8000+ தமிழ்ப் பெண்கள் ஃபிட் ஆக உதவிய இன்ஸ்டாகிராம் பிரபலம் ‘மஞ்சுளா’
கராத்தேவில் தேசிய அளவிலான போட்டியில் ஜெயித்தவரான மஞ்சுளா, தற்போது இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பிரபலமாகி ஆயிரக்கணக்கான பெண்களுக்கு ஆன்லைன் மூலமாக ஃபிட்னஸ் பயிற்சியளிப்பதை வெற்றிகரமாக செய்து வருகிறார்.
‘எந்தத் தொழிலையும் நன்கு அறிந்தவர்களின் ஆலோசனையைக் கேட்டுக்கொண்டு தொடர்ந்து செய்தால் வெற்றி நிச்சயம்,’ என்கிறார் பெண்களுக்கான ஃபிட்னஸ் பயிற்சியாளர் மஞ்சுளா.
கராத்தே போட்டியில் தேசிய அளவில் வெற்றிபெற்றவர் மஞ்சுளா. தற்போது ஃபிட்னஸ் பயிற்சியாளராக ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பயிற்சியளித்து வருகிறார். சமூக வலைதளத்தில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் ரீல்ஸ் பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுகின்றன.
மஞ்சுளா அளிக்கும் பயிற்சிகள் மட்டுமல்ல அவரின் வாழ்க்கையும் எல்லா பெண்களுக்கும் உத்வேகத்தைத் தரக்கூடியது என்பது அவரிடம் பேசியபோது புரிந்தது.
யார் இந்த மஞ்சுளா?
சின்ன வயசுலயே வீட்டுக்குப் பக்கத்துலயே ஓட்டப் பந்தயம் வைக்கிறதுல கலந்துக்கறதுல அதிக ஆர்வம் இருக்கும். பள்ளிக் காலத்துலயும் ஓட்டப்பந்தயத்துல அத்லெடிக் அந்த மாதிரி போட்டிகள்ல ஆர்வமா கலந்துகிட்டு ஜெயிச்சிருக்கேன். அதுக்கப்புறம் நான் பெருசா படிக்கறதுக்கான சூழல் இல்லை, அதனால ஒன்பதாவதை பாதியிலேயே நின்னுட்டேன்.
அதுக்கப்புறம் சின்னச்சின்ன இடங்கள்ல மாசம் ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை செஞ்சிருக்கேன். அப்படி 1999-ல நான் போன இடத்துல ஒருத்தர் கராத்தே மாஸ்டரா இருந்தாங்க. அப்போ எனக்கு கராத்தே கத்துக்கணும்னு ஆர்வம் வந்தது. அதனால அவர்கிட்ட வேலை செஞ்சுகிட்டே கராத்தே கத்துக்க ஆரம்பிச்சேன்.
ஸ்டேட்ஸ், நேஷ்னல்ஸ் எல்லாம் போய் வின் பண்ணேன். 2005-ல ப்ளாக் பெல்ட் வாங்கற வரைக்கும் அப்படியே போச்சு. கல்யாணம் ஆனப்புறமும் என்னோட கராத்தேவை நான் விடலை. நிறைய பேருக்கு கராத்தே க்ளாஸ் எடுத்துகிட்டிருந்தேன். அதுக்கப்புறம்,
“கொரோனா ஊரடங்கு காலத்துல கராத்தே க்ளாஸ் எடுக்க முடியாம இருந்தது. அதோட உயிருக்குப் பயமான ஒரு பதட்டமான சூழல் இருந்தது. அதனால இன்ஸ்டாகிராம்ல ஃபிட்னஸ் ரிலேட்டடா ரீல்ஸ் போடலாம்-னு நினைச்சேன். அதுக்கு முன்னாடிதான் ஃபிட்னஸ் பயிற்சி ஒண்ணு முடிச்சிருந்தேன். அதனால விமன் ஃபிட்னஸை ஃபோகஸ் பண்ணலாம்-னு முடிவு பண்ணி ஆரம்பிச்சதுதான்,” என பகிர்ந்தார் மஞ்சுளா.
ஃபிட்னஸுக்குள் வந்தது எப்படி?
நான் கராத்தே கத்துகிட்டப்பவே விமன் ஃபிட்னஸ் ரிலேட்டடா ஏதாவது பண்ணணும்கிற ஃபோகஸ் அதிகமா இருக்கும். அதைப்பத்தியே யோசிச்சுகிட்டும் இருப்பேன். அதனால ஊரடங்குக்கு முன்னாடியேரெண்டு தடவை மகளிர்க்காக மாரத்தான் நடத்தினேன். வழக்கமா நானும் மாரத்தானுக்குப் போவேன், அதுபோல நம்ம பகுதியில இருக்குற பெண்களுக்காக நாம நடத்தினா என்னன்னு 2016, 2017 ரெண்டு வருஷமம் மாரத்தான் நடத்தினேன்.
அதுக்கப்புறம்தான் ஃபிட்னஸ் ட்ரெய்னர் ஒருத்தவங்ககிட்ட ஃபிட்னஸ் கோர்ஸ் பண்ணேன். அதுக்கப்புறமா லாக்டவுன் வந்ததால, நிறைய பேர் எதெதுக்கோ ரீல்ஸ் போட ஆரம்பிச்சாங்க. அப்போ என்னோட சிஸ்டர் ஒருத்தவங்க இருக்காங்க, அவங்க சைக்காலஜிஸ்ட், அவங்கதான் ஃபிட்னஸ் ரிலேட்டடா ரீல்ஸ் போடலாம் நமக்கும் எனர்ஜியா இருக்கும், மத்தவங்களுக்கும் ஒரு மோட்டிவேஷனா இருக்கும்-னு சொன்னாங்க. அதுக்கான எல்லா வேலைகளையுமே அவங்கதான் பண்ணாங்க.
“அப்ப ஹெல்த் ரிலேட்டடா விமனுக்கான ஒரு ஃபிட்னஸ் ட்ரெய்னிங்-னு தமிழ்ல ஸ்டார்ட் பண்ணோம். அப்படிதான் விமனுக்கான இந்த 21 டேஸ் சேலஞ்ச்- ஆரம்பிச்சோம். என் சிஸ்டர் சைக்காலஜிஸ்ட்-ங்கிறதுனால இந்த சேலஞ்ச்-ல விமனுக்கான மெண்ட்டல் ஹெல்த்தை அவங்க பாத்துக்கறாங்க. இப்படி அவங்களோட சேர்ந்துதான் இதைப் பண்ணிகிட்டிருக்கோம்.”
இன்ஸ்டாவில் ஃபோகஸ் செய்தது எப்படி?
முதன்முதல்ல இன்ஸ்டா யூஸ் பண்ண ஆரம்பிச்சப்போ எங்களுக்குக் கொஞ்சம் சவாலாதான் இருந்தது. டெக்னிக்கலா ரீல்ஸ் எடுத்துப் போடறது எல்லாமே புதுசா இருந்ததால அதிக நேரம் எடுத்தது. அதுக்குன்னு பேஜ் தொடங்கினப்புறம் தமிழ்ப் பெண்களை ஆரோக்கியமா மாத்தறதுக்கான ஒரு விஷயமா எடுத்துப் பண்ணும்னு அதுலயே ஃபோகஸா இருந்ததால அதை எப்படி எளிமையா கொண்டுபோய்ச் சேர்க்கலாம்-னு யோசிச்சு செஞ்சோம்.
“அது முழுக்க முழுக்க தமிழ்ப் பெண்களுக்கானதா மட்டுமே இருக்கணும், மத்த மொழிக்காரங்களை எல்லாம் கனெக்ட் பண்ணிக்க வேண்டாம்-னு முடிவு பண்ணோம். அதை ரெண்டு வருஷமா தொடர்ந்து பண்றதுக்கு முக்கியக் காரணம் என்னோட சிஸ்டர்தான். கன்டெண்ட் க்ரியேட் பண்றதுலேர்ந்து ரீல்ஸ் போஸ்ட் பண்ற வரைக்கும் எல்லா வேலையையும் அவங்கதான் பார்த்துக்கறாங்க. ஃபிட்னஸ் ட்ரெய்னிங்-க்கான ரீல்ஸ் க்ரியேட் பண்றது மட்டும் நான் பார்த்துக்கறேன். இதை நாங்க கன்சிஸ்டன்டா தொடர்ந்து பண்றதால எங்களோட ப்ராஜக்ட் சக்சஸ்ஃபுல்லா போய்கிட்டிருக்கு,” என்றார் மகிழ்ச்சியாக.
வெற்றிகரமான தொழில் முனைவோராக ஆனது எப்படி?
இதுக்கு முன்னாடியும் ஃபிட்னஸ் க்ளாஸ் எல்லாம் எடுத்திருக்கோம் அதோட ப்ராசஸ் ஆரம்பிச்ச இடத்துலயேதான் இருந்தது. ஆனா இன்ஸ்டால பண்ண ஆரம்பிச்சப்புறமா அதுக்காக நிறையா ஹோம் ஒர்க் பண்ணோம். சீனியர்ஸ்கிட்ட பேசினோம், நிறைய பேருக்கிட்ட இதுக்கான கைடன்ஸ் எடுத்துக்கிட்டப்புறம் அதுக்கான அட்வர்டைஸ்மண்ட் பண்றது எல்லாமே தெரிய வந்தது.
என்னோட ப்ரொகிராமை எடுத்துகிட்டீங்கன்னா அது நான் மட்டும் பண்றது இல்லை. அதுல டைட்டீஷியன் இருக்காங்க எல்லாருக்குமான உணவுத் திட்டத்தை அவங்கதான் தயாரிக்கறாங்க. அப்புறம் சைக்காலஜிஸ்ட் இருக்காங்க, எல்லாரோட மெண்ட்டல் ஹெல்த்துக்கான கைடன்ஸ் கொடுக்கறது, அவங்களோட ஹேபிட்ஸை சேஞ்ஜ் பண்றதுக்கான அட்வைஸ் கொடுக்கறது எல்லாத்தையும் அவங்கதான் பார்த்துக்கறாங்க.
அதனால எங்களோட வெற்றிக்கு இந்த கட்டமைப்புதான் ரொம்ப முக்கியமா இருக்கு. கவர்ன்மெண்ட் கைடன்ஸ்லேர்ந்து எல்லாத்தையும் அப்டேட் பண்ணி கரெக்ட்டா பண்ணிகிட்டிருக்கோம்.
”இதுல ரொம்ப முக்கியமான விஷயமே ஒரு வேலையை நாம எடுத்தோம்ன்னா இன்னைக்குப் பண்ணிட்டு நாளைக்கு மூடு இல்ல அதனால நான் பண்ணலை அப்படீன்னு இல்லாம, அதைத் தொடர்ச்சியா பண்ற கன்சிஸ்டன்ஸி கட்டாயம் இருக்கணும். நம்மளை நம்பி வர்றவங்க அஞ்சு பேரா இருந்தாலும் பத்துப் பேரா இருந்தாலும் நம்மளோட முழு ஃபோகஸையும் கொடுத்து கரெக்ட்டா க்ளாஸ் எடுக்கணும். நாம சொன்ன டைமுக்கு முன்னாடியே அவங்க முன்னாடி இருக்கணும், அவங்க நம்மளை வேல்யூ பண்றாங்கன்னும்போது அந்த ஆனஸ்ட்டிய நாம விட்டுடக் கூடாது. பணத்தை மட்டும் குறிக்கோளா வச்சுக்காம அவங்களுக்கு என்ன வேணும்கிறதைப் புரிஞ்சுகிட்டு அந்த வேல்யூஸை நாம மதிக்கணும். நாம என்ன பிஸ்னஸ் பண்ணாலுமே அந்த வேல்யூஸ் ரொம்ப முக்கியம். இதையெல்லாம் நாங்க சரியா கடைபிடிக்கறதால எங்களால வெற்றிகரமா பண்ண முடியுது,” என்கிறார்.
அதேபோல், எந்த விஷயத்தை ஆரம்பிச்சாலும் நமக்குத் தெரியும், இல்லாட்டி நமக்குத் தெரியற அளவுல மட்டுமே வச்சிப் பண்ணிப்போம்-னு நினைப்பாங்க. அவங்க எவ்ளோதான் டேலண்ட்டான ஆளா இருந்தாலும் தொழில் ஒரு கட்டத்துல முடங்கிப் போறதுக்கு அதுதான் காரணம். அப்படி இல்லாம அதைப்பத்தி நல்லா தெரிஞ்சவங்களோட கைடன்ஸைக் கேட்டு சிலரோட சப்போட்டோட பண்ணும்போது எதுவுமே வெற்றிகரமா நடக்கும்.
எவ்வளவு பெண்களுக்கு என்ன மாதிரியான பயிற்சிகளை அளிக்கிறார்?
கடந்த இரண்டரை வருஷத்துல எட்டாயிரம் பெண்கள் எங்க ஃபிட்னஸ் சேலஞ்ச்ல கலந்துகிட்டிருக்காங்க. இதுல நான் ரொம்ப முக்கியமா பார்க்கறது என்னன்னா பெண்களின் வலிமையை கட்டமைக்கறதுக்கான ஒரு திட்டமாதான் இது இருக்கும். அதைத்தான் நாங்க அதிகமா ஃபோகஸ் பண்றோம். அதுக்கு என்னக் காரணம்னு பார்த்தீங்கன்னா பொதுவாவே பெண்களுக்கு நல்ல ஃப்ளக்ஸிபிலிட்டி இருக்கும். டெலிவரி சமயத்துல எவ்ளோக்கெவளோ நாம வளைஞ்சு கொடுக்கறதுனால பிரசவ வலியைக்கூட தாங்கிகிட்டு குழந்தையைப் பெத்தெடுக்க முடியுது. அந்தளவுக்கு ஃப்ளெக்ஸிபிலிட்டி இருக்கக்கூடிய பெண்கள் ஸ்ட்ரெந்த்தையும் பில்ட் அப் பண்ணணும்.
உதாரணத்துக்கு வீட்டுல சிலிண்டரை நகர்த்தவோ, தண்ணிக் கேனை தூக்கி ஊத்தவோ அவங்க இன்னொருத்தவங்க உதவியை எதிர் பார்த்து நிக்கக்கூடாது. இந்த வெயிட்டைத் தூக்கறதெல்லாம் பெண்களுக்கு ஒரு விஷயமே இல்ல. அதை அவங்க முதல்ல உணரணும். எங்ககிட்ட பயிற்சி எடுத்துகிட்ட எட்டாயிரம் பேர்ல நிறைய பேர் தங்களோட ஸ்ட்ரெந்த் இம்ப்ரூவ் ஆகியிருக்கு, கஷ்டமா நினைச்ச வேலையையும் ஆண்களை எதிர்பார்க்காம செய்ய முடியுது-ன்னு சொல்றாங்க.
பயிற்சியால பலனடைஞ்ச பெண்கள் கொடுக்குற ஃபீட் பேக் தான் என்னை இன்னும் உற்சாகமா வேலை செய்ய வைக்குது.... என உற்சாகத்துடன் பக்ர்ந்தார் தமிழ் ஃபிட்னஸ் மங்கை மஞ்சுளா.