'விந்து வங்கி’ மூலம் மாதம் ரூ.24 லட்சம் வருமானம் ஈட்டும் ரூ.1 கோடி மதிப்பு காளை!
ரூ.1 கோடி மதிப்புள்ள அரிய வகை காளை!
இந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெறும் கிரிஷி மேளாவில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கிருஷ்ணா என்ற மூன்றரை வயது காளை கவனம் ஈர்த்துள்ளது.
கிரிஷி மேளா பெங்களூருவில் ஆண்டு தோறும் நடக்கும் நிகழ்வு. இந்த நிகழ்வில் விவசாயிகள் ஏரளமான அளவு கலந்துகொள்வார். 12,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆண்டு கிருஷி மேளாவிற்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த ஆண்டு நடந்த கிரிஷி மேளாவில் 550 ஸ்டால்கள் போடப்பட்டன. இதில் பாரம்பரிய மற்றும் கலப்பின பயிர் வகைகள், தொழில்நுட்ப அரங்குகள் மற்றும் இயந்திரப் பொருட்கள். கால்நடைகள், கடல் மற்றும் கோழி என விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு கிருஷி மேளா ஸ்டால்களின் நோக்கம் விதைகள், மரக்கன்றுகள் மற்றும் கோழி விற்பனை ஆகும்.
மொத்தம் நான்கு நாள் கிருஷி மேளாவின் சிறப்பு என்னவெனில், முதலில் இந்த நிகழ்வு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மையால் திறப்பு விழா காணவிருந்தது. ஆனால், நவீன விவசாயியாக மாறிய பழங்குடிப் பெண் ஒருவரால் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மேளாவில் கவனம் ஈர்த்தது சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள கிருஷ்ணா என்ற மூன்றரை வயது காளை மாடு.
ஹல்லிகர் இன காளையான இந்த கிருஷ்ணா காட்சிப்படுத்தப்பட்டது. அரிய வகை காளையான இது தென்னிந்தியாவில் தாய் இனமாக அறியப்படுகிறது. இதனால்,
அதன் விந்துவுக்கு அதிகத் தேவை ஏற்பட்டு வரும் நிலையில் மேளாவில் இதன் விந்து வங்கி வைக்கப்பட்டது. ரூ.1,000 என்ற விலையில் அது விற்கப்பட்டது.
காளை உரிமையாளர் போரேகவுடா பேசுகையில்,
“கிருஷ்ணா என்பது 3.5 வயதுடைய ஹல்லிகர் இனம். தற்போது ஹல்லிகர் இனம் அழிந்து வருகிறது. அனைத்து நாட்டு இனங்களுக்கும் ஹல்லிகர் தாய் இனம். ஹல்லிகர் இனத்தின் விந்து வங்கி அமைத்துள்ளோம். ரூ.1,000க்கு அதை விற்கிறோம். எனக்குத் தெரிந்தபடி, மாண்டியா மாவட்டத்தில் உள்ள மல்வள்ளியில் ஹல்லிகர் இனத்தின் விந்து வங்கியை யாரும் செய்யவில்லை. நாங்கள் தனிப்பட்ட முறையில் அதைச் செய்தோம். கிருஷ்ணாவிடம் இருந்து மாதம் 8 முறை விந்து எடுக்கிறோம். ஒரே நேரத்தில் 300 குச்சிகள் செய்கிறோம். இதை வைத்து மாதம் ரூ.24 லட்சம் வருமானம் ஈட்டுகிறோம்," என்றுள்ளார்.
மேலும் தொடர்ந்தவர், “தாவணகெரே, ராமநகரா, சிக்மகளூர் போன்ற பிற மாவட்டங்களில் விந்து வங்கி உருவாக்கி, பெங்களூருவில் உள்ள தாசரஹள்ளியிலும் திறக்கிறோம். ஹல்லிகர் இன விந்துவை வாங்க விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள இடங்களில் அதை வாங்கலாம்," என்று பேசியிருக்கிறார்.
தகவல் உதவி: ஏஎன்ஐ | தமிழில்: மலையரசு