மாதம் ரூ.2 லட்சம் வருமானம், 300 பெண்களுக்கு பயிற்சி: ஜான்சியின் ஹோம்மேக்கர் டூ ஹோம்ப்ரூனர் பயணம்!
உடுமலைப்பேட்டையில் புகுந்த வீட்டுக்குச் சென்ற பின் பொழுதுபோக்காய் தொடங்கிய பார்லர் தொழில், கணவர் மறைவுக்குப் பின் அத்தியாவசியமாக, இன்று நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறார் ஜான்சி ராணி.
ஊரில் மூலைக்கு மூலை முளைத்திருக்கும் பியூட்டி பார்லர்களின் வருகை, அழகு பதுமைகளுக்குக் கூடுதல் அழகூட்டியது மட்டுமின்றி குடும்பம், குழந்தை என சிறுவட்டத்துக்குள் வாழ்ந்த பெண்களை சிறகு விரித்து உலகை காண வைக்கும் தொழிலாகவும் உள்ளது. குறைந்தபட்ச தொழில் நுணுக்கத் திறனும், அழகுக் கலை மீதான காதலும் இருந்தாலே அவர்களை தொழில் முனைவோர்களாக்கி அழகு பார்க்கிறது அழகு நிலையத் தொழில். இத்தொழிலை 96-லே தொடங்கி, இரு தசாப்தங்களுக்கும் மேலாக வெற்றிகர தொழில் முனைவராக மின்னுகிறார் ஜான்சி ராணி.
50 ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்திலிருந்து மிலிட்டரி மேன் அப்பாவின் டிரான்ஸ்பர் காரணமாக தலைநகர் சென்னையில் குடியேறியது ஜான்சிராணியின் குடும்பம். 85’களில் பருவ வயதான ஜான்சி ராணி, அவரது அக்காவுடன் இணைந்து பிளாக் அண்ட் ஒயிட் டிவிக்களுக்கான ப்ளூ கண்ணாடி, ஆன்டனாக்களை மொத்த கொள்முதல் சில்லறை விற்பனை கடைகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். அது அவரது தொழில் முனைவு பயணத்தின் முதல் படியே...
திருமணத்துக்குப் பிறகு, பியூட்டி பார்லர், ரியல் எஸ்டேட், காஸ்மெட்டிக் பொருள்கள் தயாரிப்பு, ஸ்வீட் கடை, ஜிம் என பல பரிணாமங்களில் தொழில் புரிந்தவரது டாப் பேவரைட் அவரது ‘சாந்தினி லேடீஸ் பியூட்டி பார்லர்’. புகுந்த ஊரான திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டையில் உள்ளது இந்த பார்லர்.
“கல்யாணத்துக்கு முன், எங்க வீட்டுக்கு பக்கத்துல பரிமளானு ஒரு அக்கா பியூட்டி பார்லரில் வேலை பார்த்தாங்க. நான் சொல்றது 80’களில் நடந்தது. ஒவ்வொரு நாளும் வேலைக்கு போயிட்டு வந்து அங்கு நடந்ததை கதை கதையா சொல்லுவா ங்க. எங்களுக்கு புருவம் எடுத்து விடுவாங்க. அவங்கள பார்த்து எனக்கு லைட்டா ஒரு இன்ட்ரஸ்ட் வந்தது.
கல்யாணத்துக்கு பிறகு, வீட்டுல சும்மாவே இருப்பது பயங்கர போர். என் கணவர் ஏதாவது படிக்க தோணுச்சுனா படினு சொன்னாரு. சரினு பியூட்டிஷியன் கோர்ஸ் படிச்சேன். நான் கோர்ஸ் முடிச்சு வர்றதுக்குள்ள, உடுமலைப்பேட்டையில் பஸ்ஸடாண்ட்டுக்கு பக்கத்தில யுகேபி காம்ப்ளக்சில் ஒரு ஷாப்பில் பக்காவாக பார்லரை ரெடி பண்ணி வைத்திருந்தார். எனக்கு இந்த விஷயத்தை கேட்டு பயங்கர ஷாக்கு.”
நான் வீட்டிலே சின்னதா இடம் ஒதுக்கி பார்லர் செட் பண்ணிக்கிட்டா, குழந்தைகளையும் பாத்துக்கலாம்னு ஐடியா பண்ணி வச்சிருந்தேன். குருவி தலையில பனங்காயை வச்ச கதையா ஆகிருச்சு. என் கணவர் எனக்கு முழு பக்கபலமா இருந்தாங்க. அக்சுவல்லா, இந்த பார்லர் ஓபன் பண்ண கூடாதுனு சொன்ன அவரோட அண்ணன், தம்பி கூட சண்டை போட்டாங்க.
1996ம் ஆண்டில் அழகு பராமரிப்பு குறித்த பரவலான விழிப்புணர்வு இல்ல. அப்போ, பார்லர் ஷாப்னா பார்பர் ஷாப் என்கிற எண்ணம் அவர்களுக்கு. எதுக்கு நம்ம அண்ணி அந்த வேலைய பாக்கணும்னு புகுந்த வீட்டுக்காரங்க விடலை. ஆனா, அவரு என்ன நம்பி ரூ.1,00,000 முதலீட்டில் எனக்காக பார்லர் வச்சுக்கொடுத்தார். காலையில பிள்ளைங்களை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு மதிய சாப்பாடை கட்டிக்கொண்டு பார்லருக்கு போயி உட்கார்ந்திருவேன். காலையில முழுக்க சும்மாவே உட்கார்ந்திட்டு, மதியம் சாப்பிட்டு தூங்கி எந்திரிச்சு வீட்டுக்கு வந்திருவேன். ஒன்னு, இரண்டு நாளு இல்ல முழுசா ஒரு வருஷம் பார்லரை ஈ, காக்ககூட எட்டிப்பார்க்கலை,” என்கிறார் ஜான்சி.
தொழிலை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றதும் அவரு தான். ஊருல எங்கயாச்சும் கோவில், சர்ச், மசூதில திருமணம் நடந்தா அங்க எங்க பார்லர் பேனர் இருக்கும். நிறைய நோட்டீஸ் கொடுப்பாங்க. அவங்க ஒரு ஸ்வீட்ஸ் கடையும், ஜிம்மும் நடத்திவந்தாங்க. திருமணம்னு ஸ்வீட்ஸ் கடைக்கு ஆர்டர் கொடுக்க வர்றவங்க, திருமணத்திற்கு நிதிஉதவி கேட்பவர்களுக்கு உடனே பணம் கொடுப்பாங்க. ஒரு கட்டத்தில அதுவே என் பார்லர் தொழிலுக்கான விளம்பரமாகியது.
1998-2000ம் ஆண்டில் ஊத்திவைத்த காஃபியை குடிக்க முடியாத அளவுக்கு பிஸி ஆயிட்டேன்,” என்கிறார். 1998ம் ஆண்டு முதல் 2000ம் வரை பிசினஸ் டாப் கியரில் சென்று, மாதத்திற்கு 30-40 மணப்பெண் அலங்காரத்திற்கான புக்கிங் குவிந்துள்ளது.
பார்லருக்கு எப்போதுமே 6 மாதம் உழைப்பு, 6 மாதம் ஓய்வு... ஆனால், ஜான்சி ராணியின் பார்லருக்கோ 12 மாதங்களும் படையெடுத்தது மகளிர் கூட்டம். அதற்கான காரணங்களுள் ஒன்று அவரது கைவண்ணத்தில் அலங்கரிக்கப்படும் மாறுவேடப் போட்டிக்கான ஒப்பனைகள். பள்ளிக்குழந்தைக்களை மாறுவேடத்தில் அலங்கரிப்பதற்காக 150க்கும் மேற்பட்ட பிரபலங்களின் ஆடைகளை வாங்கி வைத்துள்ளார். அத்துடன், ‘சாந்தினி ஹெர்பல் புராடெக்ட்ஸ்’ என்ற பெயரில் ஹேர் ஆயில், ஷாம்பு, பேஸ் கீரிம், பேஸ் வாஷ், பேஸ் பேக் ஆகியவற்றையும் தயாரித்து விற்பனை செய்கிறார்.
“பிசினஸ் பிக்-அப்பாகிய உடன் ரெஸ்ட் எடுக்க நேரமில்லாமல் போச்சு. நம்மள நம்பி யாராச்சும் புக் பண்ண வந்துட்டாங்கனா, ஆல்ரெடி புக்கிங்ஸ் இருந்தாலும் அவங்களுக்கு நோ சொல்ல மாட்டேன். ஜப்பான், தாய்லாந்து, ஆஸ்திரேலியாவில் கூட என்னோட கஸ்டமர்ஸ் இருக்காங்க. தமிழ்நாட்டுக்கு வந்தா என்கிட்டா தான் வருவாங்க. என்னோட கஸ்டமர்ஸ் எல்லாரும் என்ன அம்மானு தான் சொல்லுவாங்க. சொந்த விஷயமெல்லாம் பகிர்ந்துவிட்டு, அம்மா வீட்டுக்கு வந்து போன மாதிரி இருக்குனு சொல்லுவாங்க.
எனக்கும் என்னோட பார்லர் என் தாய்வீடு. தாய்வீடு கொடுத்த காசை ரியல் எஸ்டேட்டில் முதலீடாக்கினேன். 2007ம் ஆண்டில் ரியல் எஸ்டேட் நல்ல பீக்கிலிருந்த சமயம். ஒரே ஆண்டில் என்னோட ரூ.2லட்சம் முதலீடு ரூ.50 லட்சமாக பெருகியது,” என்றார்.
வெற்றி படிக்கட்டுகளை மட்டுமே ஏறிக்கொண்டிருந்த வேளையில், சாந்தினி சந்தித்த சவால்களை பற்றி தொடர்ந்து பகிர்ந்தார் ஜான்சிராணி...
திடீரென 16 வருஷத்துக்கு முன்னாடி கணவர் எங்களை விட்டு போயிட்டாரு. அம்மாவாக மட்டுமின்றி, அப்பாவா இருக்க வேண்டிய சமயம். உடுமலைப்பேட்டையில் ‘லெட்சுமி ஸ்வீட்ஸ் கடை’-யும், ஜிம்மும் அவர் நடத்தி வந்தாரு. அந்த பொறுப்பும் எனக்கு வந்து சேர்ந்துச்சு. காலையில 8மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினா, ஸ்வீட்ஸ் ஷாப், ஜிம், பார்லர்-னு ரவுண்ட்சிலே இருப்பேன். வேலை முடிச்சு வீடு திரும்பும் போது மணி 9 ஆகிருக்கும். இப்படியே 3 வருஷங்கள் ஓடிபோச்சு.
பிள்ளைகளுக்காக நேரம் ஒதுக்கவே முடியல. ஏன், அவர் தவறிபோனத நினைச்சு வருத்தப்படக்கூட எனக்கு நேரமிருக்காது. ஒரு கட்டத்தில போதும்னு ஸ்வீட்ஸ் ஷாப்பையும், ஜிம் எல்லாம் விட்டுவிட்டு பார்லரை மட்டும் கவனிக்க ஆரம்பிச்சேன்.
ஒரு நாள் எப்பவும் போல பார்லர் அடைச்சிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். எமர்ஜென்சி லைட்டு சார்ஜிலே இருந்திருக்கும் போல, சார்ஜ் ஃபுல்லாகி ஒயர் மெல்டாகி பெரிய தீ விபத்தாகிருச்சு. சேர், ஏ.சி, கண்ணாடி, சில மெஷின்கள், பியூட்டி புரோடெக்ட்ஸ்-னு மொத்தமா எரிஞ்சுபோச்சு. ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்துபோனது.
அந்த சமயத்தில் என் ப்ரெண்ட் சாந்தினு ஒரு பொண்ணு தான் எனக்கு ரொம்ப சப்போர்ட்டா இருந்தா. தெரிஞ்சவங்க கிட்டலாம் பணம் வாங்கிக் கொடுத்து, பார்லரை புதுப்பிக்க உதவினா. நட்புனா என்னனு தெரியுமா? என்பது போன்ற நண்பி அவங்க.
மீண்டும் பார்லர் புது லுக்கில் ரெடி பண்ணோம். தீபாவளி அன்னிக்கு மட்டும் தான் பார்லர் லீவ். அதுவும் காம்ப்ளக்ஸ்காரங்க கண்டிப்பா லீவு விட்டாகணும்னு சொன்னதால, அன்று விடுமுறை.
பீக் டைம் பொறுத்து பார்லர் எனக்கு ரூ.60,000 முதல் ரூ.2,00,000 வரை சம்பாதித்து கொடுக்கிறது. காஸ்மெட்டிக் பொருள்கள் மட்டும் மாதம் ரூ.20,000 முதல் ரூ.30,000-க்கு விற்பனையாகும்.
பார்லர் தொழிலில் பணம் பார்க்கலாம், அது புகழின் உச்சாணியிலும் அமர வைக்கும். ஆனால், பந்தங்களுடன் பிணைப்பாக இருக்க முடியாது. முகூர்த்த நாட்களில் தான் நமக்கு வேலை. நம்ம வீட்டு விசேஷங்களையும் அதே முகூர்த்த தினத்தில் தான் வைப்போம். அதனால், நிறைய வீட்டு விசேஷங்களில் என்னால கலந்து கொள்ள முடியாமலே போயிரும்.
குடும்பமே கிளம்பி டிரிப் போனாங்கனா, நான் மட்டும் போக மாட்டேன். இந்த மாதிரி நிறைய சந்தோஷங்களை அனுபவிக்காமல் விட்டுடேன். அதெல்லாம்கூட பரவாயில்லை,
இந்த வேலையால எங்க அப்பாவோட கடைசி முகத்தை பார்க்கமுடியாமல் போயிருச்சுனு தான் கஷ்டமாகயிருக்கும். அப்பா தவறிட்டாங்கனு எனக்கு நைட்டு போன் வந்தது. நான் அப்போ மணப்பெண்ணுக்கு மேக்கப் போட்டிட்டு இருக்கேன். காலையில கல்யாணம். வேற வழியேயில்லாமல் காலையில மேக்கப் முடிச்ச அப்பறம், கிளம்பி போனேன். ஆனா, அதுக்குள்ள வயசானவங்கன்றதால செய்ய வேண்டியதை எல்லாத்தையும் பண்ணிட்டாங்க. கடைசியா எங்க அப்பாவோட முகத்தை பார்க்க முடியாம போச்சு,” என்று மனம்வருந்தி தெரிவித்தார் அவர்.
ஆனால், இன்றும் எங்கே பியூட்டிஷியன்களுக்கான வொர்க் ஷாப் நடந்தாலும், ஜான்சிராணி அங்க ஸ்டூடன்ட். இதுவரை 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பியூட்டிஷியன் பயிற்சி அளித்து, அவர்களது வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்துள்ளார். அவரது ஸ்டூடன்ஸ் எல்லாரும் இப்போது அவரது போட்டியாளர்கள். ஆனால், அவரோ அவர்களை அக்கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை...
“என் கிட்ட முறையா பயிற்சி எடுத்தவங்க தவிர்த்து, பார்லரில் உதவியாளரா 25 வருஷத்துல 300க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்துள்ளார்கள். என்கிட்ட பயிற்சி எடுத்து கொண்ட எல்லோருமே இப்போ பார்லர் வச்சிருக்காங்க. உடுமலைபேட்டையில மட்டும் மொத்தம் 560 பார்லர்கள் உள்ளது.
“நான் வச்சிருக்க இதே காம்ப்ளக்சிலே 8 பேர் புதுசா பார்லர் ஓபன் பண்ணியிருக்காங்க. அவங்களை கடந்துதான் மேல்மாடியில் உள்ள என் பார்லருக்கே வரணும். ஆனா, எனக்கு இத்தன பெண்கள் வெளில வந்து சொந்த கால்ல நிக்குறது பார்க்குறது ரொம்ப சந்தோஷமாக தான் உள்ளது,” என்று மகிழ்ந்து கூறும் ஜான்சிராணி, வீட்டில் இருந்தபடியே தொழில் செய்து வருவாய் ஈட்டும் பெண்களை கவுரவிக்கும் ’சுயசக்தி விருது’ பெற்றவர்.