பத்மஸ்ரீ வென்ற ‘வெறுங்கால் விஞ்ஞானி’ - விவசாயக் கண்டுபிடிப்புகளுக்கு வாழ்க்கையை அற்பணித்த ‘அப்துல் காதர் நடக்கட்டின்’
தனது 16 வயதிலேயே விவசாயத்திற்கான கருவிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கிய அப்துல் காதர், 2 கோடி அளவிற்கு கடனில் தள்ளப்பட்டு, தனது 60 ஏக்கர் நிலம் மற்றும் முன்னோர்களின் பாரம்பரிய வீடு இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
விவசாயத்தில் புதிதாக எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் எனப் போராடி 2 கோடி ரூபாய் வரை கடன், வீடு, நிலம் ஆகியவற்றை இழந்து நின்ற விவசாயி ஒருவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோலர் கோஸ்டர் ரெய்டு போல், பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து இன்று இந்தியாவின் அடையாளமாக மாறிய அந்த விவசாயி பற்றி அறிந்து கொள்ளலாம்...
விவசாயத்தை வெற்றிகரமாகவும், லாபகரமானதாவும் மாற்ற புதுமையான கண்டுபிடிப்புகள் அவசியமாகி வருகிறது. ஆனால் உரம், பூச்சி, மருந்து, விதைகள் போல், விவசாயத்திற்கு தேவையான நவீன கருவிகள் கடைகளில் கிடைப்பது இல்லை. பெருந்தொற்று பரவல், ஊதிய பற்றாக்குறை போன்ற காரணங்களுக்காக வேளாண் தொழிலுக்கான ஆட்கள் கிடைக்காமல் போகும் சமயங்களை சமாளிப்பதற்காக சில விவசாயிகள் தாங்களே விஞ்ஞானியாக மாறி அற்புதமான கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்றனர்.
அப்படி விதவிதமான கண்டுபிடிப்புகள் மூலமாக கர்நாடாகவை கலக்கி வருபர் தான் தார்வார் விவசாயி அப்துல் காதர் நடக்கட்டின்.
யார் இந்த அப்துல் காதர் நடக்கட்டின்:
கர்நாடகா மாநிலம் தார்வார் மாவட்டத்தில் உள்ள அன்னிகேரி பகுதியைச் சேர்ந்த பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் அப்துல் காதர் நடக்கட்டின். படிப்பின் மீது ஆர்வம் இல்லாததால் 10வது வரை மட்டுமே படித்தார். வழக்கமாக 9 மணிக்கு போய்விட்டு, 5 மணிக்கு வீடு திரும்பும் ஆபீஸ் வேலைகளில் அப்துல் காதருக்கு நாட்டம் கிடையாது. சிறு வயதில் இருந்தே விவசாயத்தின் மீது ஆர்வத்துடன் செயல்படத் தொடங்கினார்.
தனது 16 வயதிலேயே விவசாயத்திற்கான கருவிகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கினார். இதனால் 2 கோடி அளவிற்கு கடனில் தள்ளப்பட்ட அப்துல் காதர், தனது 60 ஏக்கர் நிலம் மற்றும் முன்னோர்களின் பாரம்பரிய வீடு இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
கடும் பிரச்சனைகளை எதிர்கொண்ட பிறகும், தனது கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தி வந்த அப்துல் காதர், தொடர்ந்து புளி விதைகளை பிரிக்கும் சாதனம், உழவு கத்தி தயாரிக்கும் இயந்திரம், விதை மற்றும் உரத் துளைப்பான், நீர் சூடாக்கும் கொதிகலன், தானியங்கி கரும்பு விதைப்புக் கருவி மற்றும் சக்கர உழவு இயந்திரம் என அடுத்தடுத்து விவசாயத்திற்கு ஏற்ற கருவிகளை உருவாக்க ஆரம்பித்தார்.
அவரது அனைத்து கண்டுபிடிப்புகளும் நிலைத்தன்மை மிக்கவை, செலவு குறைவானவை, சுற்றுச்சூழலுக்கு உகந்தவை மற்றும் மிக முக்கியமாக, சமூகத்தால் எளிதாக ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளன.
விவசாய பருவநிலைகள் மற்றும் மண்ணின் பண்புகள் பற்றிய அவரது ஆழ்ந்த அறிவு, நாட்டின் மற்ற விவசாயிகள் அவரை ஒரு முன்னுதாரண உந்து சக்தியாக ஏற்றுகொள்ளச் செய்துள்ளது.
சோதனை டூ சாதனை:
அப்துல் காதர் நடக்கட்டின் முதல் கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? அவரை தூக்கத்தில் இருந்து எழும்புவதற்காக உருவாக்கிய ’வாட்டர் அலராம்’ (A Wa(h!)ter Alarm) தான் அது.
விடியற்காலையில் எழுந்து வயல் வேலைக்கு செல்லாமல், நன்றாக உறங்கிவிடும் தன்னை எழுப்ப, தானே ஒரு சூப்பர் ஐடியாவை கண்டுபிடித்தார். அதற்காக ஒரு அலாரத்தின் சாவியில் ஒரு மெல்லிய கயிற்றைக் கட்டினார். அந்த அலாரம் அடித்து முடிக்கும் போது சாவி கழன்று, அதன் மறுமுனையில் உள்ள பாட்டிலில் இருந்து தண்ணீர் அவரது முகத்தில் ஊற்றும் படி வடிவமைத்தார்.
இந்த முதல் கண்டுபிடிக்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, தனக்கும் தனது கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் பயனுள்ள வகையில் புதுமையான பல விவசாய கருவிகளை உருவாக்கி வருகிறார். புளி தொடர்பான அவரது புதுமையான கண்டுபிடிப்புகளால் அன்னிகேரி பகுதி மக்கள் அவரை ‘ஹுனாசே ஹுச்சா’ அதாவது புளி வெறி பிடித்தவர் என்று அழைக்கின்றனர்.
வெறி என்றதும் ஏதாவது வித்தியாசமாக எண்ண வேண்டாம். அப்துல் காதர், புளி பற்றாக்குறையை சமாளிப்பதற்காக அவருக்கு சொந்தமான மரங்களுக்கு பிஎச் அளவு அதிகமுள்ள ஆல்கலைன் தண்ணீரை பாய்ச்சி, சுவையான புளியை உற்பத்தி செய்தார்.
மரத்தில் இருந்து புளியை அறுவடை செய்யும் கருவி, புளி விதைகளை பிரிக்கும் இயந்திரம் என அடுத்தடுத்து புளி சம்பந்தமான கருவிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை உருவாக்கியதால் தான் அவரை மக்கள் அவ்வாறு அழைக்கத் தொடங்கினர்.
பத்மஸ்ரீ விருது:
இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி அமைப்பான நேஷனல் இன்னோவேஷன் ஃபவுண்டேஷன் (என்ஐஎஃப்) ஆதரவு பெற்ற அப்துல் காதர் நடக்கட்டினுக்கு 2015-ம் ஆண்டு ’வாழ்நாள் சாதனையாளர் விருது’ அன்றைய குடியரசுத் தலைவர் திரு.பிரணாப் முகர்ஜியால் வழங்கப்பட்டது. நாட்டின் ‘வெறுங்கால் விஞ்ஞானி’ என்றும் மக்களால் புகழப்படுபவர்.
கடந்த 15 ஆண்டுகளாக தனது புதிய கண்டுபிடிப்புகள் மூலம் விவசாயத்தில் மாற்றத்தை உருவாக்கி வரும் அப்துல் காதர் நடக்கட்டினை கெளரவிக்கும் விதமாக மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்துள்ளது.
ஆண்டு தோறும் மத்திய அரசு இலக்கியம் மற்றும் கல்வி, கலை, அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளக்குபவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்து வருகிறது. நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான இது குடியரசு தினத்திற்கு முன்பாக அறிவிக்கப்படுவது வழக்கம்.
2022ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 107 பேரில் தொடர்ந்து புதுமையான கண்டுபிடிக்களால் விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை வித்தைத்த காதர் நடக்கட்டினும் ஒருவர் ஆவார்.
ஏற்ற இறக்கங்களால் சோர்ந்துவிடாமல் முயற்சியை தொடர்ந்தால் இமாலய சாதனை நிச்சயம் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தி இருக்கிறார் அப்துல் காதர் நடக்கட்டின்.
தொகுப்பு: கனிமொழி