'கூகுள் பே for Business App’ சென்னையில் அறிமுகம்!
சிறு தொழில் நிறுவனங்கள் டிஜிட்டல் பணம் செலுத்தலுக்கு எளிதாக மாற வழி செய்யும், ’கூகுள் பே ஃபார் பிஸ்னஸ்’ செயலி அறிமுகம் ஆகியுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு, ’கூகுள் பே ஃபார் பிஸ்னஸ்’ ’Google Pay for Business' எனும் ஆப் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள், காகிதப் பணிகளைக் குறைத்து, டிஜிட்டல் பர்வர்த்தனைக்கு மாறுவதற்கு வழி செய்யும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது.
"கூகுள் பே மூலம் வாடிக்கையாளர்கள் இப்போது, வர்த்தகர்களுக்கு கியூஆர் கோடு அல்லது போன் எண் மூலம் நேரடியாக பணம் செலுத்தலாம். மேலும் சிறிய நிறுவனங்கள் கூடுதல் செலவு இல்லாமல், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஏற்கவும் இது வழி செய்கிறது,” என செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
"'Google for business' மூலம், டிஜிட்டல் மயமாவதற்கான அவர்கள் பாதையை எளிதாக்குவதோடு, நாட்டில் யுபிஐ செயலி மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனையில் ஏற்பட்டுள்ள பெரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்,” என கூகுள் பே மற்றும் என்பியூ நிர்வாக இயக்குனர் மற்றும் வர்த்தக தலைவர் சஜீத் சிவானந்தன் கூறியுள்ளார்.
வர்த்தகர்கள் சார்ந்த பணம் செலுத்தலை மேலும் விரிவாக்க, 3,500 நகரங்களில் பி.ஓ.எஸ் டெர்மினல்கள், இரண்டு லட்சம் கடைகளில் யு.பி.ஐ பேமெண்ட் வசதியை அளிக்க கூகுள் பே, பைன் லேப்ஸ் மற்றும் இன்னோவிட்டியுடன் கூட்டு ஏற்படுத்திக்கொண்டுள்ளது.
கூகுள் பே பார் பிஸ்னஸ், வர்த்தகர்கள் ஈட்டும் ஒவ்வொரு ரூபாயையும் அவர்களது யுபிஐ இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கிற்கு மாற்றிவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேசேஜிங் சேவையான வாட்ஸ் அப், அண்மையில், வாட்ஸ் அப் பிஸ்னஸ் செயலியில், வர்த்தக நிறுவனங்கள் தயாரிப்பு விவரங்களைப் புகைப்படங்களாக அளிக்க வழி செய்யும் கேடலாக் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
"இதற்கு முன், வர்த்தக நிறுவனங்கள், ஒரு முறை ஒரு புகைப்படம் என தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருக்க வேண்டும். இப்போது வாடிக்கையாளர்கள் அவற்றை கேடலாக் வசதியில் அணுகலாம். இது வர்த்தக நிறுவனங்களை மேலும் தொழில்முறை தன்மை பெற வைப்பதோடு, வாடிக்கையாளர்கள் இணையதளத்திற்கு விஜயம் செய்யும் தேவை இல்லாமலே அவர்களுடன் தொடர்பு கொள்ளவும் வழி செய்யும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் ஆகும் இந்த புதிய வசதி, வர்த்தக நிறுவனங்கள் அளிக்கும் பொருட்கள், சேவைகள் பற்றி எளிதாக அறிந்து கொள்ள வழி செய்கிறது.
செய்தி: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்