ரூ.265 கோடி டர்ன்ஓவர்: 'மோடி குர்தா' புகழ் நிறுவனத்தின் வெற்றிப் பயணம்!
வெறும் 250 சதுர அடியில் ஒரு சிறிய தையற்கடையாக தொடங்கிய சகோதரர்கள் பிரபல ப்ராண்ட் ஆக்கியது எப்படி?
"சிறிதான தொடக்கம்தான் மிகப் பெரிய இலக்குக்கு அடித்தளம்..." என்பார்கள்.
அகமதாபாத்தைச் சேர்ந்த ஜிதேந்திர சவுகான் (60) மற்றும் பிபின் சவுகான் (57) ஆகியோரின் வெற்றிப் பயணம், இந்தக் கூற்றை மெய்ப்பித்திருக்கிறது.
தங்களது வாழ்வாதாரத்துக்காக வெறும் 250 சதுர அடியிலான ஒரு சிறிய தையற்கடையுடன் 1981ஆம் ஆண்டில் இந்தச் சகோதரர்களின் பயணம் தொடங்கியது. 'சுப்ரீமோ' என்ற பெயரில் தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்தனர். குஜராத்தில் மிகவும் பிரபலமான பிராண்டுக்குச் சொந்தக்காரர்களாக ஆகி, ஆயத்த ஆடை சந்தையில் ஆதிக்கம் செலுத்தப்போகிறோம் என்பதை அவர்கள் அப்போது அவர்கள் கணித்திருக்க வாய்ப்பில்லை.
இந்த நிறுவனத்தின் ஆன்லைன் விற்பனைப் பிரிவுத் தலைவரும், இரண்டாம் தலைமுறை தொழில்முனைவருமான பிபின் சவுகானின் மகள் குஷாலினி சவுகான், எஸ்பிஎம் ஸ்டோரி உடன் உரையாடும்போது கூறியது:
"என் அப்பாவும், பெரியப்பாவும் வீட்டிலிருந்து தையல் தொழிலைச் செய்யத் தொடங்கினர். துணிகளைத் தனித்துவத்துடன் வடிவமைத்துக் கொடுத்து வந்தனர். அவர்கள் படிப்படியாக தங்கள் பக்கத்து ஊர்களில் இருந்து துணிகளை வாங்கி, தங்களது வாடிக்கையாளர்களுக்கு தரமான ஆடைகள் கிடைக்க வழிவகுத்தனர்."
'சுப்ரீமோ'-வின் நிறுவனர்களான ஜிதேந்திராவும், பிபினும் 1991ல் தங்கள் நிறுவனத்தை 'ஜேட்ப்ளூ' (JadeBlue) எனும் பிராண்டாக மாற்றினர். சர்வதேச அளவில் சந்தையை விரிவுப்படுத்துவதுதான் இந்த பிராண்ட் பெயர் மாற்றத்துக்குக் காரணம்.
குஷாலினி சவுகான் உடனான நேர்காணலில் இருந்து...
'சுப்ரீமோ' நிறுவனம் 'ஜேட்ப்ளூ' என்னும் பிராண்டாக வளர்ந்தது எப்படி? தற்போது உங்கள் நிறுவனம் வழங்கும் பிராண்டுகள் என்னென்ன?
குஷாலினி சவுகான்: சிறிய அளவிலான ஆரம்பம்தான். எனினும், என் அப்பாவும் பெரியப்பாவும் சேர்ந்து அசாத்திய ஈடுபாட்டுடனும் மன உறுதியுடனும் இந்த பிராண்டை உருவாக்கினர். தொழில் மீதான மதிப்புதான் எங்கள் நிறுவனம் பின்பற்றும் அடிப்படை. மக்களை நேரடியாக அணுகியதே எங்களின் முன்னேற்றத்துக்கு வித்திட்டிருக்கிறது எனலாம். குறிப்பாக, விசுவாசம் மிகுந்த வாடிக்கையாளர்கள் ஒருபோதும் எங்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியதே இல்லை.
ஃபார்மல்கள் முதல் கேஷுவல்கள் வரையிலும் ஆண்களுக்கான அனைத்து வகை அளவீடுகளிலான ஆடைகளையும் ஒரே குடையின்கீழ் வழங்குகிறது 'ஜேட்ப்ளூ'. ப்ரீமியம் ரேஞ்ச் என எடுத்துக்கொண்டால், 'ஜேட்ப்ளூ சூப்பர்லூக்ஸ்' என்ற பெயரில் ரூ.3,999 விலையில் தொடங்கும் சட்டைகள் கிடைக்கின்றன.
'க்ரீன்ஃபைபர்' எனும் லேபிளையும் எங்கள் நிறுவனம் தொடங்கியிருக்கிறது. இந்தூர், போபால், ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் உதய்பூர் ஆகிய இரண்டாம் அடுக்கு நகரங்களில் இந்த வகை கிடைக்கும். 'க்ரீன்ஃபைபர்' சட்டைகளைப் பொறுத்தவரையில் ரூ.899ல் இருந்து ரூ.1,499 வரையிலான விலையில் கிடைக்கும்.
'ஜேட்ப்ளூ'-வின் துணிகளுக்கான சோர்ஸ் எங்கிருந்து வருகிறது? ஆடை உற்பத்தி ஆலை எங்கு உள்ளது?
குஷாலினி சவுகான்: ஆண்களுக்கான லக்ஸூரி லைஃப்ஸ்டைல் ரீடெயில் செயின் ஸ்டோர்ஸ்களில் இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது, ஜேட்ப்ளூ லைஃப்ஸ்டைல் இந்தியா லிமிடட். தனித்துவமான ஆடைகள், ஃபேஷன் வியாபாரம், எக்ஸ்க்ளூசிவ் தையல் பணிகள் மற்றும் பிரத்யேக சேவைகளுக்கு எங்கள் நிறுவனம் சிறப்பிடம் பெற்றுள்ளது. ஆண்கள் அனைவருக்குமான ஒன்- ஸ்டாப்- ஷாப் ஆகவே திகழ்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெற்று, நாங்கள் ப்ரீமியம் துணிகளை வழங்குகிறோம். டார்மெயுல் முதல் ஸ்காபால் வரையிலும் ப்ரீமியம் துணிகள், அரவிந்த் முதல் ரேமாண்ட்ஸ் வரையிலும் டெனிம் வகைகள் என பல்வேறு பிராண்ட் துணிகளையும் வழங்குகிறோம். சினிமா, அரசியல், பிசினஸ், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களும் எங்களுடைய வாடிக்கையாளர் பட்டியலில் இருக்கிறார்கள்.
எங்களிடம் ஃபார்மல் மற்றும் பாரம்பரிய வகைக்கு ஆடை உற்பத்தி ஆலை இருக்கிறது. கேஷுவல் ஆடைகளைப் பொறுத்தவரையில், மும்பை மற்றும் பெங்களூருவில் உள்ள ஆலைகளில் அவுட்சோர்ஸ் செய்கிறோம்.
ஜேட்ப்ளூ தனது தயாரிப்புகளை ரீடெய்ல் ஸ்டோர்கள் மற்றும் அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் ஸ்நாப்சாட் உள்ளிட்ட இ-காமர்ஸ் தளங்கள் மூலம் விற்பனை செய்கிறது. மிந்த்ராவிலும் பட்டியலிட்டிருந்தோம், ஆனால், அந்நிறுவனத்துடன் சில சிக்கல்களால் அதிலிருந்து விலகிவிட்டோம். எங்களது அனைத்து கலெக்ஷனும் எங்களுடைய வலைதளத்திலேயே விற்பனைக்குக் கிடைக்கும். எங்கள் வலைதளத்தை இன்னும் மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இந்த பிசினஸ் பயணத்தில் எட்டிய மைல்கற்களின் குறிப்பிடத்தக்கவை?
குஷாலினி சவுகான்: 1995ல் ஜேட்ப்ளூ எனும் பிராண்ட் உதயமாகி, அகமதாபாத்தின் சி.ஜி சாலையில் 1500 சதுர அடியில் பிரமாண்ட ஸ்டோர் தொடங்கப்பட்டதுதான் முதல் மைல்கல். அதன்பின் எட்டு ஆண்டுகளிலேயே 2003ல் எங்கள் குழுமத்தின் 'க்ரீன்ஃபைபர்' எனும் லேபிளில் தனி ஸ்டோர் தொடங்கப்பட்டது. இன்று, க்ரீன்ஃபைபர் பிராண்ட் மட்டும் 28 நகரங்களில் 38 ஸ்டோர்களைக் கொண்டிருக்கிறது.
அதைத் தொடர்ந்து 2009ல் நவீன தொழில்நுட்ப எந்திரங்களுடன் அகமதாபாத்தில் முதல் உற்பத்தி ஆலை அமைக்கப்பட்டது. அங்குதான் பெரும்பாலான ஆயத்த ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி அனுமதியுடன் 2010ல் எங்கள் நிறுவனத்தின் தனி அடையாளமான 'மோடி குர்தா' ட்ரேடுமார்க் கிட்டியது. அதே ஆண்டில், தேசிய அளவில் எங்கள் நிறுவனம் தனது சிறகுகளை விரித்தது.
எங்களின் ஆடை வகைகள் மற்றும் சேவைகளின் தேவை மென்மேலும் கூடியதன் காரணமாக, 40,000 சதுர அடிகளில் இப்போது ஓர் உற்பத்தி ஆலை அமைக்கிறோம்.
டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களை நீங்கள் குறிவைக்காதது ஏன்?
குஷாலினி சவுகான்: பெரும்பாலான மெட்ரோ நகரங்களிலும், முதல் அடுக்கு நகரங்களிலும் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் புகழ்பெற்ற பிராண்டுகள் ஏற்கெனவே வலுவாக அடித்தளம் அமைத்துள்ளனர். தற்போதைக்கு இவர்களுடன் போட்டியிடுவது என்பது எங்களுக்கு சரியானதாக இருக்காது. மேலும், எங்கள் பிசினிஸை விரிவுபடுத்துவதில் எவ்வித அவசரமும் இல்லாமல் நிதானம் காட்டுகிறோம். நாங்கள் மிகப் பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ள குஜராத்தில் இன்னும் வலுவாக வலம்வர விரும்புகிறோம்.
எந்த ஒரு தொழிலுமே சவால்கள் இல்லாமல் வளர்ச்சி பெறாது; ரிஸ்குகளைக் கணித்து செயல்படுவது மிக முக்கியம். தற்போது ஆன்லைன் சந்தை மிகப் பெரிய அளவில் வளர்ந்து வரும் நிலையில், நேரடி ஸ்டோர்கள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றன. எனினும், சரியான ப்ரொமோஷன்கள், விசுவாசமான வாடிக்கையாளர்களின் உறுதுணை போன்றவற்றால் சவால்களை சமாளிக்க முடிகிறது.
உங்கள் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
குஷாலினி சவுகான்: ஜேட்ப்ளூ தனது வலைதளத்தை வாடிக்கையாளர்களுக்கு உகந்த வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது. பிரைவட் லேபிள்களுடன் எக்ஸ்க்ளூசிவ் பிராண்ட் ஆடைகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
ஆன்லைனிலும், ஸ்டோர்களிலும் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கான ஒருங்கிணைந்த திட்டங்களைத் தீட்டிவருகிறோம். எங்களுக்கு நெருக்கமான வாடிக்கையாளர்களுடன், ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கும் நல்ல அனுபவத்தைத் தருவோம் என நம்புகிறோம்.
ஆங்கிலத்தில்: பலக் அகர்வால் | தமிழில்: ப்ரியன்