பெயர் வைத்த ஈரான்; பயத்தில் தமிழகம்.. நிவர் புயல் நிலைமை என்ன?!
நிவர் புயல்... இந்த வார்த்தை தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா மக்களை பயத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம்.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள இந்த நிவர், தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. மிகவும் பொறுமையாக ஐந்து கி.மீ. வேகத்தில் வந்துகொண்டிருக்கிறது. சென்னைக்கு கிழக்கே 450 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு அருகே 410 கி.மீ. தொலைவிலும் புயல் நகர்ந்து வருகிறது.
கடந்த 3 மணி நேரமாக புயல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் இன்று மாலை அதி தீவிர புயலாக நிவர் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுச்சேரியில் புயல் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், புயல் கரையை நெருங்க நெருங்க வட-மேற்கு நோக்கியும் மாறும் வாய்ப்பு இருப்பததாகவும் அறிவித்துள்ளது சற்று அச்சத்தை தரக்கூடிய செய்திதான்.
நிவர் என பெயர் வந்தது எப்படி?!
இந்தப் புயலுக்கு நிவர் எனப் பெயர் வைத்தது ஈரான். நிவர் போலவே இதுவரை வந்துபோன புயல்களுக்கு பல்வேறு பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பெயர்கள் எவ்வாறு வைக்கப்படுகிறது என்றால், 13 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு எனலாம்.
அரபிக் கடல், வங்காள விரிகுடா கடலோர பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஒமன், இலங்கை, தாய்லாந்து, ஈரான், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் உள்ளிட்ட 13 நாடுகள்தான் இணைந்து பெயர்களை வைக்க முடியும்.
இந்த நாடுகள் புயல்களுக்கு புது புது பெயர்களை பரிந்துரை செய்யலாம். இந்த பெயர்களில் இருந்து ஒரு பெயரை உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு மற்றும் ஒருசில அமைப்பு இணைந்து தேர்வு செய்கின்றன. ஒவ்வொரு நாடும் 13 பெயர்களை பரிந்துரை செய்யலாம்.
ஆனால் அந்தப் பெயர்கள், அரசியல், கலாச்சாரம், மத நம்பிக்கையை குறிக்கும்படி எதுவும் இல்லாமல் பொதுவான பெயராக மக்கள் உச்சரிக்கும்படி இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதேபோல் புயல் பெயரின் அளவு, அதிகபட்ச 8 எழுத்துகள்தான் இருக்க வேண்டும். சமீபத்தில்,
மேற்கு வங்கத்தையும், வங்கதேசத்தை தாக்கிய புயலுக்கு ’அம்பன்’ எனப் பெயர் வைத்த நாடு தாய்லாந்து. இதேபோல் 2 நாட்களுக்கு சோமாலியாவில் கரையை கடந்த புயலுக்கு ‘கதி' எனப் பெயர் வைத்தது இந்தியா. இந்த வகையில்தான் தற்போது ஈரான் ‘நிவர்’ எனப் பெயர் வைத்துள்ளது.
அடுத்து அரபிக் கடல், வங்காள விரிகுடாவில் உருவாகும் புயலுக்கு மாலத்தீவு பரிந்துரை செய்த ‘புரேவி' என்னும் பெயர் வைக்கப்பட இருக்கிறது. அடுத்த புயல் மட்டுமல்ல, அடுத்த 25 வருடங்களில் வரப்போகும் புயல்களுக்கான பெயர் பட்டியல் இப்போதே தயார் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் தாக்கம் எப்படி?!
நிவர் புயல் தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதிலும் குறிப்பாக கஜா புயலால் பாதிப்படைந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், அரியலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களே இந்த முறையும் அதிக பாதிப்புகளை சந்திக்கும் என கூறப்பட்டுள்ளது.
இதனால் இந்தப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில் பலத்த மழைக்கும் வாய்ப்பு இருப்பதால், நவம்பர் 25-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் இன்று தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்டும், நாளை 25ஆம் தேதி சிவப்பு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்த அதிகம் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் மக்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
இரண்டு விதமாக கரையைக் கடக்கும் நிவர்!
’தமிழ்நாடு வெதர்மேன்’ எனப்படும் பிரதீப் ஜான், தன் வலைத்தள பக்கத்தில், நிவர் புயல் இரண்டு விதமாக கரையைக் கடக்கலாம் என கூறியிருக்கிறார்.
முதல் விதம் - வேதாரண்யம் - காரைக்காலுக்கு மத்தியில், இன்று மற்றும் நாளைக்குள் நிவர் புயல் கரையைக் கடக்கலாம். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 70 - 80 கிலோமீட்டர் இருக்கும்.
இரண்டாம் விதம் - காரைக்கால் - சென்னைக்கு மத்தியில், இன்று மற்றும் நாளைக்குள் நிவர் புயல் கரையைக் கடக்கலாம். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 - 150 கிலோமீட்டர் இருக்கும் என்று அவர் கணித்துள்ளார்.
தற்போதைய நிலைமை!
இதற்கிடையே, தற்போது சென்னையில் இருந்து 430 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 380 கி.மீ. தொலைவிலும் நிவர் புயல் நிலை கொண்டுள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அதிதீவிர புயலாக மாறி 'நிவர்' கரையை கடக்கும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக மாமல்லபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை மெரினா கடற்கரை, வேளச்சேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயல் உருவாகியுள்ள நிலையில் நிலைமையை தீவிரமாக கண்காணிக்க தமிழகம், புதுச்சேரி அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.