வாட்ஸ் அப் செய்தி அனுப்பியவரை கண்டறிவது சாத்தியம்: ஐகோர்ட்டில் ஐஐடி பேராசிரியர் தகவல்!
நீதிமன்ற உத்தரவு, நாட்டின் 600 மில்லியன் பயனாளிகளின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் அமையலாம் என்று இண்டர்நெட் பிரிடம் பவுண்டேஷன் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சமூக ஊடக நிறுவனங்களின் நிலைப்பாட்டை மறுக்கும் வகையில் சென்னை ஐஐடி பேராசிரியர் ஒருவர், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சேவைகளில் பகிரப்படும் செய்திகளின் மூலத்தை கண்டறிய முடியும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சைபர் குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்படுபவர்களை எளிதாக அடையாளம் காணும் வகையில், பயனாளிகளின் சமூக ஊடக கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க கோரும் போது நலன் கருதிய மனு தொடர்பான விசாரணையின் போது, நீதிபதிகள் எஸ்.மணிகுமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் இந்தத் தகவலை பேராசிரியர் வி.காமகோடி தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள், குறிப்பாக வாட்ஸ் அப், செய்திகள் அனைத்தும் என்கிரிப்ட் செய்யப்படுவதால், மூலச் செய்தி அனுப்பியவரை கண்டறிவது கடினம் எனக் கூறி வருவதை மறுக்கும் வகையில் பேராசிரியர் காமகோடி, செய்திகளுடன் அடையாளம் காணும் குறிப்பை இணைப்பது தொழில்நுட்ப நோக்கில் சாத்தியம் எனக் கூறினார்.
சமூக ஊடகங்கள் தங்கள் பதிலை சமர்பிக்க்கும் வகையில், இந்த கருத்தை அறிக்கையாக, ஜூலை 31 ம் தேதிக்குள் சமர்பிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை தள்ளி வைத்தனர்.
இந்த மனுவில் தன்னை இணைத்துக்கொண்ட இண்டெர்நெட் பிரிடம் பவுண்டேஷன், ஆதார் எண்ணை இணைக்கும் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இதற்கான எந்த உத்தரவும் நாட்டின் 600 மில்லியன் இணையப் பயனாளிகளின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக அமையும் என தெரிவித்தது.
வாட்ஸ் அப் செய்திகள் ஃபார்வேர்டு செய்யப்படும் போதெல்லாம் மூல செய்தியாளரின் போன் எண்ணை இணைப்பதற்கான பேராசிரியரின் யோசனைக்கும் இந்த அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இது இணைய பயனாளிகளின் பிரைவசி மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
“அனாமதேய தன்மை எதிர்ப்பு குரலை சாத்தியமாக்குகிறது, சாதி, வர்கம், மதம், பாலினம் மற்றும் பாலின சார்பு ஆகியவற்றின் அடிப்படையில் தனிநபர்களை மவுனமாக்கும் சமூகத்தின் அதிகார அடுக்குகளை எதிர்கொண்டு பொது உரையாடல் செழுமை பெற வழிவகுப்பதாகவும்,” இந்த அமைப்பு தெரிவித்தது.
#MeToo இயக்கத்தின் போதும் பல பெண்கள் பாலியல் வன்முறை தொடர்பான தங்கள் அனுபவங்களை அனாமதேயமாக பகிர்ந்து கொண்டதாகவும், இவர்கள் தங்களை அடையாளப்படுத்த வேண்டியிருந்தால் சமூக தயக்கம் மற்றும் பதிலடி அச்சத்தால் பேசாமல் இருந்திருப்பார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பது.
ஆதாரம்: பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்
-