அமெரிக்க தேர்தல் களத்தில் இறங்கும் கமலா ஹாரிஸ் அதற்குத் தகுதி வாய்ந்தவரா?
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடன் தனது துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா நாடாளுமன்ற உறுப்பினரான கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளர் ஜோ பைடனால் தனது துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், அமெரிக்காவில் முக்கிய அரசியல் கட்சியின் சார்பில் துணை அதிபர் பதவிக்கு முன்னிறுத்தப்படும் முதல் கருப்பின பெண்மணி மற்றும் முதல் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த முதல் பெண்மணியாக விளங்குகிறார்.
அதிபர் வேட்பாளர் களத்தில் பைடனுக்கு போட்டியாக இருந்த கமலா ஹாரிஸ், 2016ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், அரசு வழக்கறிஞராக முத்திரை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலிபோர்னியாவின் ஓக்லாந்தில் பிறந்த 55 வயதான கமலா ஹாரிஸ், மாகாணத்தின் முன்னாள் அரசு வழக்கறிஞராகவும், சான்பிரான்சிஸ்கோவின் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞராகவும் இருந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு மார்டின் லூதர் கிங் பிறந்த தினத்தில், கமலா ஹாரிஸ், அதிபர் வேட்பாளர் களத்தில் குதிப்பதாக அறிவித்த போது, புதிய வரலாற்றை உருவாக்கக் கூடிய வேட்பாளராக தன்னை முன்னிறுத்திக்கொண்டார். ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளர் வாய்ப்பை பெற முயற்சித்த முதல் கருப்பின பெண்மணியான ஷிர்லி சிஸ்ஹோமிக்கு அஞ்சலி செலுத்தி இதை அவர் அறிவித்தார்.
வழக்கறிஞர் பின்னணி
சான்பிரான்சிஸ்கோ மாவட்ட அரசு வழக்கறிஞராக மற்றும் கலிபோர்னியா அரசு வழக்கறிஞராக இருந்துள்ள கமலா ஹாரிசின், சட்டத்துறை செயல்பாடு அவரது அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியப் பங்கு வகித்தது. தற்போது தேசத்தையே உலுக்கிய ஜார்ஜ் பிளாய்டு படுகொலை பின்னணியில், பொதுத் தேர்தலிலும் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முற்போக்கு அரசு வழக்கறிஞராக தன்னை வர்ணித்துக்கொள்ளும் கமலா ஹாரிஸ், குற்றங்களுக்கு எதிரான கடுமையாக இருக்கும் அதே நேரத்தில், குற்றவியல் நடைமுறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் எதிர்கொள்வது சாத்தியம் என கூறினார்.
அமைப்பை தன்னால் உள்ளுக்குள் இருந்தபடி மாற்ற முடியும் என்பதாலேயே அரசு வழக்கறிஞராக முன் வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது அதிபர் தேர்தல் வேட்பாளர் பிரச்சாரத்திலும் இந்த செய்தியே முக்கிய அம்சமாக இருந்தது.
ஆனால், அவரது செயல்பாடுகள் சில விமர்சனத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.
அவர் பொறுப்பு வகித்த காலத்தில், அப்பாவிகளை கொன்ற காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக அவர் வெகு அரிதாகவே செயல்பட்டிருக்கிறார். எனினும், பதவியில் இருந்து விலகும் காலத்தில் அவர் காவல்துறை தொடர்பாக விமர்சிக்கத்துவங்கியிருந்தார்.
மரண தண்டனைக்கு எதிரான கொள்கை கொண்டவர், 2004ல் சான்பிரான்சிஸ்கோவில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட போதும், மரண தண்டனையை வலியுறுத்த மறுத்துவிட்டார். நியாயமான குற்றவியல் அமைப்பிற்கான தனது ஆதரவை இது உணர்த்துவதாக அவர் கூறுகிறார். ஆனால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மரண தண்டனை சட்ட விரோதமானது என தீர்ப்பளிக்கப்பட்ட போது அதை எதிர்த்து முறையிட்டார். அரசு வழக்கறிஞராக இது தமது கடமை என்று வாதிட்டார்.
தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் வெளியிட்ட நியாயமான குற்றவியல் அமைப்பிற்கான செயல்திட்டம், பதவியில் இருந்த போது அவர் எதிர்த்த பல முற்போக்கு அம்சங்களை கொண்டிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர்
2016ல் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ், அதிபர் டிரம்பின் அதிகாரிகள் மற்றும் நியமனங்களை எதிர்த்து தீவிர விசாரணை செய்தவராக அறியப்படுகிறார்.
அண்மை காலத்தில், ஜனநாயக கட்சியின் இடதுசாரி பிரிவின் பக்கம் அதிகம் சாய்ந்தவர், பெர்னி சாண்டர்சின் அனைவருக்கும் மருத்துவ வசதி மசோதாவை ஆதரித்து, பின்னர் பிரச்சாரத்தின் போது மாற்றிக்கொண்டார். குறைந்த பட்ச கூலியை உயர்த்துவது மற்றும் நாட்டின் பிணை முறையை மாற்றுவது ஆகியவற்றுக்கும் ஆதரவு தெரிவித்தார்.
ஜார்ஜ் பிளாய்டு படுகொலைக்கு பிறகு, இனரீதியான சட்டம் கொண்டு வரப்பட ஆதரவு தெரிவித்திருக்கிறார். காவல்துறை சீரமைக்கும் கோரிக்கைக்கும் ஆதரவு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் பல்வேறு உயர்மட்ட குழுக்களிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
அதிபர் வேட்பாளர் தேர்தலில் அவர் முதலில் கவனத்தை ஈர்த்தாலும் பின்னர் பின் தங்கிவிட்டார். இதனையடுத்து அவர் நிதி பற்றாக்குறை காரணமாக விலகுவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். எனினும் பிரச்சாரத்தின் ஆரம்ப கட்டத்தில் அவர் முன்னிலையில் இருந்தார்.
கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிரச்சார விவாதத்தில் அவர் சிறப்பாக வாதிட்டார். வேட்பாளர் ஜோ பைடனுடன் அவர், இனப் பிரச்சனை குறித்து விவாதித்தார். இந்த விவாதத்திற்கு அழைக்கப்படாவிட்டாலும், மேடையில் உள்ள ஒரே கருப்பின பெண்மணி எனும் விதத்தில், கருத்துகளை பதிவு செய்வது தனது கடமை என்று தெரிவித்தார்.
அவரது இந்த வாதத்திறமையே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டது, விசாரணை குழுக்களில் அவர் தீவிரமாக பங்கேற்றிருக்கிறார், அதிபர் டிரம்பின் அதிரடிகளை கண்டு அஞ்சாமல் வாதிட்டிருக்கிறார்.
ஜோ பைடன்
பல அரசியல் நோக்கர்கள், பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இடையிலான உறவு சங்கடமானது என்கின்றனர். முதல் பிரச்சார விவாதத்தில், கமலா ஹாரிஸ், பைடன் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அவரது வாதத் திறமை, பைடன் ஆலோசர்கள் சிலருக்கும் பிரச்சனையான அம்சமாக இருந்திருக்கிறது.
ஆனால், தற்போது பைடனுடன் தேர்தலை சந்திக்கும் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இருவருக்கும் இடையிலான நட்பை விவரிக்கும் ஆவணத்தை பைடன் பிரச்சாரக்குழு வெளியிட்டுள்ளது. அரசு வழக்கறிஞராக இருந்த பைடனின் மகன் மூலமாக கமலா ஹாரிஸ் பற்றி அவர் நன்கு அறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சியின் மிதவாத பிரிவினரை அதிகம் கவர்ந்தார். கருப்பின பெண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பைடனுக்கு இருக்கும் ஆதரவை அவர் மேலும் வலுவாக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் உதவி: இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில்: சைபர்சிம்மன்