ஜேக் டார்சியின் முதல் ட்வீட் NFT-யை $2.9 மில்லியனுக்கு வாங்கியவருக்கு ஏமாற்றம்: மறுவிற்பனை மதிப்பு $278 மட்டுமே!
எதிர்ப்புகளை சந்தித்து வரும் கிரிப்டோ தொழில்முனைவோரான சினா எஸ்டவி, டிவிட்டர் நிறுவனர் ஜேக் டோர்சி முதல் டிவீட்டின் என்.எப்.டி.,யை 50 மில்லியன் டாலர் எதிர்பார்த்து ஏலத்திற்கு கொண்டு வந்த நிலையில், 278 டாலர் மட்டுமே அதிகபட்சமாக ஏலம் கேட்கப்பட்டுள்ளது.
எதிர்ப்புகளை சந்தித்து வரும் கிரிப்டோ தொழில்முனைவோரான சினா எஸ்டவி (Sina Estavi) கடந்த ஆண்டு 2.9 மில்லியன் டாலருக்கு வாங்கிய, டிவிட்டர் நிறுவனர் ஜேக் டோர்சி முதல் டிவீட்டின் என்.எப்.டி. இன்று மதிப்பிழந்திருப்பதை உணந்திருக்கிறார்.
ஈரானைச் சேர்ந்த கிரிப்டோ முனைவரான சினா எஸ்டவி, சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 9 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் கிரிப்டோ உலகில் நுழைந்திருக்கிறார். முதல் முயற்சியாக டிவிட்டர் நிறுவனர் ஜேக் டோர்சியின் முதல் டிவீட்டின் என்.எப்.டி-யை மறு விற்பனை செய்ய திட்டமிட்டார். இந்த என்.எப்.டி.,-யை அவர் கடந்த ஆண்டு 2.9 மில்லியன் டாலருக்கு வாங்கியிருந்தார்.
இந்த என்.எப்.டி.,-யை கடந்த வாரம் 48 மில்லியன் டாலர் எனும் துவக்க விலையில் விற்பனைக்கு அறிவித்திருந்தார். இதைவிட அதிக விலைக்கு விற்பனையாகும் என எதிர்பார்த்தவர், பாதி தொகையை அல்லது 25 மில்லியன் டாலரை நன்கொடையாக அளிக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் அவருக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் அதிகபட்ச கேட்பு தொகையாக 278 டாலர் மட்டுமே அமைந்துள்ளது. இந்த கோரிக்கையை ஏற்பதா என்பது பற்றி முடிவெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் உள்ளது.
ஈரானிய பொருளாதார அமைப்பை குலைக்க முயன்றதாக கடந்த ஆண்டு மே மாதம் அவர் கைதானார். அண்மையில் சிறையில் இருந்து விடுதலை ஆனவர், மீண்டும் தனது கிரிப்டோ செல்வாக்கை உருவாக்கும் விதமாக முயற்சித்து வருகிறார்.
எனினும், இரண்டு தோல்வி முயற்சிகள் மற்றும் சிறைவாசம் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் அவரது மதிப்பு சரிந்திருக்கிறது. சிறைவாசம் அவரது பிரிட்ஜ் ஆராகிள் கம்பெனியின் மதிப்பை பாதித்திருக்கிறது.
என்.எப்.டி., விற்பனை மூலம் வரும் தொகையை கொண்டு துவக்கும் புதிய வர்த்தகம் தனது தொழில் வாழ்க்கையை மீட்கும் என அவர் நம்பியிருந்தார்.
ஆங்கிலத்தில்: தாருதர் மல்கோத்ரா | தமிழில்: சைபர் சிம்மன்