ரஜினிகாந்த் - பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியின் ஒளிப்பரப்புத் தேதி அறிவிப்பு!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பியர் கிரில்ஸ் உடன் பங்குபெறும் 'Into the Wilds' நிகழ்ச்சியின் டீசர் மற்றும் ஒலிப்பரப்புத் தேதியை டிஸ்கவரி சேனல் வெளியிட்டது.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் பிரபலமானது ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ ’Man vs Wild.’ இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் சாராம்சமே சாகசங்கள் நிறைந்த வாழ்க்கை முறை தான்.
அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பி வருவது, கையில் கிடைக்கும் பொருட்களை எப்படி உணவாக்கிக் கொள்வது என்பது குறித்து சுவாரஸ்யமாக பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்குவார் எனக் கூறுவதை விட வாழ்ந்து காட்டுவார் என்று தான் கூற வேண்டும்.
மக்களிடம் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை மேலும் கூட்டுவதற்காக அடிக்கடி சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வதுண்டு. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் மோடி போன்றோர் அவர்களில் முக்கியமானவர்கள். இந்த நிகழ்ச்சி அவர்களது அரசியல் வாழ்க்கைக்கும் உதவிகரமாக இருந்தது மறுக்க இயலாதது.
அந்த வரிசையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ’மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மோடிக்குப் பிறகு கலந்து கொள்ளும் இரண்டாவது இந்திய பிரபலம் ரஜினி தான். கர்நாடகா மாநிலம் பந்திபூர் புலிகள் காப்பகத்தில் அதற்கான படப்பிடிப்பு கடந்த மாதம் நடைப்பெற்று முடிந்தது. இதற்காக இரண்டு நாட்கள் காட்டுப்பகுதியில் ரஜினி தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி எப்போது ஒலிப்பரப்பாகும் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு இன்று அதன் தேதியை வெளியிட்டது டிஸ்கவரி இந்தியா சேனல்.
‘Into the Wild With Bear Grylls & Rajinikanth’ நிகழ்ச்சி வருகிற மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிகழ்ச்சியின் டீசரும் வெளியாகியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பியர் கிரில்ஸுடன் நேரத்தை செலவிட்டு காட்டில் சுற்றி வந்தார். இந்த நிகழ்ச்சி இந்திய மக்களிடையே பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.