பனை வெல்ல மிட்டாய், கமருகட்டு: ஆர்கானிக் நட்ஸ் ஸ்னாக் தயாரிக்கும் மாம்ப்ரூனர்!
நட்ஸ்கள் கொண்டு நாவிற்கு சுவை, உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரும் ஆர்கானிக் ஸ்னாக் வகைகள் தயாரித்து வர்த்தகம் செய்கிறார் நந்தினி.
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்”.
அப்பா அடிக்கடி இந்த குறளை சொல்லுவாரு. இதைக்கேட்டு கேட்டுத் தான் நானும் என் தம்பியும் வளந்தோம். அதற்காகவாவது புதுசா எதாவது செஞ்சு, அப்பாவ பெருமைப் படுத்தனும்னு தோணிகிட்டே இருக்கும்,” எனத் தொடங்கினார் நந்தினி.
நந்தினியின் அப்பா, அம்மா இருவரும் முப்பது வருஷமா கடலை மிட்டாய் வியாபாரம் செய்தனர். அதன் சுவையும் தரமும் தான் இன்றுவரை இவர்களைத் தேடி வாடிக்கையாளர்களை வரவைத்துள்ளது. அந்தத் தரம் தான் தனது அப்பாவுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்ததாகவும் சொல்கிறார் நந்தினி.
ஒருவர் தன்னோட உழைப்பையும், அர்ப்பணிப்பையும் முழுமையாக தன் தொழில் மேல் போடும் போது தான், அதன் வெற்றியை உணர முடியும். நான் இங்க வெற்றின்னு குறிப்பிடுறது இயற்கை முறையில் தயார் செய்து மக்களின் மனதில் ஆரோக்கியத்துடன் இந்த இனிப்பான சத்தான கடலைமிட்டாயை விற்பதைத் தான். இப்படி அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்ட அனைத்தையும் வைத்து கட்டமைத்ததில் உருவானது தான் ‘ஆர்கனட்ஸ்’ என்ற அடையாளம்.
நந்தினி கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போதே இந்த தொழிலுக்கான விதை அவரது மனதில் உருவானதாகக் கூறுகிறார். அந்த ஐடியாவை திருமணம் முடிந்து, பத்துமாதக் குழந்தைக்கு தாயான போது, ஒரு மகளிர் தினத்தன்று தொடங்கியதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார்.
ஒரு மாம்ப்ரூனராய் இதனைத் தொடங்குவதில் மேலும் மகிழ்ச்சியடைகிறேன். தாய்மை என்பது அவ்வளவு எளிதல்ல, அது ஒரு வரம். இளம் தாய்மார்களுக்கு எவ்வளவு இடையூறுகள் இருக்குமென்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஒரு பெண் தனது கனவை துரத்திப்பிடிக்க அவளது கணவன் உறுதுணையாக இருக்க வேண்டும். அந்த வகையில் நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். இந்த அடையாளத்தை உருவாக்க அவர் பெரிதும் உதவியாய் இருந்தார். எனது கனவைத் தொடங்க, தொடக்கப் புள்ளியாய் இருந்து, எனக்கு நம்பிக்கை தந்தார்.
தொழிலை சீராக நடத்த தன் தம்பி மற்றும் நண்பர்களும் உந்துததலாக இருந்து தனது தொழில் பயணத்தில் பங்களித்ததாக கூறுகிறார் நந்தினி.
ORGANUTZ தொடக்கம்
பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, இயற்கையாய் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு மக்களிடம் என்ன மாதிரியான தேவை இருக்கிறது, அதனை அவர்கள் எப்படி அணுகுகிறார்கள் போன்ற விஷயங்களைத் தெரிந்துகொண்ட பின்னே நிறுவனம் தொடங்க முடிவெடுத்துள்ளார் நந்தினி.
தனது சிறிய சேமிப்பு கொண்டு ‘ஆர்கனட்ஸ்’ தொடங்கி, அதற்குத் தேவையான FSSAI உரிமம் மற்றும் சான்றிதழ்களை அரசிடமிருந்து பெற்றார். சிறிய நிறுவனம் என்பதால், இதற்கு டிஜிட்டல் சந்தைப்படுத்துதல் சிறந்தது என தெரிந்து தனக்கு இருந்த அனுபவத்தை பயனபடுத்தி விளம்பரப்படுத்தினார். இப்படித்தான் தான் ‘ORGANUTZ’ ப்ராண்டை இணையவழியில் தொடங்கினார் நந்தினி.
இன்று எதிலும் எவற்றிலும் ஏதோ ஒரு புதுமை வேண்டும். எங்களது உணவுப் பொருட்கள் பொருத்தவரை, அவை இயற்கையான முறையில் மிட்டாய் மற்றும் பல வகை தின்பண்டங்களை தயாரித்து தருகிறோம். கடலைமிட்டாய், பனை வெல்லம் மிட்டாய், எள்ளு மிட்டாய், முந்திரி மிட்டாய், முருங்கை கடலைமிட்டாய், கருப்பட்டி மைசூர் பாக், கமருகட்டு என்று இன்னும் பலவகைத் தயாரிப்புகள் ஆர்கனட்ஸ்-இன் சிறப்பு ஐயிட்டங்கள்,” என்றார்.
இவை அனைத்துமே நாவிற்கு சுவையைத் தாண்டி உடலுக்கும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை. இவைகள் மற்ற மிட்டாய்களைப் போல் எந்தவித கேடுகளையும் தருவதில்லை. இது உடல் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தும் இன்றைய வாடிக்கையாளர்களுக்கு உகந்த ஒன்றாய் திகழ்கிறது.
விற்பனை மாதிரி
ஆர்கனட்ஸ் பொருட்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்கப்படுகிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டா, மூலம் ஆன்லைனிலும், ஆஃப்லைனில் அதாவது ஆர்கானிக் கடைகளுக்கு நேரடியாகவும் சப்ளையும் செய்கிறார்கள்.
“மாதத்திற்கு சராசரியாக 220 முதல் 250 ஆர்டர்கள் எடுக்கிறோம். மாத விற்றுமுதல் 60 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கிறது,” என்றார் நந்தினி.
தொடங்கிய நாள் முதல் வாடிக்கையாளர்களின் கருத்துகளைப் பெறுவதிலும் அதன் படி குறைகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனுக்குடன் சரி செய்வதிலும் கவனமாய் இருந்துள்ளார்.
வாடிக்கையாளர்களின் நேர்மறைக் கருத்துகளும் பாராட்டுகளும் தான் என்னுடைய இந்த பயணத்திற்கு உந்துதலாக அமைந்திருக்கிறது. மேலும் மக்களின் நம்பிக்கையை பெறுவதும், இங்குள்ள அனைத்து மகளிரையும் ஊக்குவிப்பதும் தான் எனது முக்கியக் குறிக்கோள். இன்றைய நிலையில் பல பெண்கள் தொழில்முனைவோராக திகழ்ந்து, தத்தமது திறமைகளை கொண்டு வாகைசூடுவது சந்தோஷமாக இருக்கிறது,” என்கிறார்.
என்னை பொறுத்தமட்டில் ஒரு தொழிலில் வெற்றிபெற வேண்டுமானால் முதலில் தங்களது திறன் மற்றும் பலத்தை நம்பவேண்டும். பிறகு தாங்கள் தேர்ந்தெடுத்தத் துறையில் தொழில் முனைவோர் ஆவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளுதல் மிக மிக அவசியம். தொடக்கத்தில் இந்த அடையாளத்தை நிறுவுவது மிகவும் சவாலாய் தான் இருந்தது. அதன் பின் சமூக ஊடகங்கள் ஓர் திருப்புழுனையாய் அமைந்தது, என தன் அனுபவங்களை பகிர்கிறார்.
பணம் ஈட்டுவதைத் தாண்டி இந்த இயற்கை உணவை மக்களிடம் மக்களுக்கான விலையில் தருவதில் மற்றும் அவர்களின் நம்பிக்கையை பெறுவதில் தான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதனை இன்னும் பெரிய அளவில் வளர்த்துச் சென்று அனைத்து மகளிரையும் ஊக்குவிப்பது தான் எனது நீண்ட கால இலக்கு,” என்றார் நந்தினி.