அன்னையர் தினத்தில் இரட்டை பெண் குழந்தைகளுக்குத் தாயான ‘இரும்பு பெண்மணி’ இரோம் சர்மிளா!
மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் இரோம் சர்மிளாவுக்கு அன்னையர் தினத்தன்று இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
மணிப்பூரின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படுபவர் இரோம் சர்மிளா (48). மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, தனது 28வது வயதில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் இவர். சுமார் 500 வாரங்களுக்கு மேல், அதாவது 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்தார். சர்மிளாவின் இந்த உண்ணாவிரதப் போராட்டமே உலகின் மிக நீண்ட உண்ணாவிரதமாகக் கருதப்படுகிறது.
2016ம் ஆண்டு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டவர், மணிப்பூர் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங்கிற்கு எதிராக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஆனால், மோசமான தோல்வியே அவருக்கு பரிசாகக் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு தனது காதலரான தேஸ்மந்த் கொட்டின்கோவை திருமணம் செய்து தமிழகத்தில் கொடைக்கானலில் குடியேறினார். காதல் மற்றும் திருமணத்தால் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் சர்மிளா.
இந்நிலையில், அன்னையர் தினமன்று பெங்களூரு மருத்துவமனையில் அவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. இதனை சமூக செயற்பாட்டாளர் திவ்யா தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர் சர்மிளாவும், அவரது குழந்தைகளும் நலமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குறும்பட இயக்குனரும், சமூக செயற்பாட்டாளருமான திவ்யா பாரதி பாதிக்கப்பட்ட போது இரோம் சர்மிளா அவருக்காகக் குரல் கொடுத்தார். அதன் பின்னர் இரோம் சர்மிளா திருமணத்தின் போது திவ்யா பாரதிதான் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்மிளாவின் இரண்டு குழந்தைகளும் முறையே 2.16 மற்றும் 2.15 கிலோ கிராம் எடையில் இருப்பதாக அவருக்கு பிரசவம் பார்த்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீபதா தெரிவித்துள்ளார். அதோடு, இரட்டைக் குழந்தைகள் பிறந்த மகிழ்ச்சியில் சர்மிளாவும், அவரது கணவரும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது இரட்டை பெண் குழந்தைகளுக்கு நிக்ஸ் சகி மற்றும் ஆட்டம் தாரா என்று சர்மிளா பெயர் சூட்டியுள்ளார். சர்மிளாவுக்கும், அவரது குழந்தைகளுக்கும் சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.