கொரோனா நிவாரணமாக ரூ.2,500 கோடி: டாடா குழுமத்தின் பெரிய மனசு!
பல்வேறு உதவிகளை செய்துள்ள டாடா குழுமம்!
இந்தியாவில் கொரோனா 2ம் அலை பரவத் தொடங்கியதில் இருந்து மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். இந்த பேரிடர் காலத்தில் மக்களுக்கு பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறிய நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் என பலர் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இதில், ரிலையன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் ஆக்சிஜன் செறிவூட்டிகள் முதல் பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தநிலையில், இந்தியாவின் பிரபல நிறுவனமான டாடா குழுமம் கொரோனா நிவாரணமாகச் சுமார் 2,500 கோடி ரூபாய் வரை செலவழித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்த 2,500 கோடி ரூபாயை நிவாரண நிதியாகவும், உதவிகளாகவும் வழங்கியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் புதிய மருத்துவமனை அமைத்தல், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை மேம்படுத்தல் போன்ற பணிகளுக்கு செலவிட்டுள்ளது.
முதல் கொரோனா அலையில் 1500 கோடி ரூபாய் அளவிலான நிதி, அதேபோல் இரண்டாம் கொரோனா அலையில் டிசிஎஸ், டாடா ஸ்டீல் நிறுவனங்கள் வாயிலாக 1000 கோடி ரூபாய் அளவிலான நிதி என மொத்தம் சுமார் 2,500 கோடி ரூபாய் அளவிலான நிதி டாடா குழும நிறுவனங்கள் இந்தக் கொரோனா காலகட்டத்தில் செலவு செய்துள்ளன.
மேலும் இதுபோக, டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழக்க நேர்ந்தால், அவர்களின் குடும்பத்திற்கு இறக்கும் ஊழியர் ஓய்வு பெறும் வயதான 60 வயது வரைக்கும் ஊழியரின் சம்பளத்தை முழுமையாக ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படும் என ஏற்கனவே டாடா குழுமம் அறிவித்திருந்தது.
ஊழியர் வாங்கிய கடைசி சம்பளத்தின் அடிப்படையில், 60 வயது வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் குடும்பத்துக்கு மருத்துவக் காப்பீடு, குழந்தைகளுக்குப் பட்டப்படிப்பு வரையில் 100 சதவீத இலவசக் கல்வி உள்ளிட்ட சலுகைத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என் சந்திரசேகரன் டிசிஎஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் கலந்துகொண்ட போது வெளிப்படுத்தினார்.
தொகுப்பு: மலையரசு