நெட்டிசன்களைக் கவர்ந்துள்ள 'Clubhouse' - இது பொழுதுபோக்கு கிளப் மட்டுமல்ல...
சமூக ஊடக பரப்பில், ஆடியோ அறைகள் மூலம் உரையாட வழி செய்து பயனாளிகளை ஈர்த்திருக்கும் கிளப்ஹவுஸ் சேவை பற்றி ஒரு அறிமுகம்.
கிளப்ஹவுஸ் பக்கம் வாருங்கள் எனும் அழைப்பு நிச்சயம் உங்களுக்கும் வந்திருக்கலாம். அல்லது நீங்களே கூட கிளப்ஹவுசில் இணைந்து உங்கள் நட்பு வட்டத்திற்கு அழைப்பு விடுத்திக்கொண்டிருக்கலாம். இன்னும் சிலர் கிளப்ஹவுஸ் அழைப்புக்காக காத்திருக்கலாம்.
ஆக, இணையத்தின் இப்போதையை ’உரையாடல்’ 'Clubhouse' பற்றி தான். கிளப்ஹவுசிலும் பயனாளிகள் ’உரையாடி’க்கொண்டு தான் இருக்கின்றனர். கிட்டத்தட்ட நம்மூர் டீ கடைகளில் மக்கள் அமர்ந்து அரட்டை அடிப்பது போல் போனில் ஒன்று கூடி பேசிக்கொள்வது என்று சொல்லலாம்.
பொதுவாக, டீக்கடை உரையாடல்களில் அரசியல், தொழில் முதல் பொழுதுபோக்கு நியூஸ் வரை அனைத்தும் உரையாடலில் வரும் என்பதால் இதை வெறும் அரட்டை என்று சொல்லிவிடமுடியாது. அதே போல் தான் இந்த கிளப்ஹவுஸில் நடைபெறும் உரையாடல்களும் பல முக்கியத் தலைப்புகளில் அமைந்துள்ளது.
தெரிந்தவர், தெரியாதவர்கள் என பயனாளிகள் தங்களுக்குள் பேச வழி செய்திருப்பது தான் கிளப்ஹவுஸ் பற்றி இணையமே பேசுவதற்குக் காரணமாகி இருக்கிறது. ஆம், சமூக ஊடக பரப்பில் சமூக ஆடியோ சேவையாக அறிமுகம் ஆகியிருக்கும் கிளப்ஹவுஸ், அதன் ஆடியோ தன்மையால் தான் அனைவரையும் ஈர்த்திருக்கிறது.
Clubhouse பற்றி இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டாலும், இது ஒன்றும் புதிய செயலி அல்ல: உண்மையில் இந்த சேவை அறிமுகமாகி ஒராண்டுக்கு மேல் ஆகிறது. வெளிநாடுகளில் இந்த சேவை பிரபலமாகி பேசப்பட்டு பல மாதங்களாகின்றன.
எல்லாம் சரி, ஹவுஸ்கிளப் சேவையில் அப்படி என்ன இருக்கிறது? அது ஏன் திடிரென இத்தனை பிரபலமானது என பார்க்கலாம்.
என்ன புதுமை?
டிவிட்டர் போல, ஃபேஸ்புக் போல், இன்ஸ்டாகிராம் போல, கிளப்ஹவுஸ் இன்னொரு சமூக ஊடகச் சேவை. ஆனால், இதில் என்ன ஸ்பெஷல் என்றால், இதில் புகைப்படங்களோ, காணொலியோ கிடையாது. எழுத்து வடிவிற்கும் வேலை இல்லை. மாறாக இந்த சேவையில் எல்லாம் ஒலிமயம் தான்.
ஆம், கிளப்ஹவுஸ், ஒலி மூலமாக, அதாவது பேச்சு வடிவில் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கபட்ட சேவை. அந்த வகையில், இதை பாட்காஸ்டிங் எனப்படும் இணைய வானொலி சேவையின் நீட்சி எனலாம்.
பாட்காஸ்டிங் பரப்பில் எண்ணற்ற சேவைகள் இருந்தாலும், ஆடியோ வடிவிலான கருத்து பரிமாற்றத்தை எளிதாக்கும் வகையில் கிளப்ஹவுஸ் அமைந்திருக்கிறது. அதன் காரணமாகவே அது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
ஒலி அறைகள்
கிளப்ஹவுசில், பயனாளிகள் தங்களுக்கான ஒலி அறைகளை உருவாக்கிக் கொண்டு மற்றவர்களுடன் பேச முடியும். நண்பர்களும், தெரிந்தவர்களும் நிறைந்திருக்கும் ஒரு தனியறையிக்குள் நுழைந்தால் எப்படி இருக்கும்? கிளப்ஹவுஸ் இப்படி தான் இருக்கும். இந்த அறைகளில் நூற்றுக்கணக்கானோர்களும் இருக்கலாம்.
கிளப்ஹவுஸ் அறைக்குள் நுழைந்த பிறகு, அதில் நடைபெறும் உரையாடலைக் கேட்கலாம், நீங்களும் பேசி கருத்து தெரிவிக்கலாம். இந்த உரையாடல் கருத்து பரிமாற்றமாக இருக்கலாம், விவாதமாக அமையலாம் அல்லது நலம் விசாரிப்பாகக் கூட இருக்கலாம்.
கிளப்ஹவுசில் நீங்கள் ஒலி வடிவில் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளலாம் என்பதே சிறப்பு. ஒலி வடிவிலான சேவை என்பது மட்டும் அல்ல, வேறு சில அம்சங்களிலும் வழக்கமான சமூக ஊடக சேவைகளில் இருந்து கிளப்ஹவுஸ் மாறுபட்டது. ஃபேஸ்புக் , இன்ஸ்டா போல இதில் லைக்குகளுக்கு வேலை இல்லை. கிளப்ஹவுஸ் சேவையிலும், மற்றவர்களை பின் தொடரும் வசதி உண்டென்றாலும், இதில் நண்பர்கள் எண்ணிக்கையை விட கருத்து பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் அதிகம்.
இதற்குள், டிவிட்டரின் ஸ்பேசஸ் சேவை உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கலாம். கிளப்ஹவுஸ் சேவையின் வெற்றியை அடுத்து, டிவிட்டர் அறிமுகம் செய்த ஒலி வடிவிலான கருத்து பரிமாற்ற சேவை தான் ஸ்பேசஸ்.
எல்லாம் சரி தான். கேட்க புதுமையாக தான் இருக்கிறது. ஆனால், கிளப்ஹவுஸ் சேவையை சுற்றி இத்தனை பரபரப்பு ஏன்?
தோற்றம் !
கிளப்ஹவுஸ் வெற்றிக்கு இரண்டு முக்கியக் காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று கிளப்ஹவுஸ் அறிமுகமான காலகட்டம். கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கிளப்ஹவுஸ் ஐபோன் செயலியாக அறிமுகமானது. கொரோனா உலகை உலுக்கத்துவங்கிய காலகட்டம் என்பதால், பொதுமுடக்கச் சூழலில் பலரும் வீடியோ சந்திப்பு அழைப்புகளில் மூழ்கிக் கொண்டிருந்தனர்.
இந்த பின்னணியில், பேச்சு வடிவில் கருத்து பரிமாற்றம் செய்ய வழி செய்த கிளப்ஹவுஸ் பொருத்தமான சேவையாக அமைந்தது. முதலில் ஆடியோ பிரியர்கள் இந்த செயலியை அதிகம் பயன்படுத்திய நிலையில், தொடர்ந்து வீடியோ சந்திப்புகளின் பெருக்கத்தால், பலரும் ஜூம் களைப்புக்கு உள்ளான நிலையில், கிளப்ஹவுஸ் ஆறுதலாக அமைந்தது எனலாம்.
கிளப்ஹவுஸ் பிரபலமாக இன்னொரு முக்கியக் காரணம், அதன் பிரத்யேகத் தன்மை. இது அறிமுகமான போது, அது அழைப்பின் பேரில் மட்டுமே இணையும் சேவையாக இருந்தது. ஆக, முதல் கட்ட பயனாளிகள் கிளப்ஹவுசின் புதுமையான தன்மை பற்றி பேசும் போது, மற்றவர்களுக்கும் அதில் இணையும் ஆர்வம் உண்டானது.
கிளப்ஹவுசில் அறைகளை உருவாக்கிப் பேசலாம் என்பதோடு, நிகழ்வுகள் மற்றும் கிளப்களையும் அமைத்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட தலைப்புகளில் விவாதிக்க அவற்றுக்கான கிளப்களை அமைக்கலாம். நமக்கு பிடித்த கிளப்களில் இணையலாம். இப்படி, ஒலி வடிவில் பலவிதமாக அளவளாவ கிளப்ஹவுஸ் வழி செய்தது.
எலன் மஸ்க்
இதனிடையே, இன்னொரு முக்கிய நிகழ்வும் கிளப்ஹவுஸை மேலும் பிரபலமாக்கியது. இதன் துவக்கத்தில் இருந்தே, பிரபலங்களும், ஸ்டார்ட் அப் நிறுவனர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். ஸ்டார்ட் அப் வல்லுனர்களுடன் தொழில்நுட்ப உரையாடலில் ஈடுபடுவதற்கான பரப்பாகவும் அமைந்திருந்தது.
இந்நிலையில் தான், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் ஆகியோர் கிளப்ஹவுசில் அறிமுகமாகி உரையாடியது அந்த சேவையை மிகவும் பிரபலமாக்கியது. அதிலும் குறிப்பாக, இணைய உலகை குலுக்கிய கேம்ஸ்டாப் சர்ச்சையின் போது, எலன் மஸ்க், கிளப்ஹவ்சில் இது பற்றி விவாதிதத்து, பரபரப்பை உண்டாக்கியது.
வரவேற்பு
இதன் பிறகு கிளப்ஹவுஸ் மெல்ல பிரபலமானது. இதனையடுத்து தற்போது ஆண்ட்ராய்டு வடிவிலும் அறிமுகம் ஆகியிருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளை கிளப்ஹவுஸ் தனது வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதுகிறது. இதன் இணை நிறுவனர்களில் ஒருவரான ரோகன் சேத் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு வடிவில் அறிமுகமானதை அடுத்து தற்போது இந்தியாவிலும் கிளப்ஹவுஸ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒலி வடிவிலான உரையாடலுக்கு உதவும் சமூக ஆடியோ சேவை எனும் இதன் தனித்தன்மையை உணர்ந்தவர்கள் கிளப்ஹவுசுக்கு தாவி வருகின்றனர். மற்றவர்கள், இந்த கவனத்தால் கவரப்பட்டு அணி திரள்கின்றனர்.
அதற்கேற்ப கிளப்ஹவுசை புதுமையான முறையில் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். கேரளாவில் நாடகக் குழு ஒன்று லட்சத்தீவுகள் பிரச்சனை தொடர்பான நாடகத்தை கிளப்ஹவுசில் நிகழ்த்தியிருக்கிறது.
ஆக, இனி வரும் நாட்களில் கிளப்ஹவுஸ் பற்றி இன்னும் நிறைய சத்தம் கேட்கும். ஆனால் ஒன்று சர்வதேச அளவில் இதற்கு செல்வாக்கு சரியத்துவங்கியிருப்பதாக பேசத் துவங்கியிருக்கின்றனர். இந்த சேவையில் தொடர் புதுமைகள் இல்லை எனும் விவாதம் தீவிரமாகியுள்ளது.
இந்திய செயலிகள்
இந்தச் சூழலில் தான் இந்தியா உள்ளிட்ட புதிய சந்தையை குறி வைக்கும் கிளப்ஹவுஸ், பேமெண்ட் வசதி உள்ளிட்ட அம்சங்களையும் அறிமுகம் செய்து வருகிறது.
கிளப்ஹவுஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்,. நம்மூர் டிக்டாக் நகலான சிங்காரி இதற்காக என்றே ‘Fireside' என்று ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது தெரியுமா? அதோடு, 'Leher' எனும் இந்திய செயலி சில ஆண்டுகளாகவே இத்தகைய சேவையை வழங்கி வருகிறது என்பதும் தெரியுமா?
நிற்க, கிளப்ஹவுஸ் பற்றி தெரிந்து கொள்ள இன்னொரு செய்தி. பாட்காஸ்டிங் சேவையின் நீட்சி தான் இந்த சேவை என்று பார்த்தோம் அல்லவா, உண்மையில் கிளப்ஹவுசும் பாட்காஸ்டிங் சேவையாகth தான் அறிமுகமானது. 2019ல் டாக் ஷோ எனும் பெயரில் அறிமுகமாகி பின்னர் கிளப்ஹவுசானது.