ட்விட்டரை விலைக்கு வாங்க திட்டம் போடும் எலான் மஸ்க்; 4100 கோடிக்கு பேரம்!
ட்விட்டர் நிர்வாக குழுவின் பொறுப்பை வேண்டாம் என மறுத்த எலான் மஸ்க், அதனை ஒட்டுமொத்தமாக வாங்க பேரம் பேசி வருகிறார்.
ட்விட்டர் நிர்வாகக் குழுவின் பொறுப்பை வேண்டாம் என மறுத்த எலான் மஸ்க், அதனை ஒட்டுமொத்தமாக வாங்க பேரம் பேசி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகிலேயே நெம்பர் ஒன் பணக்காரராக வலம் வருகிறார். எலான் மஸ்க் ட்விட்டரில் படு ஆக்டிவாக வலம் வரக்கூடியவர் நாளோன்றுக்கு 6 முதல் 12 ட்வீட்களை செய்து வருகிறார். சுமார் 80 மில்லியன் அளவிற்கு ஃபாலோயர்களைக் கொண்டுள்ளதால் தனது பிசினஸ் அப்டேட், கார் அறிமுகம் உள்ளிட்ட பல பிசினஸ் சம்பந்தமான விளம்பரங்களை ட்விட்டரிலேயே செய்து கொள்கிறார்.
இபப்டி ட்விட்டரில் ஆக்டிவாக வலம் வரும் மஸ்க், சமீபத்தில் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீத பங்குகளை 2.89 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து வாங்கியிருந்தார். இதனையடுத்து, ட்விட்டர் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இடம் பெறுவார் என்றும், பல அதிரடி மாற்றங்கள் ட்விட்டரில் நிகழக்கூடும் என்றும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இதனிடையே, எலான் மஸ்க் தங்களது குழுவில் இணைந்துவிட்டதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவிக்க திட்டமிருந்த அதே நாள் காலையில், தான் நிர்வாக குழுவில் இருக்க விரும்பவில்லை என அதே ட்விட்டரில் அறிவித்தார். இதனையடுத்து, ட்விட்டர் சிஇஓ ஒரு முழு நீள விளக்கமளித்திருந்தார். அதில்,
"எலான் மஸ்க் எங்கள் குழுவில் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். என்ன நடந்தது என்பதைப் பற்றி இங்கே நான் பகிர்ந்து கொள்கிறேன். எலான் குழுவில் சேர்வது பற்றியும், எலானுடன் நேரடியாகவும் பல விவாதங்கள் நடத்தினோம். நாங்கள் ஒத்துழைத்து, அபாயங்களைப் பற்றி தெளிவுபடுத்துவதில் உற்சாகமாக இருந்தோம். எலானை நிறுவனத்தின் நம்பிக்கையாளராகக் கொண்டிருப்பது, அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களைப் போலவே, நிறுவனம் மற்றும் எங்கள் பங்குதாரர்கள் அனைவரின் நலன்களுக்காகவும் செயல்பட வேண்டும், முன்னோக்கிச் செல்லும் சிறந்த பாதை என்று நாங்கள் நம்பினோம். இதனால் எலான் மஸ்கிற்கு நிர்வாகக் குழுவில் இடம் ஒதுக்கினோம். பேக்ரவுண்ட் செக்அப் மற்றும் முறையான ஆவண பரிமாற்றத்திற்கு பிறகு எலானை நிர்வாக குழுவில் இணைக்க முடிவெடுத்தோம்,” எனத் தெரிவித்திருந்தார்.
தற்போது எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். ஒரு பங்கை 54.20 டாலருக்கு வாங்க தயார் என்றும் அறிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவன தலைவர் பிரட் டெய்லருக்கு மஸ்க் எழுதிய கடிதத்தில்,
"உலகம் முழுவதும் சுதந்திரமான பேச்சுரிமைக்கு சிறந்த தளமாக ட்விட்டர் இருப்பதாக நான் நம்புகிறேன். ஜனநாயகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், செயல்படவும் பேச்சுரிமை என்பது அவசியம். எனது முதலீட்டைச் செய்த பிறகு கவனித்ததில் நிறுவனம் அதன் தற்போதைய வடிவத்தில் வளர்ச்சியடையாது அல்லது அதன் சமூகத் தேவைக்கு சேவை செய்ததாகவோ இல்லை என உணர்கிறேன். ட்விட்டரை ஒரு தனியார் நிறுவனமாக மாற்ற வேண்டும்," எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்தால் ஒரு பங்கை 54.20 டாலர் கொடுத்து வாங்கத் தயார். மொத்த விற்பனைத் தொகையும் பணமாக அளிக்கத் தயார் என்றும் கூறியுள்ளார் எலான் மஸ்க்.
தற்போது குறிப்பிட்ட விலை தான் இறுதியான விலை, இதை ஏற்காவிடில் என்னுடைய பங்குதாரர் நிலையை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனவும் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
ட்விட்டரில் முதலீடு செய்வதற்கு முந்தைய நாளில் 54% ப்ரிமியத்தையும் அதன் பிறகு 38 சதவீதம் ப்ரியத்தையும் தருகிறேன் என மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த வார இறுதியில் தான் குறிப்பிட்டது போல், செய்ய வேண்டிய மாற்றங்களைச் செய்ய நிறுவனம் தனியார்மயமாக்கப்பட்டிருக்க வேண்டும் என விரும்புவதாகவும், கடந்த பல நாட்களாக இதைப் பற்றி யோசித்த பிறகே, ட்விட்டர் நிறுவனத்தை வாங்க முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ள எலான் மஸ்க், இன்றிரவு உங்களுக்கு ஆஃபர் லெட்டர் அனுப்பப் போகிறேன், காலையில் அதை பொதுவெளியில் பகிரங்கமாக அறிவிப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொகுப்பு: கனிமொழி