15 கிராம்- 1 லட்ச ரூபாயா? இது தங்கத்தின் விலை அல்ல என்றால் நம்புவீர்களா...
உலகின் அதிக விலை உயர்ந்த சாக்லேட்டை அறிமுகம் செய்து உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது ஐடிசி நிறுவனம்.
சாக்லேட்டுக்குக் நாவைக் கட்டுப்படுத்த முடியாத மனிதர்களே இருக்கமாட்டார்கள். கோபங்களுக்கான சமாதானமாகவும், மகிழ்ச்சிக்கான அடையாளமாகவும் திகழும் சாக்லேட்டுக்கு ஒரு இருக்கமான சூழலை சட்டென இனிப்பானதாக மாற்றும் சக்தி இருக்கிறது.
சாக்லேட் என்றாலே இந்தியர்கள் மனதில் நினைவுக்கு வருவது டெய்ரி மில்க், ஃபைவ் ஸ்டார், அதிக பட்ஜெட் என்றால் போர்ன்வில்லே, (bournville) பெர்ரெரோ ரோஷர் (ferrero rocher) இதைத் தாண்டி பிரபலமான சாக்லேட்கள் என்றால் டிவி விளம்பரங்களில் வரும் சில முன்னணி பிராண்டுகள் அவ்வளவே.
தற்போது ஐடிசி நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்துள்ள சாக்லேட்டின் விலையை கேட்டால் அதை சாப்பிடாமலே தலைச் சுற்றிவிடும் அளவுக்கு காஸ்ட்லி...
பிரம்மாண்டங்களுக்கு பெயர் பெற்ற ஐடிசி நிறுவனம் சாக்லேட் தயாரிப்புத் துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. ஐடிசியின் ஆடம்பர சாக்லேட் பிராண்டான ஃபேபெல் எக்ஸ்க்யூசைட் (Fabelle Exquisite) உலகின் விலை உயர்ந்த சாக்லேட்டை அறிமுகம் செய்து வரலாற்றை படைத்துள்ளது.
ஒரு கிலோ சாக்லேட் ரூ. 4.3 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள Fabelle Trinity Truffles Extraordinaire சாக்லேட்டை ஃபேபெல்லுடன் இணைந்து மிசெலின் ஸ்டார் செஃப் பிலிப் கான்டிசினி தயாரித்துள்ளார்.
இந்த விலை உயர்ந்த சாக்லேட் உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளது.
ஒரு துண்டு சாக்லேட் இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ. 17,725.5 என்ற அளவில் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட Fritz Knipschildt's Le Madeline au Truffleன் சாதனையை ஐடிசி முறியடித்துள்ளது.
இந்த சாக்லேட்டில் அப்படி என்ன தான் இருக்கு?
அதிக விலை என்றதும் இந்த சாக்லேட் தங்கத்தில் செய்யப்பட்டதா என்று நினைத்தீர்களா?
அதுதான் இல்லை, இந்த விலை உயர்ந்த சாக்லேட் 3 வகைகளில் கிடைக்கிறது. இந்த 3 வகைகளுக்கும் ஒவ்வொரு பெயர் வைக்கப்பட்டுள்ளது கிரியேட்டர், நர்சர், டெஸ்ட்ராயர். முதல் ரகம் கிரியேட்டர் தஹதியன் வெணிலா பீன்ஸ் உடன் தேங்காய் கேனெச்சில் தோய்க்கப்பட்டது. இரண்டாவது ரகம் ஜமைக்கன் ப்ளூ மவுண்டெயின் காபியுடன் கனா டார்க் சாக்லேட் இணைந்த கலவை. கடைசி ரகம் செயின்ட் டாமினிக் டார்க் சாக்லேட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்த 3 வகைகளுக்காக செஃப் கான்டிசினி தேர்ந்தெடுத்துள்ள பொருட்கள் சுவையின் உச்சத்தை கொடுப்பவை என விவரிக்கப்படுகிறது.
இந்த விலை உயர்ந்த சாக்லேட்டானது கைகளாலேயே உருவாக்கப்பட்ட மரப்பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படும். 15 கிராம் எடை கொண்ட 15 ட்ரபுல்கள் அனைத்து வரிகளையும் உள்ளடக்கி ரூ. 1 லட்சமாகும். ஆர்டர்களுக்கு ஏற்ப இந்த விலை உயர்ந்த சாக்லேட்டானது தயாரித்து கொடுக்கப்படுமாம்.
தகவல் உதவி : எக்கனாமிக் டைம்ஸ் | கட்டுரையாளர் : கஜலெட்சுமி