காஞ்சி பட்டுப் புடவைகளை ஆன்லைனில் உலகமெங்கும் எடுத்துச் செல்லும் நெசவாளர் குடும்பப் பெண்!
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த யமுனா சதீஷ் ஆன்லைனில் பட்டுப்புடவைகளை விற்பனை செய்து நெசவாளர்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறார்.
பட்டு என்பது பெண்கள் வாழ்க்கையுடன் உணர்வு ரீதியாக கலந்த ஒன்று. கலர் கலராக பட்டுப்புடவை உடுத்தி மகிழும் பெண்கள் அதன் பின்னால் உள்ள நெசவாளர்கள் பற்றி எப்போதாவது சிந்தித்திருப்பார்களா?
குளுகுளு ஏசி அறையில் அழகாக, வண்ணமயமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கண்கவர் புடவைகளை வாங்குவோரில் எத்தனை பேர் அவற்றைத் தயாரிப்பதற்காக வியர்வை சிந்தி உழைத்திருக்கும் நெசவாளர்களைப் பற்றி யோசித்திருப்போம்?
காஞ்சிபுரத்தில் நெசவுத் தொழிலாளர்களை ஊக்குவித்து அவர்களது தயாரிப்புகளை தொழில்நுட்ப உதவியுடன் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்து நெசவாளர்களையும் வாடிக்கையாளர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறார் யமுனா சதீஷ்.
யமுனா சதீஷ் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். இவர் Shri Bhavi Handloom Silks தொடங்கி அதன் மூலம் அசல் காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளை நேரடியாக நெசவாளர்களிடமிருந்து வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்கிறார்.
யமுனா பி.எஸ்சி கணிதம் படித்துள்ளார். 2014ம் ஆண்டு இந்த வணிகத்தைத் தொடங்கியுள்ளார். இவரது கணவர் சதீஷ் இவருக்கு உறுதுணையாக இருந்து வணிக செயல்பாடுகளில் உதவி வருகிறார்.
“2014-ம் ஆண்டு ஆன்லைன் வர்த்தகம் மக்கள்கிட்ட பிரபலமாக ஆரம்பிச்சுது. அந்த சமயத்துல ஆன்லைன்ல செயல்பட்டவங்களை விரல் விட்டு எண்ணிடலாம். அதுல நாங்களும் ஒருத்தர். அதனால மக்கள்கிட்ட நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது,” என்கிறார் யமுனா.
பாரம்பரிய நெசவாளர் குடும்பம் என்பதால் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும் நெசவுத் தொழில் அழிந்துவிடக்கூடாது என்கிற நோக்கத்தில் இந்த முயற்சியை இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
“எங்களுடையது நெசவாளர் குடும்பம். காஞ்சிபுரத்துல பெரும்பாலும் 80 சதவீத குடும்பங்கள் நெசவுத் தொழில்லதான் ஈடுபட்டிருப்பாங்க. பட்டுப்புடவைக்கு உலகப் புகழ் பெற்ற இடம் காஞ்சிபுரம். இன்னைக்கும் இங்க ஒவ்வொரு குடும்பத்துலயும் தறி அமைச்சு கைத்தறி நெசவுத் தொழில் செஞ்சுட்டிருக்காங்க,” என்கிறார்.
நம்பகத்தன்மை
காஞ்சிபுரம் புடவை தேவைப்படும் எல்லோராலும் நேரடியாக காஞ்சிபுரம் சென்று புடவை வாங்க முடிவதில்லை. அவர்களுக்கு ஆன்லைன் மூலம் கொண்டு சேர்ப்பதே இந்த வணிகத்தின் நோக்கம். ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி புடவைகளின் போட்டோக்களைப் பதிவிட்டார்கள். இதைப் பார்த்து பலர் வாங்க ஆரம்பித்துள்ளனர்.
“வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் எங்களைப் பத்தின விவரங்களைக் கேக்க ஆரம்பிச்சாங்க. உண்மையிலேயே காஞ்சிபுரத்தில் இருந்துதான் விற்பனை செய்யறீங்களான்னு கேப்பாங்க. தறியோட வீடியோக்களை எடுத்து அனுப்பி அவர்களுக்கு நம்பிக்கை வரவெச்சோம். தரமான புடவைங்களை, சரியான நேரத்துல, நியாயமான விலையில கொண்டு சேர்த்ததால எங்க மேல நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிச்சுது,” என்கிறார் யமுனா.
வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பலன்கள்
இன்று சந்தையில் கிடைக்கும் அசலான தயாரிப்புகள் அனைத்திற்கும் சமமான போலியான தயாரிப்பு எளிதாகக் கிடைக்கிறது. இந்த போலி பட்டுப்புடவைகள் பார்ப்பதற்கு அசல் பட்டுப்புடவை போன்றே காட்சியளிக்கும். காஞ்சிபுரம் பட்டுப் புடவை என்கிற பெயரில் இவற்றை விற்பனை செய்கிறார்கள்.
நாங்கள் நெசவாளர்களிடம் நேரடியாக வாங்கிக் கொடுப்பதால் வாடிக்கையாளர்களுக்கு அசல் காஞ்சிபுரம் பட்டு கிடைக்கிறது. அடுத்தது நியாயமான விலையில் பட்டுப்புடவை கிடைக்கிறது. அதேபோல் வெவ்வேறு பகுதியில் வசிப்பவர்களால் நேரடியாக காஞ்சிபுரம் வந்து வாங்க முடியாத சூழலில் அவர்களது இடத்திற்கே புடவைகளைக் கொண்டு சேர்க்கிறார்கள்.
புடவை தயாரிப்பு முறை
”பெங்களூருவை அடுத்த மைசூருவில் இருந்து ஒரிஜினல் மல்பெரி சில்க் த்ரெட் வாங்கறோம். பட்டுப் புழுவில் இருந்து சில்க் த்ரெட் எடுக்கறாங்க, இந்தத் தொழிலை விவசாயம் போலவே செய்யறாங்க. குஜராத் சூரத்தில் இருந்து ஜரிகை வாங்கறோம். பட்டுப்புடவைக்கு இந்த ரெண்டும் முக்கியமான மூலப்பொருள்,” என்கிறார் யமுனா.
அவர் மேலும் கூறும்போது,
”நாங்க சில்க் த்ரெட் வாங்கும்போது 18 மீட்டர் நீளத்துக்குதான் கிடைக்கும். அதனால 3 புடவையாதான் பண்ணுவோம்,” என்கிறார்.
இவற்றை வாங்கி சாயமேற்றி புடவைக்கு டிசைன் கொடுக்கிறார்கள். டிசைனில் மயில் சக்கரம், ருத்ராட்சம், யானை, யாழி இப்படி பல உருவங்கள் அச்சிடப்படுகின்றன. இவை மோடிஃப் (motif) என்று அழைக்கப்படுகிறது.
“காஞ்சிபுரம் கோயில் நகரம். கோயில் சிற்பங்கள்ல நிறைய உருவங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். இதை போட்டோ எடுத்து ஆட்டோகேட் மூலம் புடவையில் அச்சிடுகிறோம்,” என்கிறார்.
புடவை ரீசெல்லிங்
“வாடிக்கையாளர்கள் அதிகளவில் வாங்கி திருப்தியடைஞ்சாங்க. அதுக்கப்புறம் எங்ககிட்ட வாங்கி மறுவிற்பனை செய்ய ஆரம்பிச்சாங்க. காஞ்சிபுரத்துல இருக்கற நீங்க நேரடியா நெசவாளர் கிட்ட வாங்கி அசல் பட்டுப்புடவைகள் வெச்சிருக்கீங்க. நாங்க பெங்களூருல இருக்கோம். இங்க வாய்ப்பு அதிகம் இருக்கு. அதனால நாங்க உங்ககிட்ட வாங்கி மறுவிற்பனை செய்யறோம்ன்னு சொன்னாங்க. இப்படித்தான் பெண் தொழில்முனைவோர் உருவாகவும் அவங்க சம்பாதிக்கவும் உதவ ஆரம்பிச்சோம்,” என்கிறார் யமுனா.
கொரோனா காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால் ஆசிரியர்கள் வருவாயின்றி தவித்தார்கள். அவர்களுக்கு இந்த ரீசெல்லிங் முறை நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
ரீசெல்லிங் செய்ய விரும்புபவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் புடவைகளின் போட்டோக்களைப் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. தற்போது கிட்டத்தட்ட 50 ரீசெல்லர்கள் இவருடன் இணைந்துள்ளார்கள். மேலும் பலர் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
இதர புடவை வகைகள்
காஞ்சிபுரம் பட்டுப்புடவையின் ஆரம்ப விலையே சுமார் 8,000 ரூபாயாக இருப்பதால் குறைந்த விலையில் புடவைகளுக்கான தேவையும் எழுந்துள்ளது.
காரைக்குடியில் காட்டன் புடவை, திருமுகையில் இருந்து சில்க் காட்டான் புடவை, சேலத்தில் இருந்து பின்னி சில்க்ஸ், ஆந்திராவில் இருந்து உப்படா சேலைகள் என நேரடியாக அந்தந்தப் பகுதியின் மொத்த உற்பத்தியாளர்களிடம் வாங்கி விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர் யமுனா மற்றும் அவரின் கணவர்.
“வாரனாசி மாதிரியான இடங்கள்ல இருக்கற புடவை உற்பத்தியாளர்களை கண்டுபிடிச்சோம். அவங்ககூட டீல் பேசினோம். வட இந்தியாவில் இருந்து மொத்த விலைக்கு செமி சில்க், சில்க் காட்டன் போன்ற புடவை வகைகளை 500 ரூபாய் ஆரம்ப விலையில் வாங்கினோம். அதையும் ரீசெல்லர்களுக்குக் கொடுக்க ஆரம்பிச்சோம். குறைந்த விலையில் புடவைகள் கொடுக்க ஆரம்பிச்சதும் வாங்கறவங்க எண்ணிக்கை ரொம்பவே அதிகமாச்சு,” என்கிறார்.
இப்படி 500 ரூபாயில் தொடங்கி 20,000 ரூபாய் வரை புடவைகள் விற்பனை செய்கின்றனர். ஒரே ஒரு புடவை ஆர்டர் செய்தாலும் டெலிவரி கொடுக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்
அமெரிக்கா, கனடா, லண்டன் என வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு இவர்களிடம் புடவைகள் வாங்குகிறார்கள்.
“இவர்கள் வீட்டில் பெண் குழந்தைகள் பூப்பெய்தால் உடனே வீட்டில் திடீரென்று ஃபங்ஷன் ஏற்பாடு செய்வாங்க. திருமணம், சீமந்தம் போன்ற விசேஷங்களை பிளான் பண்ணலாம். ஆனா இந்த மாதிரி விசேஷம் அப்படியில்லை. அவ்ளோ கம்மியான நாட்கள்ல ஒரிஜினல் பட்டுப்புடவையை வாங்கறது பத்தி யோசிச்சுக்கூட பார்க்கமுடியாது. ஆனா நாங்க உடனடியா அவங்களுக்குப் பிடிச்ச புடவையை குறிப்பிட்ட நேரத்துல டெலிவர் பண்ணிடுவோம். அவங்க திருப்தியடையறதால மத்தவங்களுக்கு பரிந்துரைக்கறாங்க,” என்று உற்சாகமாகக் குறிப்பிடுகிறார் யமுனா.
பிசினஸ் என்பதைத் தாண்டி வாடிக்கையாளர்களுடன் நட்புடன் பழகுகிறார்கள்.
“லண்டன் வாடிக்கையாளர் ஒருத்தர் அவரோட மகள் பூப்பெய்தின ஃபங்ஷனுக்காக என்னிடம் புடவை வாங்கினாங்க. அவங்களுக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சு. அவங்க ஒவ்வொரு வருஷமும் சபரிமலை போறதுக்காக இந்தியா வருவாங்க. இங்க வரும்போதெல்லாம் ஒரு வேளை உணவாவது எங்ககூட சேர்ந்து சாப்பிடுவாங்க,” என்று உணர்ச்சிகரமாக பகிர்ந்துகொண்டார் யமுனா.
இப்படிப் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடந்ததுண்டு என்கிறார்.
நெசவுத் தொழிலை மீட்டெடுக்கும் முயற்சி
காஞ்சிபுரத்திற்கு அருகிலேயே ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால் நிலையான வருவாய் தேடி பலர் நெசவுத் தொழிலைக் கைவிட்டு இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.
“மாச வருமானம் கிடைக்கறதால நெசவுத் தொழிலை விட்டுட்டு இவங்க வேலைக்கு போக அரம்பிச்சாங்க. எங்களுக்கு அனுபவம் இருக்கறதால நெசவாளர்கள் கிட்ட பேச ஆரம்பிச்சோம். நாங்களே தறி அமைச்சு தர்றோம். நெசவுத் தொழிலை கைவிடாதீங்கன்னு சொன்னோம். 10 நெசவாளர்களுக்கு தறி அமைச்சு கொடுத்திருக்கோம். நாங்களே டிசைன் கொடுத்துடுவோம். மூலப்பொருட்களை கொடுத்துடுவோம். ரெகுலரா ஆர்டரும் தர்றோம். அவங்க நெசவு வேலையை முடிச்சதும் நாங்களே விற்பனை செஞ்சிடறோம்,” என்கிறார்.
நெசவுத் தொழிலைப் பொருத்தவரை பரம்பரை பரம்பரையாக இதில் ஈடுபட்டிருப்பார்கள். இவர்கள் இந்தத் தொழிலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்காமல் போனால் கைத்தறி நெசவுத் தொழிலே அழிந்துவிடும் அபாயம் உள்ளது. ஏனெனில் இதற்கென தனிப்பட்ட பயிற்சி மையங்கள் ஏதும் இல்லை.
“எங்கப்பாவுக்கு நெசவு வேலையில நிபுணத்துவம் இருந்தாலும்கூட கடைசி வரை முதலாளி ஆகமுடியலை. அவர் மகனான நான் நெசவாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையில இருக்கற இடைவெளியை தொழில்நுட்பத்தோட உதவியோட நிரப்ப விரும்பினேன்,” என்கிறார் சதீஷ்.
யமுனா விற்பனை, மார்க்கெட்டிங் போன்றவற்றை கவனித்துக்கொள்கிறார். சதீஷ் உற்பத்தியில் கவனம் செலுத்துகிறார். நிறுவனத்தின் பெயரை முறையாகப் பதிவு செய்து ஜிஎஸ்டி வரி செலுத்தி வணிகம் நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் ஒரு மாதத்தில் சுமார் 200-300 பட்டுப்புடவைகள் விற்பனை செய்கின்றனர். சராசரி மாத வருவாய் 5 லட்ச ரூபாய் வரை ஈட்டுகிறார்கள்.
கொரோனா சமயத்தில் பல பெண்கள் புடவை விற்பனையில் வாய்ப்பும் வருவாயும் இருப்பதை உணர்ந்து இணைந்துகொண்டனர். இதுபோன்ற மறுவிற்பனையாளர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்தது. இதனால் விற்பனையும் வருவாயும் அதிகரித்தது. கொரோனா பரவலுக்குப் பிறகு வருவாய் 7-8 லட்ச ரூபாயாக அதிகரித்தது.
சவால்கள்
வாடிக்கையாளர்கள் எங்கோ இருந்துகொண்டு புடவைக்கான பணத்தை செலுத்த யோசிப்பார்கள். ஆன்லைன் ஸ்கேம் போன்ற பிரச்சனைகள் உள்ளன. போலி தயாரிப்புகள் அதிகளவில் சந்தையில் கிடைப்பதால் இதை சமாளிப்பது சவாலாக இருப்பதாக தெரிவிக்கிறார்.
“வாடிக்கையாளர் நம்பிக்கையில்லாம கேள்வி கேக்கும்போது தவறாக எடுத்துக்காம பொறுமையா பதில் சொல்வோம். ஜிஎஸ்டி பதிவு செஞ்சிருக்கோம். வாடிக்கையாளர்கள் கிட்ட இதைக் காட்டறோம். அதோட நெசவு வேலைகளை வீடியோவா எடுத்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பறோம். நேரடியா வர்ற வாடிக்கையாளர்களை கூட்டிட்டு போய் நெசவாளர்களை அறிமுகப்படுத்தறோம். இப்படி நம்பகத்தன்மையை ஏற்படுத்தறோம்,” என்கிறார் யமுனா.
அவுட்சோர்ஸிங்
ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்கிறார்கள்.
“டிசைனுக்கு ஆட்டோகேட் யூஸ் பண்றோம். கலர் போடறது, ஆட்டோகேட் மாதிரியான வேலைங்களை அவுட்சோர்ஸ் பண்றோம். கலர் போடறவங்க நாம கேக்கற கலர் போட்டு காயவைச்சு கொடுத்துவிடுவாங்க. எங்களுக்கு ஆட்டோகேட் டிசைன் போட்டுக்கொடுக்கறவர் மாற்றுத்திறனாளி. இப்படி எங்களுக்கு ஒரு குழுவை உருவாக்கி செயல்படறோம்,” என்கிறார் யமுனா.
ஆன்லைன் தவிர 2021ம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் நேரடியாக இவர்களிடம் வந்து புடவைகள் வாங்கிக்கொள்கிறார்கள். இதுபோல் வாடிக்கையாளர் நேரில் வரும்போது அந்த சமயத்தில் நெசவாளர்களிடம் தயாராக இருக்கும் புடவைகளில் ஏதேனும் பிடித்திருந்தால் வாங்கிக்கொள்ளலாம்.
“புதுப்புது டிசைன்களை அறிமுகப்படுத்த விரும்பறேன். புடவையில் மணமகன், மணமகள் பேரும் போட்டோ போடறதை பத்தின திட்டமும் இருக்கு,” என்கிறார்.