Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

ஒரே நாளில் அம்பானியின் சொத்து $5.8 பில்லியன் சரிவு, பெசோஸ் இழந்தது $7 பில்லியன்...

இப்படி ஒட்டுமொத்தமாக உலகின் 500 பணக்காரர்கள் ஒரே நாளில் 239 பில்லியன் டாலரை இழந்துள்ளனர். சரி இதுக்கலாம் காரணம் என்னன்னு தெரியுமா?

ஒரே நாளில் அம்பானியின் சொத்து $5.8 பில்லியன் சரிவு, பெசோஸ் இழந்தது $7 பில்லியன்...

Tuesday March 10, 2020 , 2 min Read

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பகுதியை இழந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்திருப்பதே இதற்குக் காரணம்.

இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் 5.8 பில்லியன் டாலர் குறைந்து ஆசியாவின் முதல் பணக்காரர் என்கிற அந்தஸ்தை இழந்துள்ளார்.

அலிபாபா நிறுவனர் ஜாக் மா 44.8 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடத்தில் இருப்பதாகவும் அம்பானி இரண்டாம் இடம் வகிப்பதாகவும் புளூம்பெர்க் பில்லியனர்ஸ் இண்டெக்ஸ் குறிப்பிடுகிறது.

அம்பானி

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே அம்பானியின் எரிசக்தி மற்றும் தொலை தொடர்பு வர்த்தகமானது 26 சதவீதம் வீழ்ச்சியடைந்தபோதும் இவர் 41.8 பில்லியன் டாலருடன் தொடர்ந்து இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்து வருகிறார். உலகம் முழுவதும் உள்ள எரிசக்தித் துறை சார்ந்த பில்லியனர்கள் மிகவும் மோசமாக பாதிக்கபட்டுள்ளனர்.

மேலும் அமேசான் சிஇஓ ஜெப் பெசோஸ் 7 பில்லியன் டாலரும் பெர்க்‌ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் வாரன் பபெட் 5.3 பில்லியன் டாலரும் ஒரே நாளில் இழந்துள்ளனர். பெசோஸ் ஒரே மாதத்தில் 18 பில்லியன் டாலர் இழந்துள்ளார்.

இருப்பினும் இவர் 112 பில்லியன் டாலர் மதிப்புடன் தொடர்ந்து உலகின் மிகப்பெரும் பணக்காரராக இருந்து வருகிறார். இவரைத் தொடர்ந்து 106 பில்லியன் டாலர் மதிப்புடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இடம்பெற்றுள்ளார். 5.1 பில்லியன் டாலர் இழந்த பிறகான இவரது மதிப்பு 106 பில்லியன் டாலர்.


ஒட்டுமொத்தமாக உலகின் 500 பணக்காரர்கள் ஒரே நாளில் 239 பில்லியன் டாலரை இழந்துள்ளனர். 2016-ம் ஆண்டு முதல் பில்லியனர்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றனர். இவ்வளவு அதிகமான சொத்து ஒரே நாளில் இழக்கப்பட்டது இதுவே முதல் முறை.


2020-ம் ஆண்டில் மட்டும், “முன்னணி 500 பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பில் அரை ட்ரில்லியன் டாலருக்கும் அதிகமாக இழக்கப்பட்டுள்ளது,” என புளூம்பெர்க் குறிப்பிடுகிறது.


ஆடம்பரப் பொருட்களைத் தயாரிக்கும் எல்விஎம்ஹெச் நிறுவனத்தின் நிறுவனர் அர்னால்ட் ஒரே இரவில் 4.5 பில்லியன் டாலர் இழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஆரம்பித்தது முதல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களில் அர்னால்ட் ஒருவர். எல்விஎம்ஹெச் பங்குகள் இரண்டே மாதங்களில் 24 சதவீதம் சரிந்தது. இந்நிறுவனம் சீனாவையே பெரிதும் சார்ந்திருப்பது இதற்கு முக்கியக் காரணம்.

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொடர்பான கவலைகள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு சில பில்லியனர்கள் இதுகுறித்து அதிகம் கவலைக்கொள்ளவில்லை. கொரோனா குறித்து அளவிற்கு அதிகமாக அச்சம் கொள்ளப்படுவதாக டெஸ்லா சிஇஓ எலன் மஸ்க் தெரிவிக்கிறார்.

"கொரோனா வைரஸ் குறித்து பீதியடைவது அர்த்தமற்றது...” என்று தனது ட்விட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் டெஸ்லா பங்குகள் தொடர்ந்து சரிந்து மஸ்க் 6.75 பில்லியன் டாலர் இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


ஆங்கில கட்டுரையாளர்: சோஹினி மிட்டர் | தமிழில்: ஸ்ரீவித்யா