எலான் மஸ்க்கை மிரட்டியவருக்கு இவ்வளவு மவுசா? 19 வயது இளைஞருக்கு குவியும் வாய்ப்புகள்!
எலான் மஸ்கின் பிரைவேட் ஜெட் பயண விவரங்களை டிராக் செய்து ட்விட்டரில் வெளியிட்ட 19 வயது இளைஞரின் திறமையை பார்த்து மிரண்டு போன ஜெட் நிறுவனங்கள் அவரை எப்படியாவது பணியில் அமர்த்த வேண்டுமென போட்டி போட்டு வருகின்றன.
எலான் மஸ்கின் பிரைவேட் ஜெட் பயண விவரங்களை டிராக் செய்து ட்விட்டரில் வெளியிட்ட 19 வயது இளைஞரின் திறமையை பார்த்து மிரண்டு போன ஜெட் நிறுவனங்கள் அவரை எப்படியாவது பணியில் அமர்த்த வேண்டுமென போட்டி போட்டு வருகின்றன.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க முடியாது எனும் அளவிற்கு பிரபலமானவர். கடந்த ஆண்டு வெளியான உலகப் பணக்காரர்களில் பட்டியலில் 195 பில்லியன் சொத்து மதிப்புடன் முதலிடம் பிடித்தவர். சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக வலம் வரும் எலான் மஸ்க் கடந்த சில நாட்களுக்கு முன்பு, 19 வயது இளைஞர் ஒருவரை ட்விட்டரில் ப்ளாக் செய்தது பரபரப்பைக் கிளப்பியது.
தற்போது அந்த இளைஞர் தங்களது நிறுவனத்தில் பணிக்கு சேர வேண்டும் என போட்டி, போட்டிக் கொண்டு அழைத்து வருகின்றன. அப்படி என்ன செய்தார் அவர்? அவருக்கு ஏன் இந்த திடீர் டிமெண்ட் என பார்க்கலாம்...
யார் இந்த ஜாக் ஸ்வீனி?
19 வயதான ஜாக் ஸ்வீனி கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு கல்வி கட்டணத்தை செலுத்த பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்காக அவர் செய்த துணிகரமான செயல் தான் தற்போது உலகம் முழுவதும் பிரபலாக காரணமாக அமைந்துள்ளது.
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது பயணத்திற்காக தனி ஜெட் விமானத்தை வைத்துள்ளார். கல்ப்ஸ்ட்ரீம் என்ற அந்த ஜெட் விமானத்தில் அவர் எங்கு செல்கிறார்? எவ்வளவு தூரம் சென்றுள்ளார்? எவ்வளவு நேரம் பயணம் செய்தார்? போன்ற சீக்ரெட் தகவல்களை ஜாக் ஸ்வீனி @ElonJet என்ற ட்விட்டர் பக்கத்தில் விலாவாரியாக புட்டு, புட்டு வைக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்த எலான் மஸ்க் பதறிப்போய்விட்டார்.
பாட் எனப்படும் தானியங்கி சாப்ட்வேர் மூலமாக எலான் மஸ்க் பயண விவரங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதனால் ஜாக்கிற்கு ட்விட்டர் பாலோயர்ஸும், மஸ்கிற்கு BP-யும் கிடுகிடுவென அதிகரித்தது.
‘எங்க போனாலும் ஃபாலோப் பண்றானே?’ என மிரண்டு போன எலான் மஸ்க், ஜாக்கிடம் ஒரு பேரம் பேசினார். அதாவது,
தனது பயண விவரங்களை வெளியிட்டு வரும் ட்விட்டர் கணக்கை மூடவும், போட் சாப்ட்வேரை ஒப்படைக்கவும் 5 ஆயிரம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 3 லட்சத்து 73 ஆயிரத்து 532 ரூபாய் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். ஆனால், இதற்கெல்லாம் மசியாத ஸ்வீனி, தனக்கு 50 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 37,33,710 வேண்டும் என எலான் மஸ்கிடம் டிமாண்ட் வைத்தார்.
அந்த பணத்தை வைத்து தனக்கு பிடித்த டெஸ்லா காரை வாங்கப்போவதாக அந்நிறுவனத்தின் தலைவரிடமே டீல் பேசினார். மீதமுள்ள பணம் தனது கல்லூரி கட்டணத்தை செலுத்த உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை வைத்தார்.
ஆனால், இதற்கு மசியாத எலான் மஸ்க், ஜாக் ஸ்வீனியின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்துவிட்டு, மீண்டும் தனது பிசியான வேலைகளில் மூழ்கிவிட்டார்.
ஜாக் ஸ்வீனிக்கு குவியும் வேலை வாய்ப்புகள்:
உலகப் பணக்காரர் ஒருவரது பிரைவேட் ஜெட் விவரங்களை ஒரு 19 வயது இளைஞர் ட்விட்டரில் பகிர்கிறார் என்றால் சாதாரண விஷயமா? என்றால் ஒரே நாளில் ஜாக் ஸ்வீனிக் உலகப் பிரபலமாகிவிட்டார். அவரது திறமையும் சோசியல் மீடியா மூலமாக அனைவருக்கும் தெரியவந்தது.
“எலான் மஸ்க்கையே மிரட்டி இருக்கானே யாருய்யா இவன்? எனக்கே பார்க்கனும் போல இருக்கே...” என பல கார்ப்ரேட் நிறுவனங்கள் ஜாக் ஸ்வீனிக்கை வலை வீசித் தேட ஆரம்பித்தன.
தி போஸ்ட் பத்திரிகைக்கு ஜாக் ஸ்வீனி அளித்த பேட்டியில்,
“ஆர்லோண்டாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தனியார் ஜெட் விமான வடிவமைப்பு நிறுவனமான ஸ்ட்ராடோஸ் ஜெட் சார்ட்டர்ஸ், தொழில்நுட்ப மேம்பாட்டுக் குழுவில் எனக்கு வேலை வழங்க முன்வந்தது,” எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ராடோஸ் நிறுவன சிஇஓ ஜோயல் தாமஸ் ஸ்ட்ராடோஸும் இந்தத் தகவலை உறுதிபடுத்தியுள்ளார்.
“ஜாக் ஸ்வீனியை எங்களுடைய நிறுவனத்தின் பணிக்கு சேரும் படி பேசி வருகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம் வீல்ஸ் அப், நெட்ஜெட்ஸ் உள்ளிட்ட பிரபல தனியார் ஜெட் சேவை நிறுவனங்களின் போட்டி நிறுவனம் ஆகும்.
ஜாக் ஸ்வீனியிடம் உள்ள ஜெட் டிராக்கிங் பற்றிய அறிவும், திறமையும் விமானத்தின் சரியான நேரத்தை கணிக்க உதவும் என்றும், இதனால், தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை அளிக்க முடியும் என்றும் ஸ்ட்ராடோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்வீனி கல்லூரி மாணவர் என்பதால் அவருக்கு ஏற்ற நேரத்தில் பணி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
வாய்ப்புகள் குவிந்து வருவதால், ஸ்ட்ராடோஸ் ஜெட் சார்ட்டர்ஸ் நிறுவனத்தின் ஆஃபரை ஏற்றுக்கொள்வது பற்றி ஜாக் ஸ்வினி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. மேலும் UberJets நிறுவனத்தில் பகுதி நேர ஆப் டெவலப்பராகவும் ஜாக் ஸ்வீனி பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி - நியூயார்க் போஸ்ட் | தமிழில் - கனிமொழி