'இது என் அப்பாவின் கனவு; இந்தியா செல்லவில்லை’ -நாட்டுக்காக கிரிக்கெட் வீரரின் கலங்க வைக்கும் முடிவு!
சிட்னியில் பயிற்சியில் இருக்கும் கிரிக்கெட் வீரர் சிராஜின் தந்தை இறந்ததாக செய்தி வந்தும், தந்தையின் கனவை நிறைவேற்ற இறுதிச் சடங்குக்கு போகாமல் விளையாட்டை தொடர முடிவெடுத்துள்ளார்.
அண்மையில் நடந்த முடிந்த ஐ.பி.எல். போட்டியில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடியவர் மொகமது சிராஜ். ஐ.பி.எல்லில் 9 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி, அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக சிராஜ்-ம் ஆஸ்திரேலியா பயணமாகியிருக்கிறார்.
அவர் ஆஸ்திரேலியாவிலிருக்கும்போது, வீட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில், அவரது தந்தை முகமது கவுஸ் நுரையீரல் நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என சிராஜிடம் கூற அவர் உடைந்து அழுதுள்ளார்.
சிட்னியின் பிளாக்டவுன் ஓவலில் பயிற்சி அமர்வை முடித்திருந்த சிராஜூக்கு தந்தையின் இறப்பு செய்தி பேரிடியாக இருந்தது. சோகத்தில் இருந்த அவரை, கேப்டன் விராட் கோலியும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியும் தேற்றியுள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தனிமையில் ஆஸ்திரேலியாவின் புறநகர் பகுதிகளில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதன்காரணமாக, சிராஜால் தனது தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்க இந்தியா வர முடியாது என்பது அவருக்கும் மேலும் சோகத்தை கூட்டியுள்ளது.
”என் மகனே நீ என் நாட்டை பெருமைப்படுத்த வேண்டும், என்று என் தந்தை கூறுவார். நான் என் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆதரவை இழந்துவிட்டேன். என் அப்பாவின் ஆசையை நான் நிறைவேற்றுவேன். எனது ஆரம்ப காலக்கட்டத்தில் அப்பா என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை நானறிவேன். நான் நாட்டிற்காக விளையாடுவதை பார்ப்பது அவருக்கு கனவாக இருந்தது,” என்று சிராஜ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சிராஜின் தந்தை ஒரு ஆட்டோ டிரைவர். தன் மகன் சிராஜ் வெற்றிபெற வேண்டும் என தீவிரமாக உழைத்தவர். இந்நிலையில், தந்தையை இழந்த சிராஜ் இந்தியா திரும்ப வாய்ப்பிருந்தும் அணியோடு இருக்க விரும்புவதாக சொல்லிவிட்டார் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
”சிராஜின் தந்தை காலமானதும் நாங்கள் அவருடன் கலந்து ஆலோசித்தோம். இந்த துயரமான நேரத்தில் அவர் இந்தியா திரும்பவும், குடும்பத்தோடு இருக்கவும், வாய்ப்பு கொடுத்தோம். ஆனால், அவர் இந்திய அணியோடு இருக்க விரும்புவதாகவும், தனது நாட்டுக்காக விளையாட விரும்புவதாகவும் கூறிவிட்டார்," என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கட்டுரை தொகுப்பு: மலையரசு