5 லட்ச ரூபாய் விதை நிதியுடன் துவங்கி இன்று 1.6 கோடி ரூபாய் விற்றுமுதல் எட்டியுள்ள ஆடை நிறுவனம்!
குருகிராமைச் சேர்ந்த Post Fold நிறுவனம் இன்றைய தலைமுறையினருக்காக ஸ்டைலான ஆடைகளை உற்பத்தி செய்கிறது. பி2பி வணிகத்தை அறிமுகப்படுத்தி லிங்க்ட்இன், பெப்சி, கோத்ரெஜ் போன்ற நிறுவனங்களுக்கு சேவையளிக்கிறது.
ஃபேஷன் போக்குகள் விரைவாக மாறி வரும் இன்றைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் ஆன்லைன் ஷாப்பிங்கையே விரும்புகின்றனர். நமது ஆடைத்தொகுப்புகளை புதுப்பிக்க ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கும் நாட்கள் மலையேறிவிட்டது.
தற்போது இந்தியாவில் மின்வணிக வளர்ச்சி அதிகரித்திருப்பதால் மேற்கத்திய ஆடைகள், எத்னிக் உடைகள், காஷுவல்வேர், பார்ட்டி உடைகள் என அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கிறது. இந்தப் போக்கை கவனித்து இந்தப் பிரிவில் செயல்படத் தொடங்கி வெற்றிகரமாக இயங்கி வருகிறது ’போஸ்ட்ஃபோல்ட்’ (PostFold). இந்த ஆன்லைன் ஆடை பிராண்ட் ஆஷிஷ் குர்னானி, ஆஷ்ரே தாடை ஆகிய இரு நண்பர்களால் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குருகிராமைச் சேர்ந்த இந்த பிராண்ட் ஸ்டைலுக்கு முக்கியத்துவம் தரும் தலைமுறையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
ஆஷிஷ் அமெரிக்காவில் தனது நண்பர் ஆஷ்ரேவை சந்தித்தது குறித்தும் இந்தியா திரும்பியதும் வணிக பார்ட்னர்களாக மாறியது குறித்தும் எஸ்எம்பிஸ்டோரி உடனான உரையாடலில் பகிர்ந்துகொண்டார். இவரது உரையாடலில் இருந்து சில முக்கிய தகவல்கள் இதோ:
எஸ்எம்பிஸ்டோரி: Post Fold என்றால் என்ன? இந்த பிராண்டை அறிமுகப்படுத்தும் எண்ணம் எப்படித் தோன்றியது?
ஆஷிஷ் குர்னானி: எங்களது ஹாஸ்டல் வளாகத்தில் ஆஷ்ரேவும் நானும் சந்தித்துக் கொண்டோம். விரைவிலேயே நல்ல நண்பர்களானோம். பிறகு ஒரே அறையை இருவரும் பகிர்ந்துகொண்டோம். நாங்கள் அமெரிக்காவில் அதிக காலம் இருந்ததால் எங்களது ஆடை தேவைகளும் மாறியது. கேஷுவல், அலுவலக பயன்பாட்டிற்கு ஏற்ற ஆடைகள், பார்ட்டி ஆடைகள் என நாங்கள் தேர்வு செய்ய பல ஆடை வகைகள் இருந்தது.
ஏழாண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இந்தியா திரும்பியபோது இந்திய ஆடைகள் சந்தையில் பின்னடைவு இருப்பதைக் கண்டோம். மலிவு விலையில் கிடைக்கும் ஆடைகளின் தரம் குறைவாக இருப்பதையும் தரமான ஆடைகள் மிகவும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதையும் உணர்ந்தோம். உலகின் மிகச்சிறந்த பிராண்ட்களை தயாரிக்கும் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒன்றாக இந்தியா திகழும்போதும் உயர்தரமான கண்கவர் ஆடைகளைக் கண்டறிவது கடினமாகவே உள்ளது.
ஆடை வடிவமைப்பாளர் பெரிதாக மாறாதபோதும் ஆடம்பர பிராண்டுகளால் ஏன் மிகவும் அதிகமான விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று ஆராயத் தீர்மானித்தோம். ஆடை தயாரிப்பில் உயர்தர துணி பயன்படுத்தப்பட்டாலும் அதைக்காட்டிலும் கூடுதலாக பத்து மடங்கு தொகை நிர்ணயிக்கப்படுகிறது.
ஸ்டைலான ஆடைகளை உயர்தர துணிகளைக் கொண்டு தயாரிக்கவேண்டும்; குறைவான விலை நிர்ணயிக்கவேண்டும்; வாடிக்கையாளர்கள் தங்களது பயன்பாட்டிற்கு ஏற்ப ஆடை வகைகளை தேர்வு செய்ய உதவும் வகையில் ஆடைகளை அனுபவம் நிறைந்த ஸ்டைலிஸ்ட்களின் உதவியுடன் தொகுத்து வழங்கவேண்டும்; இவை அனைத்தும் சாத்தியப்படும் வகையில் ஒரு வணிக மாதிரியை உருவாக்கினோம்.
சுயநிதித் தொகை ஐந்து லட்ச ரூபாய் முதலீட்டுடன் போஸ்ட்ஃபோல்ட் நிறுவப்பட்டது.
கடந்த ஆண்டு போஸ்ட்ஃபோல்ட் 1.6 கோடி ரூபாய் விற்றுமுதல் எட்டியது.
எஸ்எம்பிஸ்டோரி: உங்களது தயாரிப்புகளைப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள். துணி வகைகளை எங்கு வாங்குகிறீர்கள்?
ஆஷிஷ் குர்னானி: உயர்தர தயாரிப்புகளை சிறந்த விலையில் வழங்கவேண்டும் என்பதே எங்களது நோக்கம். டிசைன் மற்றும் சோர்ஸிங் பணிகளை நாங்களே மேற்கொள்கிறோம். எங்களது படைப்புகளுக்கு உயிர் கொடுக்க குருகிராம், நொய்டா, லூதியானா ஆகிய பகுதிகளில் உள்ள உற்பத்தி பார்ட்னர்களுடன் பணியாற்றுகிறோம். எங்களது வணிக செயல்முறைகளில் இடைத்தரகர்களை தவிர்த்துவிடுகிறோம். இதனால் வாடிக்கைளார்களுக்கு சிறந்த தரத்திலான தயாரிப்புகள் நியாயமான விலையில் கிடைக்கிறது.
எங்களது பெரும்பாலான ஆடைகள் சுபிமா காட்டனால் தயாரிக்கப்பட்டவை. இது சிறந்த காட்டன் வகையாகும். கூடுதல் நீளம் கொண்ட இந்த இழைகள் காட்டனுக்கு வலிமையையும் மிருதுத்தன்மையையும் நிறத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தன்மையையும் வழங்குகிறது. இந்தியாவில் உரிமம் பெற்ற சுபிமா காட்டன் சில்லறை வர்த்தகர்கள் வெகு சிலரில் நாங்களும் ஒருவர். எங்களது தளத்தில் 20 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஆண்கள், பெண்கள் இருபாலினருக்கும் சுமார் 600 SKU-க்கள் உள்ளன.
எஸ்எம்பிஸ்டோரி: இந்திய சந்தையில் மற்ற ஆடை பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் சவால்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
ஆஷிஷ் குர்னானி: சந்தையில் ஏராளமானோர் செயல்படும் நிலையில் தனித்து விளங்குவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எங்களது நோக்கத்திற்கும் மதிப்பிற்கும் உண்மையாக நடந்து கொண்டு இதை சாத்தியப்படுத்தியுள்ளோம். சிறந்த தரமான தயாரிப்புகளை வழங்கவேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருந்து வருகிறது. இதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.
ஏராளமானோர் சந்தையில் செயல்படுவதால் போட்டி அதிகமாக இருப்பினும் ஒவ்வொருக்குமான பகுதி சந்தையில் இருப்பதாக கருதுகிறார் ஆஷிஷ். இந்த சந்தை பன்முகத்தன்மைக் கொண்டது என்பதால் சிறந்த துணி வகைகளைக் கொண்டு தரமான ஆடை வகைகளை வழங்குவது சாத்தியமே. எனவே ஒவ்வொரு பிராண்டும் வாடிக்கையாளர்களுக்கு புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தமுடியும்.
மின்வணிக போர்டல்களில் வழங்கப்படும் தள்ளுபடி மற்றுமொரு மிகப்பெரிய சவால் ஆகும். நாங்கள் Myntra, Jabong, Koovs ஆகிய தளங்களில் இடம்பெற்றுள்ளோம். இந்த போர்டல்களின் முக்கிய விற்பனைகள் காரணமாக தயாரிப்புகளின் விலையில் போட்டி ஏற்பட்டு சவாலான சூழல் உருவாகிறது.
எஸ்எம்பிஸ்டோரி: உங்களது பயணத்தின் முக்கிய மைல்கற்கள் யாவை?
ஆஷிஷ் குர்னானி: வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் வழங்கும் ஆடைகளின் தரமானது பி2பி பிரிவில் நாங்கள் நுழைய வாய்ப்பாக அமைந்தது. இதுவே எங்களது பயணத்தின் முக்கிய மைல்கல்லாகும். எங்களது தயாரிப்பை முயற்சி செய்த பலர் அவர்களது நிறுவனங்களுக்கு எங்களது தயாரிப்புகளை பரிந்துரை செய்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்பு நாங்கள் பி2பி பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தினோம்.
பெப்சி, கோத்ரேஜ், லிங்க்ட்இன் போன்ற பிராண்டுகளின் ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் விளம்பரத்திற்கான உயர்ரக ஆடைகளை வடிவமைத்து வழங்கியுள்ளோம்.
எங்களது லாஜிஸ்டிக்ஸ் பார்ட்னர் DTDC மூலம் அமெரிக்கா, யூகே, ஆஸ்திரேலியா ஆகிய சர்வதேச சந்தைகளிலும் விரிவடைந்துள்ளோம்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்களது வருங்காலத் திட்டங்கள் என்ன?
ஆஷிஷ் குர்னானி: டிஜிட்டல் ரீதியாக எங்களது தளத்தை விரிவடையச் செய்யவும் அதிக ஆடைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். நீண்ட கால அடிப்படையில் சில்லறை வர்த்தக அவுட்லெட்டை திறக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
ஆங்கில கட்டுரையாளர்: பாலக் அகர்வால் | தமிழில்: ஸ்ரீவித்யா