‘2024ல் அதிக ஆட்குறைப்புக்கு தயார் ஆகுங்கள்’ - ஊழியர்களுக்கு அதிர்ச்சி தந்த கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை!
முதலீடுகள் மற்றும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தும் விதத்தில் கடினமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை ஊழியர்களுக்கு தந்துள்ள செய்தியில் மறைமுகமாக வேலைபறிப்பு குறித்து தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த The Verge ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை ஆட்குறைப்பு குறித்து ஊழியர்களுக்கு ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளதாக தி வெர்ஜ் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் கூகுளின் பல்வேறு துறையில் இருந்தும் அதிக அளவிலான ஊழியர்களின் வேலை பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
“மிகப்பெரும் இலக்கை நாம் அடைய வேண்டி இருக்கிறது இதனால் இந்த ஆண்டில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் முதலீடுகளைச் செய்ய உள்ளோம். இந்த முதலீட்டிற்கு ஏற்ப திறனை உருவாக்க வேண்டி இருப்பதால், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம் என்பதே யதார்த்தம்,” என்று சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், அதிக அளவிலான ஆட்குறைப்பை வரும் காலங்களில் எதிர்பார்க்கலாம் என்றும் சொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஊழியர்களுக்கு அப்படியான கடிதம் எழுதப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க கூகுள் நிறுவனத்திற்கு யுவர் ஸ்டோரி கடிதம் எழுதியுள்ளது, இந்தக் கட்டுரை வெளியாகும் வரை அதற்குப் பதில் வரவில்லை.
சுந்தர் குறிப்பிடும், “கடினமான முடிவுகள்” என்பது கூகுளின் அனைத்துத் துறைகளுமான விற்பனை, தேடல், ஷாப்பிங், மேப்கள், யூடியூப் என எல்லாவற்றையும் உள்ளடக்கியது. மேலும், கடினமான முடிவுகள் என்று சொல்லும் ஆட்குறைப்பு இந்த எல்லாவற்றிலும் இதுவரை நடந்திருக்கிறது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் 12,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்தது கூகுள்- உலக அளவில் அதன் ஒட்டுமொத்த ஊழியர்களின் பங்களிப்பில் இது 6% ஆகும். இந்த ஆட்குறைப்பு என்பது எல்லா துறைகளிலும் இருக்காது, அதே போல கடந்த ஆண்டைப் போல அதிக அளவிலான ஆட்குறைப்பு இருக்காது என்றும் சுந்தர் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
நம்முடைய சக ஊழியர்கள் மற்றும் நம்முடைய குழுவில் இருந்து ஒரு நபரை வெளியேற்றுவது மிகக் கடினமானதாக இருக்கும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனினும், இந்த ஆண்டு ஆட்குறைப்பு என்பது செயல்முறையை எளிதாக்கவும், சில துறைகளை விரிவாக்கும் பொருட்டும் செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டில் 2022ல் 1 லட்சத்து 86 ஆயிரத்து 779 ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கையானது 2023 செப்டம்பர் 30ல் 1 லட்சத்து 82 ஆயிரத்து 381ஆகக் குறைக்கப்பட்டதாக அதன் மூன்றாவது காலாண்டு வருவாய்ப்பட்டியலில் குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆண்டு முழுவதற்கும் ஒதுக்கப்பட்டுள்ள இலக்குகளை நிறைவேற்றுவதற்காக குறிப்பிட்ட சில குழுக்கள் மாற்றமின்றி தொடர்கின்றன, எஞ்சியவற்றில் குறிப்பிடும்படியான மாற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் திறனுள்ள சிலரை பணியில் இருந்து அனுப்ப நேரிடலாம் என்று பிச்சை கூறியுள்ளார்.
வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப்பில் இருந்து 100 ஊழியர்களை கூகுள் ஆட்குறைப்பு செய்கிறது என்று தி நியூயார்க் டைம்ஸ் அறிக்கை கூறியுள்ளது. ஆல்பபெட் நிறுவனம் யூடியூப் செயல்பாடுகள் மற்றும் கிரியேட்டர் மேலாண்மை குழுக்களில் இருந்துகுறிப்பிட்ட சில பொறுப்புகளில் வகிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்வதாக தெரிவித்துள்ளது.