள்ளைகளுக்குத் தாயான போதும் பெற்றோர் மற்றும் அவரின் கனவு போல கிருஷ்ணகுமாரியின் வாழ்க்கை அமையவில்லை. கணவனின் துன்புறுத்தல்களை பொறுத்துக்கொண்டே காலத்தை கடந்திருக்கிறார்.
“அந்த காலத்தில் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றே வளர்த்து விட்டதால் குடும்ப வன்முறையை பொறுத்துக் கொண்டே வாழ்க்கை நடத்தி வந்தேன். எனினும் ஒரு நாள் காலையில் என்னுடைய கணவன் குழந்தைகளையும் என்னையும் வீட்டு விட்டு வெளியே தள்ளி கதவை அடைத்து விட்டார். அது வரையிலும் கூட 4 நாட்கள் அம்மா வீட்டில் 3 நாட்கள் கணவன் வீட்டில் என்று வாழ்ந்து வந்த நிலையில், முழுவதும் வீட்டை விட்டு வெளியே தள்ளியதால் அம்மா வீட்டிற்கே வந்துவிட்டேன்,” என்று தன்னுடைய குடும்ப வாழ்க்கை பற்றி விவரிக்கிறார் கிருஷ்ணகுமாரி.
என்னுடைய அம்மா, அப்பா இருக்கும் வரை எனக்கோ குழந்தைகளுக்கோ எந்த பிரச்னையும் இல்லை அதற்குப் பிறகு எங்களின் வாழ்க்கை என்னவாகுமோ என்று பயந்தேன். என்னுடைய மகன்கள் வளர்ந்து கொண்டிருந்தனர் அதிகம் யோசித்து யோசித்து கடைசியில் என்னுடைய 26வது வயதில் தான் பணிக்குச் செல்லலாம் என்று முடிவு செய்து டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு என்னைத் தயார் படிக்கத் தொடங்கினேன்.
அது வரையில் வெளி உலகம் தெரியாத வெகுளிப் பெண்ணாக இருந்தாலும் வாழ்வில் ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற உத்வேகத்துடன் எழுதிய முதல் அரசுப் பணித் தேர்விலேயே வெற்றி பெற்று ஜூனியர் அதிகாரியாகப் பொறுப்பில் சேர்ந்தேன். அதற்குப் பின்னர் தான் நான் எம்.ஏ, பி.எச்.டி படித்து என்னுடைய வாழ்வில் அடுத்தடுத்த வளர்ச்சிகளைத் தொடத் தொடங்கினேன், என்கிறார் கிருஷ்ணகுமாரி.
சிதம்பரம் போன்ற ஒரு சிறிய பகுதியிலேயே வாழ்ந்து வந்த எனக்கு திடீரென சென்னை போன்ற பெருநகரில் பணிக்குச் சேர வேண்டிய நிலை, சிங்கிள் மதர், 26 வயது பெண் என்பதால் பணியிடத்தில் ஒரு பாதுக்காப்பின்மையை உணர்ந்தேன். இந்தத் தடைகளைக் கடந்து வர முதலில் என்னை நானே உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் என்று சிந்தித்தேன்.
பெண்களின் வழிகாட்டி
நான் அரசுப் பணியில் சேர்ந்த காலத்தில் பெண்கள் அதிகம் பணியில் இருக்க மாட்டார்கள், அப்படியே இருந்தாலும் ஆண்களை விட தாழ்ந்தவர்களாகவே தான் பார்க்கப்படுவார்கள். பணியிடத்தில் இருக்கும் பெண்களின் பிரச்னைகளைக் கேட்பேன், அவர்களுக்குத் தீர்வு ஏற்பட வேண்டுமானால் எதாவது ஒரு அமைப்பில் இருக்க வேண்டும் என்பதனால் என்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து ஜனநாயக மாதர் சங்கம் போன்ற அமைப்புகளில் இணைந்து செயல்படத் தொடங்கினேன்.
“பிரச்னைகளில் இருக்கும் பெண்களுக்குத் தீர்வுகளைத் தருவதன் மூலம் என்னை நானே உறுதியானவளாக செதுக்கிக் கொண்டேன். இதனால் தனியாக இருக்கும் வேலைக்குச் செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை எதிர்கொள்ளும் சக்தியையும் எனக்கு நானே வளர்த்துக்கொண்டேன்.”
சமுதாயத்தின் கேலிப்பார்வைகள் என் மீது விழாதபடியாக நான் கட்டமைத்த வாழ்க்கை முறையானது என்னை என்றுமே தலைகுனிவாக பார்க்காமல் தலை நிமிர்ந்து பார்க்கவே செய்தது.
குடும்ப வாழ்வில் தோற்றுப்போகும் பெண்கள் எடுக்கும் தவறான முடிவுகளில் இருந்து காப்பாற்றி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்ட வேண்டும் என்ற உணர்வு எனக்குள் எப்போதுமே இருந்து வந்தது. கஷ்டங்களில் இருக்கும் பெண்களுக்கு ஆலோசனைகளைக் கூறும் சேவைகளையும் கூட செய்து வந்திருக்கிறேன்.
பலர் தன்னுடைய வாழ்க்கையின் சோகங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் ஆனால் நான் எப்போதுமே என்னுடைய வாழ்க்கையின் கடினமான பக்கங்களையும் அதனை வென்று வந்த விதத்தையும் சொல்லத் தயங்கியதே இல்லை என்கிறார் கிருஷ்ணகுமாரி.
என்னுடைய வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதை நான் என்றுமே தாழ்வாக நினைத்ததில்லை. வாழ்க்கை ஏணி எல்லோருக்கும் ஏற்றம் தருவதில்லை, நமக்கு வாழ்க்கை எதுவரை இருக்கிறதோ அது வரை வாழ்ந்து தான் காட்ட வேண்டும். நானே இருக்கும் போது அவர்கள் ஏன் இருக்கக் கூடாது என்ற எண்ணம் தோன்ற வேண்டும் என்பதற்காகவே என்னுடைய கஷ்டமான பக்கங்களை பகிர்ந்து கலக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு உத்வேகம் கொடுப்பேன்.
மாதர் சங்கத்தில் வன்கொடுமைகள் பற்றிய ஆலோசனை கமிட்டியிலும் நான் செயலாற்றி இருக்கிறேன். பிரச்னைகளோடு வருபவர்களுக்கு தகுந்த தீர்வைத் தருவோம், குடும்ப வாழ்வில் இருந்து பிரிந்து வருதல் என்பது கடைசி நிலையே, அதற்குள்ளாக சிறு சிறு மனஸ்தாபங்களை சரிசெய்து சிறப்பான வாழ்க்கையை அவர்களுக்கு ஏற்படுத்தித் தர வழிகள் இருக்கின்றனவா என்று பல பெண்களுக்கு ஆலோசனை கூறி இருக்கிறேன் என்கிறார் இவர்.
அரசுப் பணி, பெண்கள் அமைப்பில் சேவை என்று காலம் சுழன்று கொண்டிருக்க மகன்களையும் படிக்க வைத்து இருக்கிறார். முதல் மகன் சார்ட்டர்ட் அக்கவுண்டன்டாக ஆஸ்திரேலியாவில் பணிபுரிய, இளைய மகன் என்ஜினியரிங் முடித்து விட்டு அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தில் பணியில் இருக்கிறார். மகன்களின் திருமண பத்திரிக்கைகளில் கூட கிருஷ்ணகுமாரி என்று தன்னுடைய பெயரை மட்டுமே போட்டுக் கொண்டு சமுதாயத்திற்கு புதிய பாடத்தை கற்றுத் தந்திருக்கிறார் இவர்.
26 ஆண்டுகள் அரசுப் பணியில் இருந்தவர் வயது மற்றும் பேரப்பிள்ளைகளின் வருகையால் VRS வாங்கிக்கொண்டு அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டார்.
“வயதாகிவிட்டது முன்போல் வெளியில் செல்வதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை, இருப்பினும் பெண்கள் முன்னேற்றத்திற்கான என்னுடைய சேவையைத் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டும் மாற்றம் வரவே இல்லை. விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் ஓராண்டு வடசென்னையில் குழந்தைகள் உரிமை மற்றும் கல்விக்காக செயல்படும் அரசு சாரா அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து செயல்பட்டேன்.”
அங்கு சென்று சேவை செய்த போது தான் மனிதர்களின் மறுபக்கம் தெரிந்தது, வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களில் பெண் குழந்தைகளின் அவல நிலை,குழந்தைத் திருமணங்கள் உள்ளிட்ட பல சீர்கேடுகளை நேரடியாகக் கண்டேன், என்கிறார் கிருஷ்ணகுமாரி.
பெண்கள் தனி பொருளாதார சுதந்திரம் அடைவதற்கு அவர்களுக்கு சுயதொழில் வேலைவாய்ப்புகளை கற்றுத் தர வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. இதன் விளைவாக SWAN பவர் பிரெய்ன் அகாடமி என்ற பயிற்சிப் பள்ளியைத் தொடங்கி அதன் மூலம் தையல் கலை, ஆரி கலைப்பயிற்சி, ஆசிரியர் பயிற்சி, மான்டிசோரி பயிற்சி, மாணவர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு அபாகஸ், வேதிக் கணிதப் பயிற்சிகளை கற்றுத் தரத் தொடங்கினேன். கலைப் பயிற்சிகளுக்கு மட்டும் தனியே பயிற்றுநர்கள் இருக்கிறார்கள்.
கற்றுக் கொள்ள வரும் பெண்களைப் பொறுத்து கட்டணம் பெறுகிறேன், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களுக்கு கட்டணச் சலுகைகளுடன் பயிற்சிகளை வழங்கி வருகிறேன். சமூக ஊடகங்களில் வெளியிடும் விளம்பரங்களைப் பார்த்து இதுவரை 30க்கும் மேற்பட்ட பெண்கள் மான்டிசரி உள்ளிட்ட பயிற்சிகளைப் பெற்று தனியாக பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியுள்ளனர். கோவிட் பெருந்தொற்று காலத்தில் இதர பயிற்சிகள் நிறுத்தப்பட்டாலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் அபாகஸ் மற்றும் வேதிக் கணினிப் பயிற்சியை கற்றுத் தந்து கொண்டிருக்கிறேன்.
சென்னை மேடவாக்கத்தில் வசித்து வரும் இவர், தன்னுடைய வீட்டின் மாடியிலேயே பயிற்சி பள்ளியை நடத்தி வருகிறார். குடும்ப வாழ்வு சரியாக அமையாமல் பலமுறை காவல்நிலைய வாசல் வரை சென்று குற்றச்சாட்டுகளை சுமந்து கொண்டும், பலர் கண் முன்னே கை நீட்டி அடிக்கும் கணவனின் கொடுமை என்று பல அவமானங்களை சுமந்து கொண்டு மகன்களின் விருப்பப்படியே தனித்து வாழ்ந்து வெற்றி கண்டு இருக்கிறார் கிருஷ்ணகுமாரி.
அப்பாவின் துணை இல்லாததால் மகன்கள் வழிதவறி விட்டார்கள் என்று யாரும் என் மகன்களை சொல்லிவிடக் கூடாது என்ற வைராக்கியமே என்னை இப்படி மனஉறுதியோடு ஓட வைத்தது. அன்பு, பாசம், கல்வி, வேலை என எதிலுமே என் மகன்களுக்கு எந்தக் குறையும் நான் வைத்ததில்லை அதனால், அவர்களுக்கு அப்பா என்ற நினைப்பு வரவே இல்லை. மேலும் நிதர்சனத்தை புரிந்து கொண்டு எங்களுக்காக அவமானங்களை சகித்துக் கொண்டிருக்க வேண்டாம் என்று அவர்கள் சொன்னதாலேயே குடும்ப உறவில் இருந்து வெளியேறினேன் என்கிறார் இந்த பீனிக்ஸ் பெண்.
சுமார் 10 ஆண்டுகள் தான் பணியாற்றிய அரசுத் துறையில் தொழிலாளர் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டிருக்கிறார் கிருஷ்ணகுமாரி. தொடக்கத்தில் என்னால் முடியுமா என்று ஏளனமாகப் பார்த்தவர்களும் கூட நான் மிகவும் தைரியமானவள் என்று பாராட்டி விட்டுச் செல்லும் அளவிற்கு துணிவின் துணையோடு எடுத்த காரியத்தில் ஜெயம் கண்டேன் என பெருமைப்படுகிறார் கிருஷ்ணகுமாரி.
குழந்தைகள் உலகென்றால் தன்னை மறந்துவிடும் இவர், குழந்தைகளுடனான பிணைப்பை அதிகப்படுத்திக் கொள்வதற்காக வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொண்டு இருக்கிறார். பின்னர், அவர்களுக்கு ஏற்றாற் போல நல்ல விஷயங்களை கற்றுத் தருதல், ஆன்மிகக் கதைகளைக் கூறுதல், பெண்கள் முன்னேற்றம் என பல விஷயங்களை பொம்மைகளை தானே செய்து பொம்மலாட்டம், வில்லுப்பாட்டுகளை பாடுதல், கதாகாலட்சேபம் செய்தல் உள்ளிட்டவற்றையும் செய்து வருகிறார்.
இந்தப் பணிகளைப் பாராட்டி இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் கோல்டன் கிரவுட் விருதை வழங்கி கவுரவித்திருக்கிறது. ஊரணி அமைப்பின் Working women achiever மற்றும் சுயசக்தி விருதையும் பெற்றிருக்கிறார் இவர்.
பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும், தன்னம்பிக்கை வேண்டும். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் அவசியம், அதே சமயம் குடும்பம் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவும் முக்கியம்.
பெண் தொழில்முனைவோர் குடும்பத்தின் கருத்தையும் கேட்டு தொழில் தொடங்கினால் நேர்மறையாகவே நடக்கும். நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். மற்றவர்களோடு ஒப்பிடாமல் தாழ்வாக நினைக்காமல் இருக்க வேண்டும், ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பு இருக்கிறது என்பதை உணர்தல் அவசியம். நேர்மறை சிந்தனையும், நேர்மையான நடத்தையும், வெளிப்படையான வாழ்க்கையும் நல்லவற்றையே கொண்டு வந்த சேர்க்கும் என்று 63 வயதிலும் சற்றும் உற்சாகம் குறையாமல் பேசுகிறார் கிருஷ்ணகுமாரி.