’ராம், ரஹீம், ராபர்ட் அனைவரும் இந்தியர்களே’ - நோ CAA, நோ NRC திருமண கிஃப்ட்!
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பை காட்டும் களமாக மாறிய கடலூர் திருமணமேடை.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைப்பெற்ற வண்ணம் உள்ளது. பல அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வல அமைப்புகளும், பொதுமக்களும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தின் அங்கமாய், தமிழகத்தில் குடியுரிமை சட்டத்திருத்ததை எதிர்த்து கோலப் போராட்டம், மெகந்தி பேராட்டம் நடைப்பெற்றது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் வீட்டு வாசலில் ‘வேண்டாம் சிஏஏ, வேண்டாம் என்ஆர்சி’ என்று எழுதி கோலத்தின் வழியும், கையில் மெகந்தியில் ‘நோ சிஏஏ, நோ என்ஆர்சி’ என்று வரைந்து தத்தமர்களுக்கு ஏற்ற வடிவத்தில் எதிர்ப்பை தெரிவித்தனர். அந்த வகையில்,
கடலூர் மாவட்டத்தில் நடந்த திருமண நிகழ்வில் மணமக்களுக்கு ‘நோ சிஏஏ, நோ என்ஆர்சி’ என்ற வாசகங்களுடன் கூடிய அன்பளிப்பு அளித்து, அவர்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பம் பகுதியிலுள்ள திருமணம் மண்டபம் ஒன்றில், ஷஃபத்- ஷாஹின் மணமக்களுக்கு கடந்த ஞாயிற்றுகிழமை (5.1.2020) திருமணம் நடைபெற்றது. வழக்கமான தொடர் திருமண நிகழ்வுகள், பரிசு வழங்கல்கள் என்றிருந்த திருமண கொண்டாட்டத்தினை, மணமக்களது நண்பர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் களமாக்கிக் கொண்டனர்.
மேடையில் வீற்றிருந்த மணமக்களுக்கு வாழ்த்து சொல்ல மேடையேறிய நண்பர்கள் அளித்த கிஃப்டின் வெளிப்புறம்,
“ராம், ரஹீம், ராபர்ட் - அனைவரும் இந்தியர்களே... நாங்கள் ஒன்றாக இணைந்து சிஏஏ மற்றும் என்ஆர்சி வேண்டாம் என்று சொல்கிறோம்,” என்று எழுதப்பட்டிருந்தது. வாசகமானது ஏ4 பேப்பரில் பிரின்ட் செய்யப்பட்டு கிஃப்டின் மேற்புறம் ஒட்டப்பட்டிருந்தது.
“எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நண்பர்களாக இருக்கலாம். எங்களை யாராலும் பிரிக்க இயலாது. நம் நாட்டில் அண்மையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளைச் சுற்றியுள்ள தீவிரமான அரசியலை நாம் உடைத்து, நமது ஒற்றுமையே நமது பலம் என்ற உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டிய நேரம் இது,”
என்று திருமணத்தில் கலந்துகொண்ட நண்பர்களுள் ஒருவர் நியூஸ் 18-யிடம் தெரிவித்துள்ளார்.
தம்பதியினர் அப்பரிசினை பெறும் புகைப்படம் சோஷியல்மீடியாக்களில் அதிகளவில் பகிரப்பட்டு வைரலாகியது. பல நெட்டிசன்களும் ‘எதிர்காலத்திற்கான நம்பிக்கை’ என்ற கேப்ஷனுடன் புகைப்படத்தினை பகிர்ந்து வருகின்றனர்.