புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் இசைஞானியின் படம்: கொண்டாடும் நெட்டிசன்கள்!
டைம்ஸ் சதுக்கத்தில் `ராஜா ஆஃப் மியூசிக்'!
தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இசைஞானி இளையராஜா. 1000க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளார். தற்போது பல படங்களுக்கு இசையமைத்து வரும் இளையராஜா, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள விளம்பரப்பலகையில் தன்னுடைய விளம்பரத்தை அறிமுகம் செய்துள்ளார். பாடல்கள் ஒலிபரப்பு செய்யும் 'ஸ்பாட்டிபை' (Spotify) செயலியுடன் சமீபத்தில் இணைந்தார்.
அதன்படி, ஸ்பாட்டிபை ஆப்-பில் தனது பிளேலிஸ்ட்டுகளை விளம்பரப்படுத்தும் வகையில் 3 நிமிட விளம்பரப் படத்தில் நடித்தார். சில நாட்களாக டிவியில் ஒளிபரப்பட்டு வரும் இந்த விளம்பரம் தற்போது புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள விளம்பரப்பலகையில் திரையிடப்பட்டுள்ளது.
விளம்பரப் படத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் திரையிடப்பட்டது. நேற்று இரவு திரையிடப்பட்ட காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.
இளையராஜாவும் இந்தப் புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து,
“இந்த புனிதமான நாளில் இசையின் ராஜா, நியூயார்க்கில் உள்ள பில்போர்ட்ஸ் ஆஃப் டைம் சதுக்கத்தில்" என்று பதிவிட்டுள்ளார்.
இளையராஜாவின் குடும்ப உறுப்பினர்கள் இந்த பெருமையால் தற்போது மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இளையராஜாவின் மகனும் இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா,
“இந்த சாதனையை இளையராஜாவின் தொழில் வாழ்க்கையில் முக்கியமான படி," என்று பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு சமூக ஊடகங்களில்,
"எங்கள் சொந்த இசைஞானியின் புகைப்படம் டைம்ஸ்கொயரில். இது எங்களுக்குப் பெருமை," என்று பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
மேலும், பல பிரபலங்கள் இந்த சாதனையை பகிர்ந்து இளையராஜா குறித்து பெருமையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.