ஆசிரமத்தில் ரிசப்ஷன், ரிட்டர்ன் கிஃப்டாக இந்திய அரசியல் அமைப்புச் சட்ட புத்தகம்!
டாப் செலிபிரிட்டிகளின் பிரம்மாண்ட திருமணங்களுக்கு மத்தியில் கன்னட நடிகர் சேதன் குமார் தன் கல்யாணத்தை சிம்பிளாக, முற்போக்கு முறைப்படி நடத்தியுள்ளார்.
டாப் செலிபிரிட்டிகளின் பிரம்மாண்ட திருமணங்களுக்கு மத்தியில் கன்னட நடிகர் சேதன் குமார் ஆசிரமத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தி, விருந்தினர்களுக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை ரிட்டர்ன் கிஃப்ட்டாக வழங்கி முற்போக்கு திருமணம் செய்துள்ளார்.
பெங்களூருவில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி திருமணத்தை பதிவு செய்தனர் காதல் ஜோடியான சேதன் குமார்- மேகா. சாதிகளாலும், மதங்களாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும், மனங்களால் ஒன்றுபடுவர்களின் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ், தம்பதியினர் தங்கள் திருமணத்தை பதிவுசெய்தது மட்டுமல்லாமல், பிப்ரவரி 2ம் தேதி ஆசிரமத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை நிகழ்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
நடிகர் புனீத் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி அஸ்வினி, அரசியல்வாதிகள் லட்சுமி ஹெபல்கர், தினேஷ் குண்டு ராவ் மற்றும் எச்.அஞ்சநேயா போன்ற திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ஆர்வலர்கள் என 3000 பேர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்துள்ளனர்.
செல்வ செழிப்பையும், சக்தியையும் வெளிக்காட்டும் விதமாக அரங்கேறும் வழக்கமான இந்திய திருமணம் போலில்லை, சேதன் - மேகாவின் திருமணம். கர்நாடகாவின் அடிமட்ட மக்களின் வாழ்வினையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வு இது என்கிறார் மணமகன் சேதன். களைக்கட்டிய நிகழ்ச்சியில் கர்நாடகாவின் லம்பானி மற்றும் சித்தி சமூகத்தினர் நடன நிகழ்ச்சிகள், தத்துவ மற்றும் சூஃபி பாடல்கள் மற்றும் அரசியலமைப்பு பற்றிய பாடல்களும் இடம்பெற்றன.
தம்பதியினரது வாழ்வின் மிகபெரிய நாள் பற்றி மணமகன் சேதனிடம் தி நியூஸ் மினிட் கேட்டதில்,
“நடிகர்கள், அரசியல்வாதிகள், ஆர்வலர்கள் என பல தரப்பு மக்கள் கலந்துகொண்டனர். இவ்வளவு பேர் வருவார்கள் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை. நிறைய அன்பும் பாசமும் நிரம்பி இருந்தது,” என்று கூறியுள்ளார்.
கடந்த ஒரு ஆண்டாக கர்நாடகாவில் உள்ள வினோபா பாவே ஆசிரமத்திற்கு, பல்வேறு நலஉதவிகளை செய்துவரும் தம்பதியினர் அவர்களது பிக் டேவினையும் குழந்தைகளுடன் கொண்டாட விரும்பி அவ்விடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். ஆசிரமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் புதிய படுக்கைகளை வாங்கியதுடன், ஆசிரமத்தின் சுவர்களில் ஒதுக்கப் பட்ட சமூகங்கள், தொழிலாள வர்க்கம், விவசாயிகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்களை வரைந்தனர்.
“குழந்தைகள் ஒவ்வொரு நாளும் அந்த ஓவியங்களை பார்த்து கண்விழிக்கும் போது, அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் - அவர்களின் சமூகத்தை எண்ணி அவர்கள் பெருமைப்படவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மேலும் அவர்கள் கன்னடம் பேசுகிறார்கள். ஆங்கிலம் தெரியாததால் தாழ்ந்தவர்களாக உணரக்கூடாது,” என்று சேத்தன் கூறுகிறார்.
அவரும் மேகாவும் இனிவரும் காலங்களில் ஆசிரமத்துடனும் குழந்தைகளுடனும் நீண்டகால உறவைப் பேணவும், அவர்களுக்கு ஆதரவளிக்கவும், தங்களால் இயன்ற எந்த வகையிலான உதவிகளையும் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர்.
திருநங்கைகளின் உரிமைக்காக போராடுபவரும், கர்நாடக ராஜ்யோத்சவ விருது பெற்றவருமான அகாய் பத்மஷாலி தலைமையில் தம்பதிகள் மதிப்புகளின் மீது சபதங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்கினர்.
அம்பேத்கரின் 22 சபதங்கள், பெரியாரின் சுய மரியாதைத் திருமணம் மற்றும் கர்நாடகாவில் உள்ள குவெம்பு சமூகத்தின் திருமணம் போன்ற திருமணங்களின் முற்போக்கான நடைமுறைகளால் ஈர்க்கப்பட்ட தம்பதியினர் தனிப்பட்ட சபதம், ஒரு சமூக சபதம் மற்றும் ஒரு இயற்கை சபதம் என மூன்று சபதங்களை ஏற்று திருமணம் செய்து கொண்டனர்.
‘அன்பு, மரியாதை, விசுவாசம், நேர்மை மற்றும் சமத்துவம் ஆகிய நன்நெறிகளுடன் வாழ்வோம். இருவர்களது பெற்றோர்களுக்கும் எங்களால் அளிக்க முயலும் அதிகப்பட்ச கவனிப்பையும், மரியாதையும் வழங்குவோம். அன்பான தோழர்களாக எங்களது வாழ்வின் கடுமையான மற்றும் இன்பான நாட்களில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து வாழ்வோம்’ என்று தனிப்பட்ட உறுதிமொழியளித்த அவர்கள், எல்லா வடிவங்களிலும் உள்ள பாகுபாட்டை அகற்றி, சமமான, நியாயமான சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாங்கள் பணியாற்றுவோம் என்றும், தாவரங்கள், பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்கும் நாங்கள் இரக்கம் காட்டுவோம் என்றும் சபதம் ஏற்றனர்.
விழாவில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு ரிட்டர்ன் கிஃப்ட்டாக அவர்கள் அளித்தது இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகமாகும். மக்கள் அரசியலமைப்பைப் படிக்க வேண்டும், அதன் மதிப்புகளை நிலைநிறுத்தி அதனை கடைபிடிக்கவேண்டும்,” என்றார் சேதன்.
அரசியலமைப்பு விழுமியங்கள் மீதான அவர்களின் நம்பிக்கையே சேதன் மற்றும் மேகா ஆகியோரை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் அவர்களது திருமணத்தை பதிவு செய்ய வைத்தது.
“நாங்கள் இருவருமே சமத்துவமின்மை அல்லது சடங்குகளை நம்பவில்லை. அரசியலமைப்பின் படி நாங்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினோம்,” என்று தி நியூஸ் மினிட்டிடம் தெரிவித்துள்ளார் சேதன்.
தகவல் மற்றும் படங்கள் உதவி : https://www.thenewsminute.com/