உலகின் தலைச்சிறந்த கொடையாளி 'ஜாம்ஷெட் ஜி டாடா' - 100 ஆண்டுகளில் ரூ.7.55 லட்சம் கோடி தானம்!
வெளிநாட்டவர்களை பின்னுக்கு தள்ளிய டாடா!
'ஹுருன்' மற்றும் எடெல்கிவ் ஃபவுண்டேஷன்' இணைந்து கடந்த நுாற்றாண்டில் உலகளவிலான நன்கொடையாளர்கள் யார் என்ற ஆய்வை மேற்கொண்டனர். இந்த ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த நுாற்றாண்டில், உலகளவிலான, 'டாப் - 50' நன்கொடையாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், கடந்த நுாற்றாண்டில் உலகளவில் மிகப்பெரிய நன்கொடை அளித்தவராக இந்தியாவை சேர்ந்த டாடா குழுமத்தின் நிறுவனரான ஜாம்ஷெட் ஜி டாடா இருந்துள்ளார். இவர் தனது வாழ்நாளில் 102 பில்லியன் டாலர் அளவுக்கு நன்கொடை வழங்கி, இந்த 50 பேர் பட்டியலில் முதலிடத்தை வகிக்கிறார்.
ஜாம்ஷெட் ஜி டாடா வழங்கிய நன்கொடை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட, 7.55 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவருக்கு அடுத்த இடத்தில் தான் மற்றவர்கள் உள்ளனர்.
பட்டியலில் இவருக்கு அடுத்தபடியாக இந்தியாவைச் சேராத, பில்கேட்ஸ், வாரன் பபெட், ஜார்ஜ் சோரஸ், ராக்பெல்லர் போன்றவர்கள் வருகின்றனர். பில்கேட்ஸ், மெலின்டா இருவரும் இணைந்து 5.52 லட்சம் கோடி ரூபாய் கொடை அளித்துள்ளனர். வாரன் பபெட் 2.77 லட்சம் கோடி ரூபாய் கொடை கொடுத்துள்ளார். ஜார்ஜ் சோரஸ் 2.57 லட்சம் கோடி ரூபாய், ராக்பெல்லர் 1.98 லட்சம் கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக இந்தியாவைச் சேர்ந்த மற்றும் ஒரு நபர் அதிக நன்கொடை அளித்திருக்கிறார்.
அவர் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி. இவர் இந்திய ரூபாய் மதிப்பில், 1.63 லட்சம் கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். இந்த அறிக்கையை வெளியிட்ட பின் பேசிய ஹுருன் நிறுவனத்தின் தலைவரும், தலைமை ஆராய்ச்சியாளருமான ரூபர்ட் ஹூக்வெர்ப்,
“பிரபலமான நன்கொடையாளர்கள் என்றால் நம் நினைவுக்கு வருவது வெளிநாட்டவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், உண்மையில் கடந்த நுாற்றாண்டில் ஜாம்ஷெட் ஜி டாடா தான் மிகப்பெரிய அளவில் நன்கொடைகளை வழங்கி இருக்கிறார். குறிப்பாக, கல்வி, சுகாதாரம் ஆகிய இரு துறைகளுக்கு டாடா அதிகளவு கொடை அளித்துள்ளார்," என்றார்.
இந்த ஆய்வில் வெளிவந்த இன்னொரு தகவல், நோபல் பரிசை ஏற்படுத்திய, ஆல்ப்ரட் நோபல்கூட இந்த கொடையாளர்கள் வரிசையில் இடம்பெறவில்லை என்பதுதான்.
இதற்கிடையே, இந்த 50 கொடையாளர்களில் 38 பேர், அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். 5 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள். சீனாவிலிருந்து 3 பேர் இடம்பெற்றுள்ளனர். அதேபோல், இந்த 50 பேர்களில், 37 பேர் தற்போது இல்லை. 13 பேர் மட்டுமே உயிருடன் இருக்கின்றனர்.
மேலும், இந்த 50 பேரும் வழங்கிய கொடையின் மொத்த தொகை, 61.57 லட்சம் கோடி ரூபாய் ஆகும். கடந்த நூற்றாண்டில் இந்த நிலை. ஆனால் தற்போது இருக்கும் பில்லியனர்கள் பெரும்பாலும் கொடை அளிப்பதில் பெரும்பாலும் ஈடுபாடு காட்டவில்லை. கொடை கொடுப்பதை விட பலமடங்கு வேகமாக பணத்தை சம்பாதிக்க கற்றுக்கொண்டுள்ளனர் என்று ரூபர்ட் ஹூக்வெர்ப் பேசியிருக்கிறார்.
தகவல் உதவி: ஹூரன் ரிப்போர்ட் | தொகுப்பு: மலையரசு