8 மாதங்களில் ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்டிய இளம் பொறியாளர்கள் மூவரின் கண்டுபிடிப்புகள்!
மூன்று பொறியாளர்கள் சேர்ந்து நிறுவிய நிறுவனம் மூலம் தானியங்கி டிஜிட்டல் மீன் தொட்டி, EzySpit, குறைந்த மின்சார பயன்பாடு கொண்ட Ezycooler ஆகிய 3 புதிய கண்டுபிடிப்புகளை வர்த்தகம் செய்து கோடிகளில் வருவாய் ஈட்டியுள்ளனர்.
நீங்கள் பயணம் மேற்கொள்ள ஒரு கார் புக் செய்யவேண்டுமா? இதோ புக் செய்துவிட்டது அலெக்சா. வானிலை குறித்த தகவல்களை அறியவேண்டுமா? இதோ சிரி வழங்குகிறது. இவ்வாறிருக்கையில் உங்கள் வீட்டில் நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களால் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கமுடியாதா என்ன?
இவென்சுவேட் இன்னோவேஷன்ஸ் (Eventuate Innovations) இந்தப் பகுதியில்தான் கவனம் செலுத்துகிறது.
மும்பையைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் 23 வயது ரிது மல்ஹோத்ரா, 26 வயது பிரதீக் மல்ஹோத்ரா, 27 வயது பிரதிக் ஹார்டே ஆகிய மூன்று இளம் பொறியாளர்களால் நிறுவப்பட்டதாகும். தானியங்கி முறையில் சுத்தம் செய்து மீன்களுக்கு உணவளிக்கும் மீன் தொட்டி மற்றும் தானாகவே தண்ணீர் பாய்ச்சி உரமிடும் ப்ளாண்டர் போன்றவை இவர்கள் உருவாக்கிய புதுமையான கண்டுபிடிப்புகளாகும்.
”மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவேண்டும் என்கிற நோக்கத்தை முன்னிறுத்தியே எங்களது சிந்தனைகள் உருவானது. புதிதாக ஒன்றை கண்டுபிடிப்பதற்கு முன்பு நாங்கள் மக்களிடம் சென்று கருத்து கேட்பது வழக்கம். சந்தையில் கிடைக்கக்கூடிய பாரம்பரிய மீன் தொட்டிகள், ப்ளாண்டர்கள் போன்றவை அவர்களுக்கு திருப்தியளிக்கிறதா என கேட்டோம். அவர்கள் அளித்த பதில்தான் இணை நிறுவனர்கள் மூவரின் பாதையைத் தீர்மானித்தது.
தற்சமயம் 22 பேர் கொண்ட குழுவாக இவென்சுவேட் இன்னோவேஷன்ஸ் செயல்படுகிறது. மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை இக்குழுவினர் தொடர்ந்து ஆராய்கின்றனர். தண்ணீர், மின்சாரம், காட்டின் வளம் போன்றவற்றை சேமித்து இயற்கைக்கு மக்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்கும் வகையிலான நிலையான தீர்வை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். தற்சமயம் இந்நிறுவனத்திற்கு சொந்தமான 14 காப்புரிமைகள் உள்ளன.
துவக்கம்
பிரதீக் மல்ஹோத்ரா, பிரதிக் ஹார்டே இருவரும் சிறுவயது நண்பர்கள். இவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் சமூக நலனில் பங்களிக்கவேண்டும் என தீர்மானித்தனர். புதுமையான தயாரிப்புகளை உருவாக்கவேண்டும் என்கிற இவர்களது பயணம் அப்போதே துவங்கியது.
”இந்தியாவில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையைக் கண்டு தொழில்நுட்பத்தின் உதவியுடன் தண்ணீரை எவ்வாறு சேமிக்கலாம் என சிந்தித்தோம். இந்தியா முழுவதும் எங்கு அதிகபட்சமான அளவு தண்ணீர் வீணாகிறது என்று ஆய்வு செய்யத் துவங்கினோம்,” என்றார் பிரதிக் ஹார்டே.
சில ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றல் மற்றும் தண்ணீரை திறம்பட பயன்படுத்தும் வகையிலான வாட்டர் கூலரை உருவாக்க இந்த ஆய்வே வழிவகுத்தது.
ரித்து சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதில் அதிக ஆர்வத்துடன் இருந்தார். அமிதி பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிஸ் பொறியியல் முடித்திருந்த அவரது உறவினரான பிரதிக் ஹார்டேவை அணுகி உடன் பணிபுரிய வாய்ப்பு கோரினார். ரித்து என்ஐடி நாக்பூரில் கணிணி அறிவியல் பொறியியல் முடித்தவர், பிரதிக் ஹார்டே புனேவில் உள்ள சின்ஹாகாத் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறியியல் முடித்தவர்.
2013-ம் ஆண்டு இவர்கள் ஒரு குழுவாக ஒன்றிணைந்தனர். 2016-ம் ஆண்டு இவென்சுவேட் இன்னோவேஷன்ஸ் நிறுவினர்.
டிஜிட்டல் மீன் தொட்டி, தானியங்கி டிஜிட்டல் ப்ளாண்டர், எச்சில் துப்பும் பேக் (எச்சிலை மக்கும் குப்பையாக மாற்றக்கூடியது), ஸ்மார்ட் கூலர் (2019 முதல் வணிக ரீதியாக சந்தைப்படுத்தும் நிலையில் உள்ளது) ஆகியவை இவர்களது நான்கு முன்னணி தயாரிப்புகளாகும். இவை டிசைன் இட் ஈஸியின் (Design It Ezy) கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிசைன் இட் ஈஸி இவென்சுவேட் இன்னொவேஷன்ஸின் சுயநிதி வென்சராகும். இது இரண்டு லட்ச ரூபாய் ஆரம்ப முதலீட்டுடன் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறுவப்பட்டது.
”புதுமையான, விலைமலிவான, எளிதாக அணுகும் வகையிலான தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தவேண்டும். பாதுகாப்பாகவும் பயன்படுத்த எளிதாகவும் இருக்கும் தயாரிப்புகளை உருவாக்கவேண்டும். இதுவே எங்களது நோக்கம்,” என்கிறார் ரித்து.
தனித்துவமான தயாரிப்புகள்
தானியங்கி டிஜிட்டல் மீன் தொட்டி – ஸ்மார்ட் மீன் தொட்டி தொழில்நுட்பமானது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே மீன் உணவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப இது வடிவமைக்கப்படுகிறது. டிஜிட்டல் மீன் தொட்டியில் மீன் உணவை 30 நாட்களுக்கு சேமித்து வைக்கலாம். இதில் 20-30 மணி நேரம் மின்சாரம் நீடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அக்ரிலிக் சார்ந்த இந்த மீன் தொட்டி எடை குறைவானது என்பதால் எடுத்துச்செல்வதும் எளிது. இந்த மீன் தொட்டி டிசைன் இட் ஈஸி வலைதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. முழுமையாக தானியங்கி முறையில் செயல்படும் மீன் தொட்டியின் ஆரம்ப விலை 5,400 ரூபாய். அரை தானியங்கி முறையில் செயல்படும் மீன் தொட்டியின் ஆரம்ப விலை 1,990 ரூபாய் ஆகும்.
தானியங்கி டிஜிட்டல் ப்ளாண்டர் - 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட EzyGrow செங்குத்து வடிவில் இருக்கும். இது தானாகவே தண்ணீர் பாய்ச்சி உரமிடும் ப்ளாண்டர் ஆகும். இதிலுள்ள உணர்கருவிகள் மண்ணின் ஈரப்பத்தை அளவிடும். இந்த தொழில்நுட்பம் செடிகள் வளரும் சூழலை தொடர்ந்து மாற்றியமைத்து சீர்படுத்தும். இந்தத் தானியங்கி ப்ளாண்டரின் விலை சதுர அடிக்கு 600 ரூபாய். சேவைக்கான ஒரு வருட உத்திரவாதத்துடன் கிடைக்கிறது. இரண்டு வார காலம் வரை செடிகளை தண்ணீர் பாய்ச்சி வைக்கிறது. இந்நிறுவனத்தின் வலைதளம் தவிர அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களிலும் இந்தத் தயாரிப்பு கிடைக்கிறது.
இவென்சுவேட் இன்னோவேஷன் நிறுவனத்தின் டிஜிட்டல் மீன் தொட்டி Hewlett Packard மற்றும் மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் இடமிருந்து ’இன்னோவேஷன் ஆஃப் தி இயர்’ விருது பெற்றது. Hewlett Packard செய்தித்தாள் மற்றும் பதாகைகள் மூலம் இந்நிறுவனத்தை அறிமுகப்படுத்தி இந்தியா முழுவதும் இவர்களது தயாரிப்பை ஊக்குவித்தது.
டிசைன் இட் ஈஸி எட்டு மாதங்களில் ஒரு கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இது பெரிதும் உதவியது. இது மட்டுமில்லாது தற்போது 4.75 கோடி ரூபாய் மதிப்புடைய ஆர்டரும் இந்நிறுவனத்திடம் உள்ளது.
டிசைன் இட் ஈஸி நிறுவனம் டிஜிட்டல் மீன் தொட்டி, ப்ளாண்டர் போன்றவை மட்டுமின்றி ஈஸி ஹைட்ரோ ஃபால், ஈஸி ஹைட்ரோ ஃபவுண்டன், ஈஸி ஹைட்ரோ வார்டெக்ஸ் போன்ற தண்ணீர் சார்ந்த பிற தயாரிப்புகளையும் உருவாக்கியுள்ளது. Ezyspit, Ezycooler ஆகிய இரு தயாரிப்புகளும் சந்தையில் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.
Ezyspit – மக்களிடம் இருக்கும் எச்சில் துப்பும் பழக்கத்தை மாற்றுவது கடினமான செயலாகும். எனவே மக்கள் EzySpit பயன்படுத்துவதை உறுதிசெய்ய இவென்சுவேட் இன்னோவேஷன்ஸ் குழு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
Ezyspit எளிதாக பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியதாகும். பான், புகையிலை போன்றவற்றை உபயோகிப்பவர்கள் இதை காரில் செல்லும்போதோ அலுவலகத்திலோ பயன்படுத்திக்கொள்ளலாம். இது எச்சிலை மக்கும் கழிவாக அரை திரவ நிலையில் மாற்றுகிறது. வாசனையில்லாமலும் எளிதாக சேதப்படுத்தமுடியாத வகையிலும் வெளியில் சிந்தாமலும் இருக்கக்கூடிய இந்தத் தயாரிப்பு பலமுறை துப்பினாலும் அவற்றை உறிஞ்சக்கூடியது. இது ஆறு மாதங்களில் உருவாக்கப்பட்டதாகும்.
”மக்கள் துப்பும் இடத்தை மாற்றினால் பன்றிக்காய்ச்சல், காசநோய், நினோமியா போன்ற வைரல் நோய்கள் பரவும் அபாயம் 99 சதவீதம் குறையும் என நம்புகிறோம்,” என்றார் ரித்து.
EzySpit பவுச் ஒன்றின் விலை 5 ரூபாய். EzySpit கண்டெயினர் 10 ரூபாய். EzySpit Bin 50 ரூபாய். இவை சில்லறை வர்த்தகக் கடைகளில் கிடைக்கும். 2018-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் அதே ஆண்டில் நாக்பூர் மற்றும் புனே பகுதிகளில் 5,000 EzySpit பேக்குகளை இலவசமாக விநியோகம் செய்தது. ஸ்வச் பாரத் பிரச்சாரத்திற்காக நாக்பூர் ரயில்வே நிலையம் EzySpit-ஐ இணைத்துக்கொண்டது.
EzySpit இந்த ஆண்டு BhartiaVenture-இடம் இருந்து 5 கோடி ரூபாய் நிதி பெற்றது.
EzyCooler – இந்தியா போன்ற வெப்பம் அதிகம் உள்ள நாட்டில் கூலர் இல்லாமல் எவரால் சமாளிக்க முடியும்? EzyCooler ஒரு நாளைக்கு வெறும் இரண்டு லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தி தண்ணீரையும் ஆற்றலையும் சேமிக்க உதவுகிறது. வழக்கமான கூலர்களைக் காட்டிலும் இதற்கு 50 சதவீதம் குறைவான மின்சாரமே தேவைப்படும். ஸ்மார்ட் போன் செயலி கொண்டு கட்டுப்படுத்தக்கூடிய ஸ்மார்ட் கூலிங் தொழில்நுட்பத்துடன் செயல்படும் இந்தத் தயாரிப்பு இரைச்சலில்லாமல் இயங்கக்கூடியது. இது சிறியளவிலும் சுவரில் பொருத்தக்கூடிய வகையிலும் கிடைக்கிறது.
”நாங்கள் சந்தையில் Ezycooler செயல்படும் விதம் குறித்து விளக்கமளித்தபோது மூன்று நாட்களில் மூன்று மில்லியன் பேர் அதை பார்வையிட்டனர். இரண்டு மாதங்களில் 200 கோடி ரூபாய் மதிப்பிற்கு முன்கூட்டியே ஆர்டர் பெற்றிருந்தோம். 2019-ம் ஆண்டு எங்களது தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளோம்,” என்றார் பிரதிக் ஹார்டே.Ezycooler ஆரம்ப விலை 12,000 ரூபாய் ஆகும்.
சவால்கள்
இவர்களது தயாரிப்பை உற்பத்தி செய்வதற்குத் தேவையான பாகங்களை எதுவும் சந்தையில் கிடைக்கவில்லை. இதுவே அவர்கள் எதிர்கொண்ட முதல் சவால் ஆகும். இதற்குத் தீர்வுகாண உணவு டிஸ்பென்சர், சர்க்யூட்கள், தானியங்கி முறையில் தண்ணீர் பாய்ச்சி உரமிடும் அமைப்பு, கூலிங் அமைப்பு போன்றவற்றிக்குத் தேவையான ஒவ்வொரு பாகத்தையும் அவர்களே வடிவமைத்து உற்பத்தி செய்யத் துவங்கினர்.
நாக்பூரில் ஒரு ஆலையுடன் போக்குவரத்து, விற்பனை போன்ற நடவடிக்கைகளை கையாளும் இந்தியா முழுவதும் உள்ள அதன் டீலர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மூலம் இவென்சுவேட் இன்னோவேஷன்ஸ் வருவாய் ஈட்டுகிறது. அத்துடன் நாடு முழுவதும் உள்ள அதன் சில்லறை வர்த்தக ஸ்டோர் வாயிலாகவும் தயாரிப்புகளை விற்பனை செய்கிறது.
”உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெறப்பட்ட ஆர்டர் தேவைகளை பூர்த்தி செய்வதும் மேலும் பல புதுமையான தயாரிப்புகள் உருவாக்குவது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்வதுமே இந்நிறுவனத்தின் வருங்கால திட்டமாகும்.”
ஆங்கில கட்டுரையாளர் : அபூர்வா பி | தமிழில் : ஸ்ரீவித்யா