Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

பாராட்டு மழையில் 'ஜெய் பீம்' - ரியல் ஹீரோ ஜட்ஜ் 'சந்துரு' பற்றி இதோ!

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி சந்துரு!

பாராட்டு மழையில் 'ஜெய் பீம்' - ரியல் ஹீரோ ஜட்ஜ் 'சந்துரு' பற்றி இதோ!

Wednesday November 03, 2021 , 3 min Read

அமேசான் பிரைமில் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிற தமிழ் படம் ’ஜெய் பீம்’. சூர்யா வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ள இந்தப் படம் பழங்குடி மக்கள் அனுபவித்த வேதனையை வெளிப்படுத்தி இருப்பதால் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டுள்ள இந்தப் படத்தின் நிஜ நாயகன் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு ஆவார். 1993ல் அவர் வழக்கறிஞராக இருந்தபோது, இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக அவர் நடத்திய சட்டப் போராட்டத்தின் அடிப்படையில் படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.


அவரின் கதாபாத்திரத்தையே சூர்யா ஏற்று நடித்துள்ளார். அதனால், படத்தில் சூர்யாவின் பெயரும் சந்துருதான். 1993-ஆம் ஆண்டில் கடலூர் அருகே உள்ள முதனை கிராமத்தில் நிகழ்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு கொலை வழக்கு தான் இந்த கதை. இந்த கொலை வழக்கில் வழக்கறிஞராக இருந்தபோது நீதிபதி சந்துரு ஏற்று நடத்தினார்.

Jai bheem

முன்னாள் நீதிபதி சந்துரு உடன் நடிகர் சூர்யா

கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2006ல் பாதிக்கப்பட்ட இருளர் மக்களுக்கு தீர்ப்பு வாங்கித் தந்தார். அந்தக் காலத்தில் தனக்கு நேர்ந்த மிரட்டல்களையும் அதிகாரங்களையும் கடந்து இந்த வழக்கில் ராஜாக்கண்ணுவின் குடும்பத்துக்கு நீதியை தனது வாதங்கள் மூலம் நீதிபதி சந்துரு பெற்றுக்கொடுத்தார்.


இவரின் உழைப்பு படத்தில் பிரதிபலிக்கிறது. இதையடுத்து, நீதிபதி சந்துருவுக்கும், படத்துக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பாண்டிராஜ், மாரி செல்வராஜ், ராஜு முருகன், ரவிக்குமார் போன்றோர் பாராட்டி இருக்கின்றனர். இயக்குநர் பாண்டிராஜ் தனது டுவீட்டில்,

“ஜெய்பீம் தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சிமலர். சந்துரு, ராஜாகண்ணு, செங்கேணி, பெருமாள்சாமி, மைத்ரா, குருமூர்த்தி, வீராசாமி, மொசக்குட்டி, இருட்டப்பன், பச்சையம்மாள் இன்னும் மனதைவிட்டு அகலவில்லை..." என்று தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
ஜெய்பீம்

இயக்குநர் மாரி செல்வராஜ்,

“அவசியமானதை அவசியமான நேரத்தில் தயங்காமல் முன்னெடுத்து நகரும் சூர்யா சாருக்கு வாழ்த்துக்களும் ப்ரியமும். ஜெய்பீம் வெல்லட்டும்," என்றுள்ளார்.

இயக்குநர் ராஜு முருகன்,

“ஜெய் பீம்' அநீதிக்கு எதிரான நீதியின் நம்பிக்கை முழக்கம். ஜனநாயகத்தின் கோப்புகளில் கூட குறிக்கப்படாத உயிர்களின் மீது, அவர்களின் துயரங்களின் மீது, நம்பிக்கைகளின் மீது, நமது மனிதத்தின் மீது பெருவெளிச்சம் பாய்ச்சுகிறது," என்று பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ரவிக்குமார்,

“உண்மை சம்பவத்தை எடுத்துக்கொண்டு, சமூகத்தில் எளிய மக்களுக்காகப் போராடும் கம்யூனிச இயக்கத்தின் பங்கை, நீதிக்காக சமரசமின்றி போராடும் நேர்மையான வழக்கறிஞர் “சந்துரு” அவர்கள் பணியை இந்தத் தலைமுறை அறிய தந்திருப்பதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள்," என்றுள்ளார்.

இதேபோல் நடிகர் கமல்ஹாசன் ‘ஜெய் பீம்’ பற்றிய பதிவில்,

“ஜெய் பீம் பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் ஞானவேல். பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா மற்றும் ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்," என்றுள்ளார்.

விசிக கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,

“எளியவனைக் கண்டால் எட்டி உதைக்கும் இது சிறுத்தைகளின் அரசியல் முழக்கம். காலம் காலமாய் வஞ்சிக்கப்படும் வதைக்கப்படும் பழங்குடி மக்களின் பாழும் வாழ்வைப் பாடமாய் விவரிக்கும் படமே ’ஜெய் பீம்’. இது அரச பயங்கரவாதத்தின் பேரவலம்," என்றுள்ளார்.

ஏற்கனவே, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Jai bheem

யார் இந்த சந்துரு?!

கடந்த 2006 - 2013 வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார் சந்துரு. நீதிபதி பணிக்கு முன்பாக சுமார் 30 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணிபுரிந்துள்ளார். இந்த காலகட்டத்தில் மனித உரிமை, பெண்கள் உரிமை என பல பொது நல வழக்குகளைத் தொடர்ந்து வாதாடி வந்துள்ளார்.

சமூக, தொழிற்சங்க பிரச்னைகள் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து வாதாடி வந்தவர், தான் வாதாடிய மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளுக்கு கட்டணமே பெறாமல் பணியாற்றி வந்துள்ளார்.

பின்னர், 2001, 2004ம் ஆண்டுகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டு அதன்படி, 2006ம் ஆண்டு நீதிபதியானார். ஆனால், இவர் நீதிபதி ஆனது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லை. காரணம் இரண்டு முறை நீதிபதி பணிக்கு விண்ணப்பித்த அவரை, ’இவர் தீவிரவாதிகளுக்கான வக்கீல்' என்று முன்னாள் முதல்வர் அவருக்கு நீதிபதி பணிகொடுக்க மறுத்துள்ளாராம். இதன்பின் நீதிமன்ற படியேறி நீதிபதி பணியை பெற்றுள்ளார்.


அதன்படி, நீதிபதியாக பதவியேற்ற உடன் அவர் செய்த முதல் விஷயம், அவரின் சொத்து விவரங்களை ஒரு சீலிட்ட கவரில் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்து அதிரடி காட்டியிருக்கிறார். நீதிபதி பணியை நேசித்து செய்த சந்துரு,

தனது பனிக்காலத்தில் ஒரு நாளைக்கு 75 வழக்குகள். சராசரியாக மாதத்துக்கு 1500 தீர்ப்புகள் என கிட்டத்தட்ட 96 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி சாதனை புரிந்துள்ளார். இந்திய அளவில் இவ்வளவு வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கிய வேறு எந்த நீதிபதியும் இல்லை.
ஜெய்பீம்

இதேபோல், தனது பணிக்காலத்தில் உயர் நீதிமன்றத்தின் சம்பிரதாயங்களையும், ஆடம்பர மரபுகளையும் உடைத்தெறிந்த மனிதர் நீதிபதி சந்துரு. வழக்கமாக ஒரு நீதிபதி நீதிமன்றத்தினுள் நுழையும்போதும் வெளியில் செல்லும்போதும் அவருக்கு பணிவிடை செய்வதற்காக ஒரு ஊழியர் நியமிக்கப்படுவார். ஆனால், இதுபோன்ற செயல் ஆடம்பரம் என்று கூறி அதனை நிறுத்தினார் நீதிபதி சந்துரு.


மேலும், நீதிபதியின் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்படும் காவலர்களையும் வேண்டாம் என மறுத்தவர், நீதிமன்றத்தில் தன்னை ‘மை லார்ட்' என அழைக்க வேண்டாம் எனவும் வழக்கறிஞர்களை கேட்டுக்கொண்டார்.


இதேபோல், ‘நீதிபதி, நீதியரசர்' போன்ற வார்த்தைகளைவிட ’நீதி நாயகம்’ என்று அழைப்பதையே விரும்பினார்.

’மேடை நாடங்களுக்கு, போலீஸ் கமிஷனரிடம் அனுமதி பெறத் தேவையில்லை'; ’பஞ்சமி நிலங்களை, வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது'; ’சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் நியமனத்தில், இடஒதுக்கீடு', ’கோவில்களில், பெண்கள் பூஜை செய்வதற்கு தடைநீக்கம்'; ‘மாட்டிறைச்சிக் கடைகளுக்கான தடை நீக்கம்'; ‘அனைத்து சாதியினருக்கும் பொது தகன மேடை' என்று பல வரலாற்று தீர்ப்புக்களை வழங்கிய பெருமைக்குச் சொந்தக்காரர் நீதிபதி சந்துரு.